Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 ஏப்ரல், 2015

சர்ச்சைக்கு மறு பெயர் “சாக்ஷி மஹராஜ்” – முஹம்மது ஷாஃபி

சர்ச்சைக்கு மறு பெயர் “சாக்ஷி மஹராஜ்” எனும் அளவிற்கு சாதனை புரிந்து வருகிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமி சச்சிதானந்த ஹரி சாக்ஷி மஹராஜ். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்று ஏற்பாடு செய்தால், “சர்ச்சை புகழ்” விருதை சர்ச்சையின்றி தட்டிச் செல்பவர் இவராகத்தான் இருப்பார். காவி உடை தரித்து பாராளுமன்றம் செல்லும் சாக்ஷி, அரசியல்வியாதிகளுக்கே உரிய குற்றப் பின்னணியும் தாராளமாக வைத்துள்ளார்.

சுவாமிக்கு அடித்தது ஜாக்பாட்!
கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் உத்திர பிரதேச மாநில “உன்னோ” தொகுதியில் போட்டியிட்ட சாக்ஷி மஹாராஜ், சமாஜ்வாடி, பகுஜன் ஸமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 இலட்சம் வாக்குகளை பெற்று, மத சார்பற்ற வாக்குகளை சிதறச் செய்ததால், இலகுவாக வெற்றி பெற்றார். இதற்கு முன்னரும் மதுரா மற்றும் ஃபரூக்காபாத் தொகுதிகளிலிருந்து (1991,1996,1998) மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் தனிப் பெரும்பான்மை ஆட்சி வந்த பின்னர்தான் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.
குற்றப்பின்னணி
சுவாமிக்கு குற்றப்பின்னணி என்றால் எதுவாக இருக்கும்? பலாத்காரம் என்று உங்கள் மனதில் உடனே வந்தால் அது முற்றிலும் தவறு. அது மட்டும் அல்ல… என்பதே மிகச் சரி. வழிபாட்டுத்தல இடிப்பு, கொலை, ஊழல், கற்பழிப்பு என எல்லாவற்றிலுமே முத்திரை பதித்தவர் சாட்சாத் சாக்ஷி!
பாபரி பள்ளி இடிப்பு :
பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்-ன் தீவிர உறுப்பினரான சாக்ஷி, பாபரி பள்ளி இடிப்பில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர். 1992-ல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சாக்ஷி அப்போதைய உபி முதல்வர் கல்யான் சிங்கிற்கு மிக நெருக்கமானவராக இருந்தார். கல்யான் சிங்கும் வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஜூலை 14 ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாக்ஷி மஹாராஜ் மீது, “வெளியில் வர இயலா பிடியாணை”யை (Non Bailable Warrant) சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும் ஜூலை 22 ம் தேதி தலைமறைவாக இருக்கிறார் எனவும் அறிவித்தது. சிபிஐ நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக, எளிதாக ஜாமீன் பெற்றார் சாக்ஷி.

கல்லூரி முதல்வர் கொலை:
கடந்த 2013ஏப்ரல் 16 ம் தேதி, சுஜாதா வர்மா என்ற 47 வயது பெண்ணை கொலை செய்ததாக சாக்ஷி மீது வழக்கு பதிந்தது உபி மாநில காவல் துறை. முன்னால் பஞ்சாயத்து தலைவரும், கல்லூரி முதல்வருமான சுஜாதா வர்மா, சாக்ஷிக்கு நெருக்கமானவரும் கூட. சாக்ஷியின் ஆசிரமத்தில் சில காலங்கள் சீடராகவும் இருந்துள்ளார் சுஜாதா. ஆசிரமத்தின் சில நிலங்களை சுஜாதா வர்மாவிற்கு கொடுத்து பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக அதை திரும்ப பெற்றுக்கொண்டார் சாக்ஷி. இதனை தொடர்ந்து சாக்ஷி மீது வழக்கு தொடர்ந்த சுஜாதாவை, சாக்ஷியின் சகோதரர் ஆசிரமத்தின் வாயிலிலேயே சுட்டுக்கொன்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ‘அனில் யாதவ்’ தெரிவிக்கின்றார்.
“தன் தாய் அடிக்கடி மிரட்டப்பட்டதாகவும், இதன் முடிவாகவே இக்கொலை நடந்ததாகவும்”, சுஜாதா வர்மாவின் மகன் சஞ்சீவ் போலிசாரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் இவ்வழக்கை பதிவு செய்தது காவல் துறை.
ஊழல் :
கருத்து மோதல்களால், 1999களில் பாஜகவில் இருந்து சவால் விட்டு வெளியேறிய சாக்ஷி, முலாயம் சிங்கின் சமாஜ்வாடியில் இணைந்தார். பிற்படுத்தப்பட்ட லோத் மக்களிலிருந்து தன கட்சி சார்பாக ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக்க விரும்பிய முலாயம் சிங், சாக்ஷியை தேர்ந்தெடுத்தார். 2006 ம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் நிதியை (MPLADS) முறைகேடாக பயன்படுத்திய சாக்ஷி மகாராஜ் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என “பாராளுமன்ற நெறிமுறைகள் குழு” பரிந்துரைத்தது. இதனை மன்றம் அங்கீகரித்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்குப்பின் முலாயம் சிங்குடனான உறவு நீண்டகாலங்கள் நிலைக்கவில்லை. பின்னர், தனது முந்தைய கூட்டாளியான கல்யான் சிங்கின் “ராஷ்ட்ரிய கிராந்தி கட்சி”யில் இணைந்த சாக்ஷி, 2007 சட்டசபைத் தேர்தல் மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்களில் RKP சார்பாக போட்டியிட்டு (11 வது இடம் பெற்று) தோற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோல்விகள் துரத்தியதால், கர் வாபஸி ஆனார் சாக்ஷி (பாஜகவிற்கே திரும்பிவிட்டார்).
கற்பழிப்பு:
கடந்த 2000 வருடம் ஆகஸ்ட் மாதம், தன் நண்பருடன் ஆக்ராவிற்கு பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை, எம்பி யாக இருந்த சாக்ஷி தன் பாதுகாவலர்களை கொண்டு மறித்து, தனது ஆசிரமத்திற்கு தூக்கிச் சென்று, அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பை நிகழ்த்தினர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய பதிக்கப்பட்ட பெண், கோத்வானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சாக்ஷி மகாராஜ், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி ஒரே மாதத்தில் விடுவிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் 4 வருடங்கள் சாக்ஷியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர் என்பதும், அவர் திருமணம் செய்யப்போகிறேன் என சாக்ஷியிடம் கூறிய போது அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் கூடுதல் தகவல்கள்.
நிகழ்த்தி வரும் சாதனைகள்:
இத்தகைய பின்னணி கொண்ட உறுப்பினர், “மத ஒற்றுமைக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் தன்னால் இயன்ற அளவு பாடுபட்டு வருகிறார்” என்று நான் எழுதினால் நம்பவா போகிறீர்கள்?. ஆனால் அப்படி எழுத வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாமல், தன்  பாணியில் செவ்வனே சேவை ஆற்றி வருகிறார் சாக்ஷி.

கருத்துக்கள் வாயிலாக ஆற்றிய சேவைகள்:
  • மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர்-தியாகி. (இந்த கருத்திற்காக பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்)
  • இந்தியாவில் முஸ்லிம்கள் மிகைக்காதிருக்க, இந்துக்கள் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். (இந்த கருத்திற்காக கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது)
  • மதமாற்றத்திலும், பசுவதையிலும் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். எனினும் “கர் வாபசி” மத மாற்றம் ஆகாது.
  • அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதை உலகின் எந்த சக்தியும் தடுக்க முடியாது.
  • மதரசாக்கள் தீவிரவாதத்தின் உறைவிடமாக உள்ளது.
இவ்வாறு இவர் ஆற்றிய பொன்மொழி சேவைகள் தொடர்ந்து கொண்டே இருக்க, இவரின் வாய்களுக்கு பூட்டு போட கட்சிக்கோ, பிரதமருக்கோ திராணி இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. “பிரதமரின் மௌனமும், மென்மையான நடவடிக்கைகளுமே, இது போன்ற கருத்துக்களை சொல்வதற்கு ஊக்கம் அளிக்கிறது” என்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி.
இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் சிதைத்தும் வரும் சாக்ஷிக்கு, எதிரான உறுதியான நடவடிக்கையை எதிர்பார்த்த குடிமகனாக….
முஹம்மது ஷாஃபி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக