Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 7 ஜூன், 2015

ரமலான்- பேரித்தைகளும், பேராயுதங்களும் ..!!!

உலக மாந்தர்க்கெலாம் உன்னத மாதமாய் உடலும் உள்ளமும் தூய்மை பெற நம்மை நோக்கி ரமலான் வருவதற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ நடந்தேறிவிட்டன. முழு நிலவோ ரமலானை எதிர்பார்த்து தேய்ந்து கொண்டிருக்கிறது .
ஆயிரம் மாதங்களின் அந்தஸ்த்தை அள்ளித் தரும் இம்மாதத்திற்காய் உளப்பூர்வமாய் ஏங்கி நிற்பதும் , எப்படியேனும் இந்த ரமலானில் பாவங்களுக்கு பரிகாரம் தேடியே தீர வேண்டும் என்ற கங்கணம் கட்டிய மனதோடும் , ஏதோ ரமலானாமே என்ற அறியாமை இருளில் நோன்புக் கஞ்சிகளை  சுவைக்கத் துவங்குவதுமான மனித மனங்களும் ஏறத்தாழ எதிர்பார்த்து இருக்கின்றன . ரமலானை அணுகுவதின் வடிவங்கள்தான் எத்தனை வகை..????

நம் உயிரினும் மேலான தூதர் உயிர் வாழ ஆசைப்பட்ட ரமலானை எவ்வாறு அணுகுவது .?
நம்பிக்கையாளர்களே ..!  உங்கள் முன்னோர் மீது  கடமையாக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது . அதனைக் கொண்டு நீங்கள் உள்ளப் பரிசுத்தம் அடையளாம் .(2:183) என்பது அருள்மறையின் வாக்கு .
இங்கு உள்ளப்பரிசுத்தம் குறித்து சற்று விரிவாக அலச வேண்டியிருக்கிறது .  உண்ணுதல், பருகுதல்,  உறவு கொள்ளுதல் போன்ற உடல் பசிக்களை படைத்தவனுக்காய் தவிர்த்து படைத்தவன் விதித்துள்ள கட்டளைகளை பரிபூரணப்படுத்துவதின் மூலம் உள்ளம் பரிசுத்தம் அடையலாம் . மேலும் பொய்,, கெட்ட வார்த்தைகளால் ஏசுதல், வம்புக்கு செல்லாதிருத்தல் , புறம் போன்ற தீய பண்புகளில் இருந்து விலகுவதற்கான படைத்தவன்  கற்றுத்தந்த பயிற்சியை முழுமைப்படுத்தி தேர்ச்சி பெறுதல் . ஆக உடல்மொழிகளும், உள்ளம் தொடர்பானவற்றிலும் பரிசுத்தம் அடைவதற்கான அழகிய வழிமுறையை நோன்பு கற்றுத் தருகிறது .
குழந்தைகள் உட்பட நோன்பு நோற்ற அனேக நபர்களின் அனுபவங்களை உற்றுநோக்கினால் ஏறத்தாழ ஒற்றை பதிலே வரும் . “நோன்பு வைத்த மாதரியே இல்லை.., நோன்பு நேரங்களில் பசியே இல்லை…,, நோன்பில் எந்தக் கஷ்டமும் இல்லை,, வருடம் முழுதும் ரமலானாய் இருந்தால் என்ன..?  என்ற கேள்வி கூட சில நேரம் எழலாம் .
இவ்வளவு இலகுவான நோன்பிற்கு படைத்தவன் வழங்கும் கூலிதான் மெச்சும்படியாக உள்ளது .
மற்ற எல்லா அமல்களுக்கான கூலிகள் தகுந்தார்போல் வழங்கப்படும் .ஆனால் நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன் என இறைவன் அடியார்களுக்கு சுபச்செய்தி வழங்குகிறான் .

படைத்தவன் விதித்த கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பதென்பது எல்லாருக்கமான பொதுவிதி .
பத்ரு போரை சற்று கவனியுங்கள் . எல்லாருக்கமான பொது விதியோடு நோன்பை அணுகியவர்கள் அந்த உத்தமர்கள் . ஆனாலும் கூடுதலாக இன்னொரு அமலும் அவர்களுக்கென சிறப்பாய் வாய்க்கப்பட்டது . பசியோடு போரிட வேண்டும் , உள்ளங்களில் குடிகொள்ளத் துடிக்கும் பயத்தினை தூற எறிய வேண்டும் என்பதுமான மிகப்பெரிய சோதனைகள் அவை . 1000 நபர்களை எதிர்கொள்ள 70 குதிரைகளும் , 2 ஒட்டகங்களும் , உடைந்த வாட்களுமாக சோதனைகளின் சுமைகள்  கூடிக்கொண்டது உறுதியான ஈமான் கொண்ட தூதருக்கும் தோழர்களுக்கும் .

எல்லாருக்கமான பொது விதியின் அடிப்படையிலான நோன்பிற்கே பிரம்மாண்டமான கூலி உண்டெனில் அப்பொதுவிதிக்கு அப்பால் ஈடுசெய்ய முடியா அமலோடு அணுகப்படும் நோன்பின் தரம்  எத்தகைய சிறப்பு வாய்ந்தது . அச்சிறப்பை அல்லாஹ் எல்லாருக்கும் வழங்கிவிடுவதில்லை . அவன் தேர்ந்தெடுத்த மிகச் சிலருக்கே . அத்தகைய சிறப்புமிக்க அமலின்  (பத்ரின் )வெற்றி தானே இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல் .
ரமலானின் சொற்பொழிவுகளில் தவிர்க்க முடியா ஒன்றான பத்ரின் நிகழ்வுகளை சிலாகித்து கூறுகையில் “நமக்கெல்லாம் எங்கே அத்தகைய வாய்ப்பெல்லாம் கிடைக்கப்போகிறது ??” என்ற  சலிப்போடு கவலை கொண்டதுண்டு . அல்லாஹ் நாடினால் இதைப்போன்ற பொது விதியின் அமலோடு கூடுதலாகவோ அல்லது இன்னும் பல அசாதாரண சூழலையோ நோன்பு காலங்களில் ஏற்படுத்தி அத்தகைய வாய்ப்பை நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும் வழங்க இயலும் . அதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த நபர்களாக நாம் மாற முயற்சிப்பது மிகவும் அவசியம் .
ஃபலஸ்தீனை எடுத்துக் கொள்ளுங்கள் , உலகமே ரமலானை அரபு நாடுகளிலிருந்து இறக்குமதியான பேரீத்தம் பழங்களோடு வரவேற்றுக் கொண்டிருக்க ஃபலஸ்தீனோ  இஸ்ரேலின் இறக்குமதியான பேராயுதங்களின், ஏவுகனைகளின் , பீரங்கிகளின் , குண்டு மழைகளின் பேராபத்தோடு வரவேற்றுக் கொண்டிருக்கிறது . ரமலானின் பொது விதியோடு புனித பூமியை பாதுகாக்கும் பொறுப்பும் அம்மக்களுக்கு கூடுதலாக படைத்தவனால் அருளப்பட்டுவிட்டது . சோதிக்கப்படுபவர்களின் சொந்த வீடு சுவனம் என்பதில் உறுதியுடன் நிற்ப்பதால்தான் என்னவோ..ஃபலஸ்தீனர்களை சோதனை சுற்றி வளைத்துவிட்டது . கடந்த வருடம் இதே ரமலானில் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் செய்தது . ஃபலஸ்தீனர்களும் மிக வீரியமாக , நோன்போடு களம் கண்டு எதிரிகளுக்கு பெருத்த அடியையும் , நம்பிக்கையூட்டும் ஆரோக்கியமான முன்னேற்றத்தையும் கண்டனர் . ஃபலஸ்தீன ஹமாஸ் போராளிகள் பதுங்குகுழிகளில் பதுங்கியிருந்து பதிலடி கொடுத்தவர்களாக நோன்பை தொடர்ந்தனர் .
நமக்கெல்லாம் கடந்த ரமலானை பரிபூரணப்படுத்தி உலகளாவிய கொண்டாட்டமான பெருநாளை நெருங்குவதற்கு புத்தாடைகளுக்காய் ஏறி, இறங்காத கடைகளே இல்லை எனலாம் அவ்வளவு மெனக்கெடல் . ஃபலஸ்தீன் தான் சாதாரனங்களுக்கு பழக்கப்படாத பூமியாயிற்றே . புத்தாடைகளுக்கு ஏங்கிய பல பிஞ்சுகளின் கனவுகள் இரத்தம் தோய்த்த கஃபன் ஆடையில் ஈடேற்றம் அடைந்தது . கதறல்களோடு கலிமாவின் முழக்கமே மேலோங்கியது .
ரமலான் என்றதும் பல ஊர்களில் வண்ண விளக்குகளால் பள்ளிவாயில்கள் வெளிச்சம்பெறும் . இஸ்ரேலின் ஏவுகனைகளின் வெளிச்சம் ஃபலஸ்தீனம் முழுக்க ஆக்கிரமித்திருக்க வண்ண விளக்குகளுக்கு அங்கே என்ன வேலை..?
இந்த ரமலானின் வரவேற்பும் தொடங்கிவிட்டது .  கடந்த வாரம் இஸ்ரேல் இரண்டு ஏவுகணைகளால் தாக்குதல்களை தொடங்கிவிட்டது . ஈமானிய உறுதியை மெருகேற்ற , புனித பூமியை காக்கும் பொறுப்பை நிலைநாட்ட,  ரமலானின் பொது விதிக்கு கூடுதலாய் அமல்களை அள்ளிக் கொள்ள ஃபலஸ்தீனச் சொந்தங்களும் தயாராகிவிட்டனர். ரமலான் நெருங்கி விட்டன என்ற சமிக்ஞையை இப்பொழுதொல்லாம் பிறைகளை விட இஸ்ரேலின் ஏவுகணைகளே உலகுக்கு சொல்கின்றன . அப்பொழுதும் உலகம் வாய்மூடி, அமைதி காத்து , பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருப்பதாக சொல்கிறான் அத்தகைய முயற்சிகளின் வெளிப்பாடே இந்த மயான அமைதி என்கிற ரீதியில் தவமிருக்கும் போலிச் சாமியார்களாக திருப்தி கொள்கிறது .
அசாதரணமான சூழலை எதிர்கொண்டிருக்கும் அடுத்த நாடுகளான எகிப்து , பர்மா, சிரியா போன்ற நாடுகளில் ரமலானை எப்படி வரவேற்க இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி . எகிப்தில் அமெரிக்க அடிவருடிகளின் ஆட்சியில் குர்ஆனிய ஆட்சியை நிறுவ களம்கண்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர்கள் பலர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியவர்களாய், ஆயுள் சிறைவாசிகளாய் ,வீதிகளில் அடித்து நொறுக்கப்படுபவர்களாய் , இஸ்லாமிய விழுமியங்கள் நசுக்கப்படும் சூழலில் ரமலானில் உத்வேகம் பெற தயாராகிக் கொண்டிருக்கின்றனர் . சிரியாவிலோ பஷாரத் அல் ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியில் ரசாயன குண்டுகளின் பாதிப்புகளிலிருந்து மீள முடியாத சதைப்பிண்டங்களாய் , பலஹீனர்களாய் ரமலானை அணுக காத்திருக்கின்றனர் .பர்மாவிலே சொல்லி மாளாத கொடுமைகளுக்கு நடுவே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது . புத்த பயங்கரவாதிகளின் அட்டூழியங்களும் , கடத்தல்காரர்களின் துரோக நாடகங்களையும்  நம்பி கடலில் தத்தளிக்கப்பட்டவர்களாய் கைவிடப்படுகின்றனர் . நடுக்கடலில் மிதந்தவர்களாய் ஹெலிகாப்டர்கள் நோக்கி சாப்பாட்டிற்கு கையேந்தும் அவல நிலையோடு ரமலானை எதிர்நோக்க இருக்கின்றனர் . சோமாலியாவின் நிலைமையோ படுமோசம் .ஒருவேளை உணவிற்கு கூட வழியற்றவர்களாய் ஸஹரையும், இஃப்தாரையும் பசியோடு தொடர்ந்தவர்களாய் எங்கள் நோன்பு படைத்தவனிடம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி மனநிலையோடு ரமலானை நெருங்குகின்றனர் .
உலகத்தின் பார்வைக்கு ரமலான் என்றாலே ஸஹரும் , இஃப்தாருமே என்ற பொதுப்புத்தி ஆழமாய் ஊடுருவியிருக்க இப்படியான கண்டுக்கொள்ளப்படாத மனிதர்களின் ரமலானை நினைவுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயம் உலக முஸ்லிம்களுக்கு முன் உண்டு .
உலகின் பெரும்பகுதி ரமலானை பேரித்தை கனிகளோடு வரவேற்க காத்துள்ள நிலையில் அநீதியால் நசுக்கப்படும் மக்களோ பேராயுதங்களின்  தாக்குதல்களால் ரமலானை வரவேற்க உள்ளனர் . உலக சகோதரத்துவதற்கு சான்று பகரும் விதமாய் இஃப்தாரில் பேரித்தம் பழங்களை சுவைக்க தொடங்கும் முன் பீரங்களின் சப்தங்களால் அவதியுறும் சகோதரச் சொந்தங்களை நினைவில் நிறுத்தி அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனைகளோடு இஃப்தாரை திறப்போமாக …!!!
பேரித்தங்களினூடே பேருதவி கிட்டட்டும் ..!
பிரார்த்தனையினூடே பேராயுதங்கள் ஒழியட்டும் .!!

அஹ்மது யஹ்யா அய்யாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக