Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 15 ஜூன், 2015

“பெரும் பயணம்!” – சாளை பஷீர் ஆரிஃப்

பயணம் வழியாக வாழ்க்கையை அறிதல்; வாழ்க்கையையே ஒரு பயணமாக உணர்தல் என ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத கண்ணியின் தொடர் சுழற்சியை நிதானித்து கவனித்தால் ஒன்று புரியும். பயணம் என்கின்ற பெரிய சுழல் வளையம் சுருங்கி சுருங்கி இறுதியில் மறுமைப் பெருவெளியில் மூலப் புள்ளியில் போய் ஒடுங்கும் வரை முடிவடைவதே இல்லை என்ற பேருண்மை விளங்க வரும்.
இந்த சுழற்சியின் முடிவற்ற தன்மையை திரைப்படமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை பற்றி நான் அறிந்தது “புதிய பயணி“ (தொடர்பு எண்கள் : 7092033622, 044 – 24352050) என்கின்ற வண்ணமயமான படங்களுடன் வழ வழப்பான தாளில் வெளிவரும் பயண மாத இதழிலிருந்துதான். “LE GRAND VOYAGE” என்கின்ற ஃப்ரெஞ்ச் மொழிப்படம். இதன் பொருள் “பெரும் பயணம்”.



108 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இஸ்மாயீல் ஃபரூக்கியின் எழுத்து & இயக்கத்தில். வெளியான ஆண்டே இந்தப் படம் தொராந்தோ, வெனீஸ் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
படத்தின் கதை இதுதான்! 

தென் ஃபிரான்ஸில் மொராக்கிய முஸ்லிம் குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகின்றது. குடும்பத் தலைவர் (முஹம்மத் மஜ்த்) வயதானவர். அவருக்கு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

அந்த வருடம் அவர் ஹஜ் பயணத்தை தனது காரின் மூலம் நிறைவேற்ற தீர்மானிக்கின்றார். அவருக்கோ வண்டி ஒட்டத் தெரியாது. ஓட்டத் தெரிந்த மூத்த மகன் போதையில் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறியதால் அவரின் வண்டி உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளைய மகன் ரிதாவை கார் ஓட்ட அழைக்கின்றார் தந்தை. வேண்டா வெறுப்பாக ரிதா உடன் செல்கின்றான்.
வாழ்வின் மாலைப் பொழுதில் இருக்கும் தந்தைக்கும், கட்டிளம் பருவத்தின் பொங்கு நுரையாக இருக்கும் மகன் ரிதாவிற்கும் இடையேயான முரண்கள் ஒவ்வொன்றாக பயணத்தில் மேலெழுந்து வருகின்றது.



தந்தை இஸ்லாமிய நடைமுறைகளைப் பேணி வாழும் முஸ்லிம். மகன் ரிதாவோ முழுக்க முழுக்க மேலைப் பண்பாட்டில் தோய்ந்தவன். ஃபிரெஞ்ச் மொழியில் மட்டுமே உரையாடுவதை விரும்புபவன்.

பயணம் முழுக்க தந்தை அவனுடன் அரபி மொழியிலேயே பேசுகின்றார். ரிதாவோ ஃபிரெஞ்ச் மொழியிலேயே உரையாடுகின்றான். வாழ்வின் அழுத்தத்தின் காரணமாக உலகின் எந்த மூலையில் வசிக்க வேண்டி வந்தாலும் தன்னுடைய மத, மொழி, பண்பாட்டு வேர்களை ஒருவன் இழந்து விடக் கூடாது என்ற தந்தையின் உறுதிப்பாடு முதல் பாடமாக எழுகின்றது.

தொடர் பயணத்தில் தூங்கி ஓய்வெடுக்காமல் வண்டியை மிக வேகமாக செலுத்துகின்றான் ரிதா. ஓய்வெடுத்து மெதுவாக செலுத்தும்படி கூறும் தந்தை, “வேகமாக சென்ற அனைவருமே இறந்து விட்டார்கள்” என அறிவுறுத்துகின்றார்.

“மெதுவாக சென்றால் எப்போது போய் சேர்வது?” என பையன் கேட்கின்றான். தந்தையின் பேச்சை அவன் பொருட்படுத்தாமல் இருக்கவே அதி வேகத்தில் செல்லும் வண்டியின் பிரேக்கை அவர் சடாரென போடுகின்றார். நிலைகுலையும் வண்டியால் அதிர்ச்சியடையும் மகனிடம், “இங்கே நான்தான் தீர்மானிப்பவன்” எனக் கூறுகின்றார்.

வண்டியின் வேகத்தை மரணத்துடன் ஒப்பிட்டு ஆட்சேபிக்கும் தந்தை மகனுடனான உறவில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்துவதற்காக வண்டியை விபத்துக்குள்ளாக்கும் முறையில் நிறுத்தும் காட்சிகளின் வழியாக இரு முரண்களின் இயக்கத்தை காண முடிகின்றது. 


.
இந்தக் காட்சியின் சொற்களை எப்படி புரிந்து கொள்வது? தன்னுடைய அதிகாரத்தை மறு உறுதிப்படுத்திக்கொள்வது என்பதின் சிறு வடிவமா? அல்லது அதிரடி முடிவின் வழியாக மகனுக்கு புகட்டப்படும் போதனையா?

இத்தாலி, ஸ்லோவேனியா, குரேஷியா, ஸெர்பியா, பல்கேரியா, துருக்கி, சிரியா, ஜோர்தான் போன்ற நாடுகளின் வழியாக தந்தையும் மகனும் பயணிக்கின்றனர். வெவ்வேறு வகையான மொழி, பண்பாடு, கொட்டும் பனி, கொதிக்கும் பாலை போன்ற பல வகையான நிலப் பரப்புகளும் காலச் சூழ்நிலைகளும் மிக அழகான காட்சிகளாக மலர்கின்றன.

“எளிதான வான்வழிப் பயணத்தை விட்டுவிட்டு கடினமான இந்தக் கார் பயணத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்ற மகனின் கேள்விக்கு, “நானாவது காரில் வருகின்றேன். ஆனால் என் தந்தை – அதுதான் உன் பாட்டனார் ஹஜ் பயணத்தை கோவேறு கழுதையில் மேற்கொண்டார். கடலில் உள்ள உப்பு நீரானது மேகங்களினால் எப்படி தூய்மைப்படுத்தப்படுகின்றதோ அதே போல ஒரு ஹாஜி ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது பாவங்களிலிருந்து நீங்குகின்றார்” என்கின்றார்.

தந்தையின் நேரம் தவறா தொழுகையும் குர்ஆன் ஓதுதலும் திக்ரும் நடைபெற பயணம் தொடர்கின்றது. ஒரு இடத்தில் வழி தவறி விடுகின்றனர். அப்போது ஒரு பெண்ணிடம் வழி கேட்க அவரோ இவர்களின் வண்டியில் ஏறிக்கொள்கின்றார். எதுவும் பேச மறுக்கும் அவர் வண்டியை விட்டு இறங்கவும் மறுக்கிறார். பெருந்தன்மையுடன் குறிப்பிட்ட தொலைவு வரை அந்த பெண்ணை வண்டியில் அனுமதிப்பதோடு அவருக்கு உணவும் வாங்கிக் கொடுக்கின்றனர்.

மொழிப் பிரச்னை காரணமாக துருக்கி நாட்டின் சோதனைச் சாவடியை கடப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. அப்போது முஸ்தஃபா என்ற துருக்கியர் உதவி செய்கின்றார். அப்படியே அது நட்பாக விரிகின்றது. முதல் பார்வையிலேயே தனது நிறைந்த பட்டறிவின் வழியாக முஸ்தஃபாவை எடை போடும் தந்தை அந்த நட்பை விரும்பவில்லை.
துருக்கியை சுற்றிப் பார்க்க விரும்பும் மகனைப் பார்த்து, “நாம் நெடுந்தொலைவு போக வேண்டியுள்ளது. இடையில் சுற்றிப் பார்க்க நேரமில்லை” என மறுக்கின்றார் தந்தை.

மகன் ரிதாவிற்கு தன் வீட்டில் தேனீர் கொடுத்து விருந்தோம்ப அழைக்கின்றார் முஸ்தஃபா. தந்தையின் கட்டுப்பாடுகளில் இறுகிப் போயிருக்கும் ரிதா முஸ்தாஃபாவின் தோழமைக்கு தன்னை ஒப்புவிக்கின்றான்.
மதுக் குப்பியைக் காட்டி ரிதாவுக்குள் ஒளிந்திருக்கும் விருப்பங்களை மெல்ல திறந்து விடுகின்றார் முஸ்தஃபா. சிறிது தயங்கும் ரிதாவைப் பார்த்து, “சிறிய தண்ணீர் குவளையில் கொஞ்சம் மதுவை கலந்தால் குவளை முழுவதும் மதுவாகிவிடும். ஆனால் அதே அளவு மதுவை கடலில் கலந்தால் ஒன்றும் ஆகி விடப் போவதில்லை” என்ற சூஃபி ஞானியின் மேற்கோள் ஒன்றைக் கூறி அவனை மது அருந்த வைக்கின்றார்.

போதையில் மிதக்கும் ரிதாவை விடுதியில் விட்டு விட்டு செல்கின்றார் முஸ்தஃபா. மறுநாள் காலை கண் விழித்து பார்க்கும்போது “பணத்தைக்காணவில்லை” என தந்தை பதறுகின்றார்.

முஸ்தஃபாவின் மீது அய்யப் பார்வை விழ காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து செல்கின்றனர். விசாரணையில் முஸ்தஃபா தான் குற்றமற்றவன் என வாதிடுகின்றார். முஸ்தஃபா பணம் திருடியதை தான் நேரடியாக காணாதபோது குற்றச்சாட்டை மேற்கொண்டு வலியுறுத்த விரும்பவில்லை என ரிதாவின் தந்தை சொல்கின்றார்.

ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது தேவைப்படும் என்று கொஞ்சம் பணத்தை வேறொரு உறையில் தந்தை போட்டு வைத்திருந்தார். அதை வைத்து முட்டை, ரொட்டித் துண்டு என சிக்கனமாக சாப்பிடுகின்றனர்.

முட்டையும், ரொட்டியும் தனக்கு போதாது, இறைச்சிதான் வேண்டும் என மகன் அடம் பிடிக்கின்றான். அவனுக்காக ஒரு ஆட்டை வாங்கி அறுக்க முனையும்போது ஆட்டை சரியாக பிடிக்கத் தெரியாமல் ரிதா தப்ப விடுகின்றான்.

இடைவழியில் யாசிக்கும் ஒரு ஏழைக்கு தர்மம் வழங்குகின்றார் தந்தை. அவரின் சிக்கன நடவடிக்கைகளினாலும் இறைச்சி தின்ன முடியாத எரிச்சலிலும் இருந்த ரிதா அந்த ஏழையின் கையிலிருந்த தர்மப் பணத்தை பிடுங்குகின்றான். கோபத்தில் மகனை அறைந்து விடுகின்றார் தந்தை.
இனி தன்னால் வண்டி ஓட்டி வர முடியாது என ரிதா மறுத்து விடுகின்றான். ஒன்றாக பயணித்து வந்த இரண்டு உறவுகளுக்கிடையில் உரசி வந்த இரு முரண்களும் திடீரென வலுத்து பிரிவிற்கான புள்ளியில் வந்து நிற்கின்றது. தந்தை மகனுக்கிடையேயான வலி மிக்க ஆழ்ந்த மௌனமானது சுடும் பாலைமணலில் தீக்குழம்பு போல கொதித்து நிற்கின்றது.
ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய் சங்கடமிக்க அந்த மௌனத்தை கலைக்கின்றார் தந்தை. அடுத்த பெரிய ஊர் வரும் வரை காரை ஓட்டி வருமாறும் அங்கு அந்த வண்டியை விற்று கிடைக்கும் பணத்தில் ரிதாவை ஊருக்கு திரும்ப அனுப்பி வைத்து விட்டு தான் மட்டும் தன்னந்தனியாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கின்றார்.

தந்தையின் சொற்களில் தோய்ந்திருந்த முதிர்வும், கனிவும், உறுதியும், அமைதியும் தீக்குழியின் மீது கொட்டும் மழை நீர் போல ரிதாவின் பிடிவாதத்தை அவிழ்த்து விடுகின்றன. ஒற்றை கணத்தில் மொத்தமாக மலரும் காடு போல தந்தை மீதான பாசம் ரிதாவுக்குள் மீண்டு விடுகின்றது.

மீளத் தொடங்கும் பயணத்தில் தந்தை-மகன் உறவின் புதிய விரிசல்கள், ஒட்டுதல்கள், காணாமல் போன பணத்தினால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதம், ஹஜ் பயணத்தின் போது ஏற்படும் நிகழ்வுகள் எனப் படம் மலரின் இதழ் போல மெல்ல அவிழ்கின்றது. 

சூஃபி ஞானியின் நல்லதொரு மேற்கோளை தனது தவறான செயலுக்காக முஸ்தஃபா கையாளும் காட்சியின் வழியாக ஆன்மீக பரவச பட்டறிவின் உன்னத வெளிப்பாடுகளை மனிதர்களின் அற்ப சிந்தனை/வாழ்க்கைத் தரம் எப்படியெல்லாம் திரிக்க முடியும் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

கடலிலிருந்து உப்பு நீரானது மேகங்களினால் எப்படி தூய்மைப்படுத்தப்படுகின்றதோ அதே போல ஒரு ஹாஜி ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது பாவங்களிலிருந்து நீங்குகின்றார் என்ற முதிய தந்தையின் சொற்களை சூஃபி ஞானியின் மேற்கோளுடன் இணைத்து நோக்கும்போது எளிய வாசகனுக்கும் அவை புரியும்படியாக மாறுகின்றது. 

விலகி நிற்கும் மெய்மைகளை இணைத்துக் காட்டி நேரடி பாடம் நடத்தும் வேலையை செய்யாமல் வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடும் இயக்குனரின் உத்தி பாராட்டிற்குரியது.

இரண்டு மேற்கோள் கதைகளிலிருந்து உணர முடிந்தது இதுதான்:

குவளை என்பது மனித உடல். அதில் நிரப்பப்பட்ட நீர் என்பது மனித மனமாகிய ஆன்மா. இந்த நீர் குவளைக்குள் கலக்கப்படும் மது என்பது இச்சைகள், தவறான தூண்டுதல்கள், பாவங்களின் குறீயீடு.

மனித ஆன்மாக்களை பாவங்கள் எளிதில் கறைப்படுத்த இயலும். ஆனால் இறைவனின் விரிந்த மன்னிப்பு என்ற பெரு நீரில் அந்தப் பாவங்களை கொட்டும்போது பாவங்களின் தீய இயல்புகள் மனிதனில் மிகைக்க முடியாமல் வலிமை இழந்து விடும். அதன் பிறகு இறைவனின் எல்லையற்ற கருணை என்கின்ற வான் மேகத்தின் உறிஞ்சலில் மதுவின் சாரமாகிய பாவக் கசப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மனித ஆன்மாவானது மழை நீர் போன்று அதன் தொடக்க தூய்மையை பெறுகின்றது.

ஹஜ்ஜுக்காக பயணப்படும் முதியவர் முஹம்மத் மஜ்த் மக்காவை சென்றடையும் முன்னரே சக மனிதர்களுடனான தனது அற நடத்தைகளினால் இறைவனை முன்னோக்கிய தனது பாதையின் கதவுகளை திறந்து கொண்டே செல்கின்றார்.

பாவத்தை தொலைக்கும் முயற்சியான ஹஜ் பயணம் நிறைவேற முன்னரேயே அதற்கான விளைவுகள் முதியவர் முஹம்மத் மஜ்தின் உள்ளத்திலும் உடலிலும் சுனை நீர் போல சுரந்து கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குழந்தையாக தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றார்.

தன்னுடைய சொல்லிலும், செயலிலும், நோக்கத்திலும் ஓர் ஒத்திசைவை தொடர்ந்து பராமரித்து வரும் முதியவரின் வாழ்வு வந்தடையும் இடம் என்ன என்பதை இயக்குநர் படத்தின் கடைசி காட்சிகளில் அற்புதமாக சித்தரித்துள்ளார்.

தன்னுடைய பிள்ளைகளின் வளர்ப்பின் போது தான் செலுத்தத் தவறிய கவனத்தை ஹஜ்ஜின் போது உணரும் முதியவருக்கு இந்தப் பயணம் என்ன திரும்பக் கொடுத்தது?

ஆன்ம தேடல் நிறைந்த ஒரு பயணக் கதையின் பெரும் பாதைக்குள் அழகிய மரமொன்றின் சிறியதும் பெரியதுமான வளைந்ததும் நேரானததுமான பல்வேறு கிளைகளைப்போல புதிய புதிய பயணங்கள் முளைத்து முளைத்து சென்று கொண்டே இருக்கின்றன.

யூ டியூபில் ஆங்கில துணைத் தலைப்புகளுடன் காணக் கிடைக்கும் “LE GRAND VOYAGE” படத்தைப் பார்ப்பதின் வாயிலாக இந்தத் தேடலில் வாசகர்கள் இணைந்து கொள்ளலாம்.
சாளை பஷீர் ஆரிஃப்
நன்றி: kayalpatnam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக