Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 ஜூன், 2015

மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்புவோம்! – வி. களத்தூர் ஃபாரூக்

மரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களும், விவாதங்களும் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நாடுகள் ரத்து செய்யாவிட்டாலும் மரண தண்டனையை நிறைவேற்ற யோசிக்கும் அளவில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த இரண்டு வழிகளிலும் இல்லை. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்தான் அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது.
“பெரும்பாலும் சமூகத்தின் பலவீனமான பிரிவினரான தலித்கள், மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமே 100% இந்த மரண தண்டனை வழங்கப்படுகிறது. கருணை மனுக்களை ஆய்வு செய்து பார்க்கும்போது பல்வேறு வழக்குகளில் சமூக, பொருளாதார பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்படி சொன்னவர் வேறு யாருமல்ல நமது முன்னாள் குடியரசு தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள்தான்.
குறிப்பாக ஏழைகளும், தலித்களும், சிறுபான்மை மக்களும் மரண தண்டனை எனும் கொடிய பயங்கரவாதத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுகிறார்கள். மரண தண்டனைகள் சட்டத்தின் படி வழங்கப்படாமல் சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் வழங்கப்படக்கூடிய அநீதி மன்றங்களாக நீதி மன்றங்கள் மாறி வருகின்றன.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை வழங்கப்பட்டு 14 வருடங்களுக்கு பிறகு இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரிதாபகரமான வகையில் நீதி தவறியது போன்ற தோற்றமளிப்பதாக இந்தியா டுடே கூறுகிறது.
இவ்வழக்கில் சிபிஐ அதிகாரியாக இருந்த தியாகராஜன் பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்ததாக இப்போது கூறியுள்ளார். அதேபோல ராஜீவ் கொலை சதி குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட “பல்நோக்கு ஒழுங்குமுறை விசாரணை காண்காணிப்பு குழு” இன்னமும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதுபோன்ற பல முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. ஆனால் அரசு இதற்கு பதில் சொல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவே முனைப்பு காட்டுகிறது.
“ஒரே குற்றத்திற்காக இரண்டு தண்டனை வழங்கக் கூடாது. தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர், அவர் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பே பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து விடுகிறார். இப்போது அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும்போது இரண்டு தண்டனையாக ஆகிவிடுகிறது” என்று நீதிபதி K.T. தாமஸ் கூறுகிறார். ஆனால் இந்த வழக்கை பொறுத்த வரையில் பல வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி வருகிறார்கள்.
2001 ல் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது மிகப் பெரிய மோசடியாகும். அந்தத் தாக்குதல் சம்பந்தமாக பலவிதமான சந்தேகங்களை பல சமூக ஆர்வலர்கள் எழுப்பி இருக்கிறார்கள். அந்தத் தாக்குதலை பயன்படுத்தித்தான் பாஜக அரசு பொடா என்னும் கருப்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதே நேரத்தில் சவப்பெட்டி ஊழல் வழக்கால் பாஜக அரசிற்கு இருந்த நெருக்கடியை இதன் மூலம் சமாளித்துவிட்டது அன்றைய பாஜக அரசு.
அஃப்சலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது சிறுபான்மை சமூகத்திற்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகின்றன என்பதற்கு சான்றாக இருக்கிறது. செல்வச் செழிப்பு, அடியாள் பலம், ஊழலிலே ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளை இதுவரை இந்த நீதிமன்றங்களின் மரண தண்டனை தீண்டுவதில்லை.
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மும்பை தாக்குதல் சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ஆனால் இதை சாக்காக வைத்து கடந்த காங்கிரஸ் அரசாங்கம் UAPA என்ற கருப்புச் சட்டத்தை கொண்டு வந்து மக்களுக்காக போராடி வருபவர்களை முடக்க நினைக்கிறது.
அஃப்ஸல் குருவுக்கும், அஜ்மல் கசாபிற்கும் அரசியல் காரணங்களுகாகவே மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை என்பதை இந்தியாவில் உயிரோட்டமாக வைத்திருப்பதே ஏழைகளையும், தலித்களையும், சிறுபான்மை மக்களையும் அச்சுறுத்துவதற்காகத்தான் என எண்ணத் தோன்றுகிறது.
இந்த இரண்டு தாக்குதல்களின் பின்னணி என்ன? இதோ முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மணி கூறுகிறார்: “தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள் கொண்டு வருவதற்காகவே மேற்கண்ட இரண்டு போலி தாக்குதல்களும் அப்போதைய அரசுகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டன.”
ஆக, தனக்கு ஏதாவது சாதகமாக நடக்க வேண்டுமானால் இதுபோன்ற போலி தாக்குதல்களை நடத்தி யாரேனும் அப்பாவிகளை சிக்க வைத்து விடுகிறது ஆளும் அரசாங்கம்.
1992 ம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலைக்கு காரணமாக விளங்கியவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
ஆனால் கலவரத்திற்கு எதிர்வினையாக மும்பையில் குண்டுவெடிப்புகளை வெடிக்கச் செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும், மரண தண்டனையும் வழங்கப்படுகிறது. இது எந்த விதத்தில் சமத்துவம் ஆகும்? நீதிமன்றங்கள் கூட பாரபட்சமாகவே நடந்து வருகின்றன. அதற்காக குண்டுவெடிப்புகளை நாம் ஆதரிக்கவில்லை. அதை கடுமையாக கண்டிக்கிறோம். ஆனால் முஸ்லிம்களை தண்டிக்கும் இந்த அரசும், நீதிமன்றங்களும் ஏன் பால்தாக்கரே வகையறாக்களை தண்டிக்கவில்லை.
இந்தியா முழுவதும் லட்சகணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு ஏன் இதுவரை மரண தண்டனை வழங்கப்படவில்லை. இந்த நாட்டையே சுரண்டிக்கொண்டு, லஞ்சம், ஊழலிலே ஊறித் திளைக்கும் எவருக்கும் இந்த நீதிமன்றங்கள் மரண தண்டனையை என்றும் விதித்ததில்லை.
1996 முதல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் 15 பேருக்கு தவறாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக 2013 ல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 14 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். இந்த அளவில்தான் நமது நீதித்துறையின் இலட்சணம் இருக்கிறது.
“2012 கணக்கெடுப்பின் படி 414 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். அவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளனர். சிறுபான்மை சமூகத்தார்களாக  உள்ளனர்” என்று IAS அதிகாரி ஹர்ஸ் மந்தர் கூறுகிறார்.
இந்திய நீதித்துறையில் ஏழைகளுக்கு எப்போதுமே இடம் இருந்ததில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தேறும். அவ்வளவுதான்.
“ஏழைகள், பலவீனமானவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், வெறுக்கப்பட்டவர்கள் ஆகியோர்தான் மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்” என்று ராம்சே கிளார்க் என்ற அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது நமது நாட்டில்!
மேல்தட்டு வர்க்கம், கீழ்த்தட்டு வர்க்கம் என்ற பாகுபாடு, ஏழைகளுக்கு மட்டுமே மரண தண்டனை என்பதெல்லாம் நமது நீதித்துறையில் சமத்துவமின்மையை காட்டுகிறது.
சக மனிதனுக்கு, ஒரு சமூகத்திற்கு எதிராகவே உருவாக்கி வைத்திருக்கும் இந்த மரண தண்டனைக்கு எதிராக போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. குற்றங்களை குறைக்க கடுமையான தண்டனை வேண்டும் என்று கூறுபவர்கள், அநீதியாக வழங்கப்படும் மரண தண்டனைக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.
மரண தண்டனையை ஒழிப்போம்!
மனித உயிர்களை மதிப்போம்!!
மனித நேயம் காப்போம்!!!
வி. களத்தூர் ஃபாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக