Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 ஜூன், 2015

சமத்துவத்திற்கெதிரான காட்டுமிராண்டித்தனம் – ஐஐடி

இந்தியா சுதந்திரமடைந்து தனி நாடு என்றளவில் வளர்ச்சி குறித்த பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் செயலாற்றியது . குறிப்பாக பல்வேறு பண்பாட்டுக்கூறுகளுடைய நாட்டில் சமத்துவமான கல்வி முறையையும் அதற்கான திட்டமிடலையும் வகுத்தளித்தவர் நம் தேசத்தின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் .
அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கல்வியில் பெரும் புரட்சி ஏற்படுத்தவும் , தேசத்தின் முக்கியத்துவம் கருதி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அத்தியாவசியம் கருதி தொடங்கப்பட்டவைதான் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகங்கள்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் முக்கியப் பெருநகரங்களில் இத்தகைய ஐஐடிக்கள் செயல்படுகின்றன. இதில் படிக்கின்ற மாணவர்கள் Stay Fund  எனப்படும் ஊக்கத்தொகை பெற்று படித்து வருகின்றனர் .
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை ஊக்கத்தொகையாக பெற்று படித்து வரும் இத்தகைய ஐஐடிக்களின் தரம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளின . உலகளாவிய அளவிலான தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகங்களின் பட்டியலில் தன் பெருமையை தக்கவைக்க ஒரு இடத்தைக்கூட பிடிக்காத நிலையிலேயே இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் பரிதாபம் குறித்த செய்திகளே அவை . மக்களின், தேசத்தின் வளர்ச்சி குறித்த எந்த பார்வையுமே இல்லாமலா இத்தகைய அரசு கல்வி நிறுவனங்கள்  இயங்குகின்றன …??? பின் என்னதான் அவர்களது வேளை…???
ஐஐடிக்களின் தரம் சந்தி சிரித்த சில நாட்களுக்கு பின்னே மற்றுமொரு பரபரப்பு தொற்றிக்கொண்டது . கிஸ் ஆஃப் லவ் எனும் முத்தப்போராட்டத்திற்கான ஏகோபித்த ஆதரவினை பெரும் நோக்கில் ஐஐடியில் பெரும் போராட்டங்கள் வெடித்ததன .
அவை தணிவதற்குள் மற்றொரு விடயம் சூடுபிடித்துள்ளது . சமூகம் , சமத்துவம் , வளர்ச்சி குறித்த அறிவு மழுங்கிக் கிடந்த மாணவர்களிடம் சமகால அரசியல் நடப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் (Ambethkar Periyar Study Circle) எனும் ஐஐடிக்குள் இயங்கும் மாணவர் கூட்டமைப்பு .

சமீபகாலமாகவே மக்கள் நலனுக்கு சாவுமணி அடிப்பதில் மிகத்தீவிரமாக இயங்கிவரும் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடை, நிலம்கையகப்படுத்துதல்,சமஸ்கிருத திணிப்பு பல்வேறு சர்வாதிகாரப்போக்கிற்கெதிரான கருத்தியலை ஐஐடி சென்னையில் தீவிரமாக கொண்டுசெல்ல திட்டமிட்டு பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள் , சுவரொட்டிகள் என எல்லாம் நடந்து முடிந்தாகிவிட்டது . இப்பொழுது என்ன பிரச்சினை என்கிறீர்களா …??
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் யாரோ முகவரி இல்லா போராளி மொட்டைக்கடிதாசியை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார் . மத்திய அரசு துடிப்புடன் ,திறமையுடன் அதிவேகமாக மொட்டைக்கடிதாசிக்கான விளக்கத்தையும் ,நடவடிக்கையையும் கேட்டு சமிக்ஞையை தொடங்கியது. ஆட்டம் கண்ட ஐஐடி நிர்வாகமோ அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடைவிதித்தது .இந்த தடை இந்தியா முழுக்க பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்கான வேலையை மோடியின் அரசு மிகத்தீவிரமாக கடைபிடித்து வருகிறது .சமத்துவத்தையும், சமூகநீதியை முன்னெடுத்த இரண்டு ஆளுமைகளின் கருத்தியலை மாணவர்களின் மத்தியில் பரப்புரை செய்தது பெரும் குற்றமா ..?? இல்லை ஐஐடி மாணவர்கள் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பறந்து போக வேண்டும் இங்குள்ள அரசியல் அவலங்களை தட்டிக் கேட்கக்கூடாதென்ற பிற்போக்குத்தனமா ..??? இந்தியா முழுக்க சமூக நீதியை முழங்கும் முற்போக்குக் கருத்துக்கள் நசுக்கப்படுவதும் , அரசுக்கு சாதகமான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுமான கருத்து எப்படி ஜனநாயக முறையில் சாத்தியம் ??
ஐஐடி யில் நடைபெறும் நிகழ்வுகளை சற்று உன்னிப்பாக உற்றுநோக்கினால் அதிலுள்ள ஒருசார்பு தன்மையை புரிந்து கொள்ள முடியும் . அங்கேயே விவேகானந்தர் வாசகம வட்டம் , இராமகிருஷ்ணர் வாசகர் வட்டம் என எத்தனையோ அமைப்புகள் உள்ளன. பகவத்கீதையை தேசிய நூலாக்க வேண்டுமென வலியுறுத்தி விவேகானந்தர் வாசகர் வட்டம் கருத்தியலை முன்னெடுத்தபோது எந்த நிர்வாகம் அதனை தடை செய்தது . மாணவர்களை இயங்கக்கூடாதென ஓரங்கட்டியது. ஆக எங்கெல்லாம் அம்பேத்கரையும் ,பெரியாரையும் தூக்கிக்கொண்டு சமத்துவம் பேச ஒடுக்கப்பட்ட சமூகங்கள் முனைகிறதோ, சமூக அவலங்களை ,சமகால அரசியலை அலசி விமர்ச்சிக்கிறதோ அங்கெல்லாம் அத்துமீறல்களை ,அடக்குமுறைகளை கடந்த/நிகழ்கால அரசுகள்
கட்டவிழ்த்துவிடுவதென்பது வாடிக்கையாகிவிட்டது .

மாணவர்கள் பேசிய விடயம் குறித்தும் சற்று அலச வேண்டியிருக்கிறது . மாணவர்கள் மாட்டுக்கறி தடை குறித்தும் , நில கையகபடுத்தும் மசோதா குறித்தும் ஆய்வு செய்து விவாதத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் .சாமானிய மக்களின் உணவான மாட்டுக்கறியை தடைசெய்து மனிதர்களின் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகளில் சர்வாதிகாரப்போக்கை கடைபிடிக்கும் அரசு இயந்திரம் குறித்தும்  , பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தினரை கொண்ட தேசத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளின் நிலங்களை பிடுங்கிக்கொள்ள துணைசெய்யும்   கொடூரமான சட்டங்கள் குறித்தும் ..சாமானிய மக்களின் வரிப்பணத்தில் ஊக்கத்தொகை பெற்று படித்து வரும் ஐஐடி மாணவன் விவாதத்தை முன்னெடுக்காமல் அமெரிக்க மாணவனா முன்னெடுக்க வேண்டும்.
அம்பேத்கர் ,பெரியார் வாசகர் வட்டத்தினை தடைசெய்ததின் பிண்ணனியில் மிகக் கீழ்த்தரமான அரசியல் பிண்ணனி இருக்கவே செய்கிறது .ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் பிரிவான ABVP செய்யாத சமூக விரோதத்தையா, வன்முறையையா இத்தகைய மாணவர் மன்றங்கள் நிகழ்த்தின . ஐஐடி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் நிர்வாகத்தினரால் , மாணவர் மன்றங்களினால்  ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கங்களில் பங்கேற்ற அருந்ததி ராய்,, டீஸ்டா செடல்வாட் போன்ற முற்போக்கு சமூக ஆர்வலர்களை தகராறு செய்தும்,வன்முறையை ஏவிவிட்டும், செருப்புகளை வீசியும் துவேஷத்தைக் காட்டியது இதே ஆர்எஸ்எஸ் இன் மாணவர் அமைப்பான ABVP . ஆனால் அதன் மீது இன்றுவரை என்ன நடவடிக்கை பாய்ந்திருக்கிறது ..???  கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் , விதிமுறைகள் எல்லாருக்கமானதுதானே .., சங்கப்பரிவார மாணவ அமைப்புகள் நிபந்தனைக்குட்பட்டது என்ற சிறப்பு நிபந்தனை ஏதும் உண்டா ???
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களில் இதேபோன்ற முரண்பாடுகளை காணமுடியும் . உதாரனத்திற்கு உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இராவணனை ஆதரித்து விழாக்களை நடத்த தடை, கட்டுப்பாடு ,மிரட்டல்கள்,அடக்குமுறைகள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இராமர் குறித்த  விழாக்கள் சங்கப்பரிவார மாணவர் அமைப்புகளால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது .  இந்தியாவின்  உன்னதமான கொள்கைக்கு எதிராக செயல்படும் ஆபத்தான சிந்தாந்தின் பக்கம் தலைசாய்க்கும் அரசு இயந்திரங்களின் நிலை கண்டித்தக்கது .
சென்னை ஐஐடி நிர்வாக்குழுவின் காட்டுமிராண்டித்தனமான இத்தகைய நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளது . ஆர்எஸ்எஸ் ன் அதிகாரப்பூர்வ பிரச்சாரக்காக செயல்படும் ஆடிட்டர் குருமூர்த்தி சொற்பொழிவின் பெயரில் இந்துத்துவ அஜெண்டாக்களின் கொள்கை விளக்க கருத்தரங்கிற்கு தளம் அமைத்துக்கொடுப்பதும் , கிரண் பேடி போன்றோரை அழைத்துவந்து மோடிக்கு வாக்கு சேகரித்த அவலமும் இதே ஐஐடியில் நடந்தேறியது . சத்தமில்லாமல் தேசவிரோத கும்பல்களுக்கு கருத்தியல் தளத்தினை திறந்துவிட்டு , சமூகநீதி பேசும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு மட்டும் தடை என்றால் இது ஜனநாயக விரோதப்போக்கலாமல் வேறென்ன இருக்க முடியும் .
கருத்தியல் தளத்தில் ஏற்படும் அடக்குறைகளுக்கு எதிராக தளம் காண்பதும். களம் காண்பதும் இன்றைய மாணவர்களின் அவசியமான ஒன்று .
சமத்துவம் நெரிக்கப்படுமெனில்
சமூக நீதி குலைக்கப்படுமெனில்
சட்டென களமாடுவதே சாலச் சிறந்தது ..!!!

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக