Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 12 அக்டோபர், 2015

கற்பனையில் உறையும் இளைய இரத்தம்!

ஆதிக்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் போதெல்லாம் சிறு பொறியாய் எதிர்ப்புகள் கிளம்பாமல் இருந்ததில்லை. வீரத்திற்கு அடையாளமே எதிர்த்து போராடுதல்தான். வீரம் குறித்தும், போராட்டம் குறித்தும் நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கணிசமாக பெரும்பாலான நாடுகளுக்கு உண்டு.
போரில் பங்கெடுத்தல்தான் வீரம், போராட்டத்தை முன்னெடுத்தல்தான் வீரம், போராட்டத்தில் கலந்து கொள்ளல் வீரம், போராட்டத்தை ஆதரித்தல் வீரம் என்ற நிலைகளெல்லாம் சற்றே உயர மலையேறி முகநூலில் கருத்திடுவதுதான் வீரம் என ஆணித்தரமாக நம்பக்கூடிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாட்டில் நடந்தேறும் அநீதிகள், அரச பயங்கரவாதம், மதத் தீவிரவாதம், ஏற்றத்தாழ்வுகள் போன்றவை சமீப காலமாகவே வீரியம் பெற்றுள்ளதை பரவலாக காண முடிகிறது. இந்திய குடியரசுத் தலைவர் தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி வரை அரசியலமைப்பு சட்டத்தின் 25 வது பிரிவைப் பற்றி தலையில் குட்டாத குறையாய் ஆளும் மத்திய அரசுக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் விரோத கொள்கைகள் பல்கிப் பரவி வேர் விட்டிருப்பது ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அதனை எதிர்த்து களமாடும் போக்கு இளைய தலைமுறையினரிடம் மறைந்து வருவது வேதனை அளிக்கிறது. அறிவுக்கான வாயில்கள் இறுக மூடி வைக்கப்பட்ட  காலங்களில் கூட அநீதிக்கு எதிரான  சுதந்திர வேட்கை என்பது வீரியம் கொண்டதை இந்திய சுதந்திர போராட்ட வரலாறு நமக்கு நினைவூட்டும்.
இன்றோ உள்ளங்கையில் உலகம் எனும் தத்துவார்த்த தொழில்நுட்ப வளர்ச்சியில் களம் என்பதன் சொல்லாடலே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எவ்வளவு அக்கிரமமான நிகழ்வுகள் நடந்தபோதும் சமூக வலைத்தளங்களில் தனக்கேயுரிய நடையில் இரண்டு வரிகளில் நச்சென்று பதிந்து விடுவதோ, பெரிய செய்திகளை நகலெடுத்து சட்டென பதிவதோ, பிறரின் உணர்ச்சி செறிந்த கருத்துகளை பகிர்ந்து விடுவதோ போன்ற ஏதாவதொரு வகையினராக பெரும்பான்மை பதிவர்கள் இருந்து வருகின்றனர்.
இவை எல்லாவற்றையும் விட தங்களது புகைப்படங்களை அலங்காரங்களோடு வித்தியாசமான கோணங்களில் பட்டி டிங்கரிங் செய்து மார்க் வாங்கும் செல்லப் பிள்ளைகளை கொண்ட ஒரு கூட்டம் நோமோஃபோபியா எனும் செல்லியல் மனநோயாளியாக மாறுவதையும் இதே சமூகத்தில் வேதனையோடு பார்க்க முடிகிறது.
புரட்சிகளெல்லாம் ஓரளவு நின்றுபோய், இரண்டாம் உலகப் போருக்கு பின்பான போரின் வெறுப்பும் பெரும்பான்மை தேசங்களை ஆட்கொண்டிருந்தாலும் ஏகாதிபத்திய தேசங்கள் அதன் எச்சங்களை பிற நாடுகள் மீது திணிக்கவே செய்தன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரபு நாடுகளை ஆட்கொண்டிருந்த பொறுக்க முடியாத கோபம் ஆட்சியாளர்களை துவம்சம் செய்வதற்காய் காத்துக் கொண்டிருந்தது. நிகழ்கால புரட்சிகளான துனீஷியாவில்தான் அக்கோபம் கொப்பளித்து மக்களாட்சியை நிறுவியது. துனீஷியாவைத் தொடர்ந்த எகிப்திய புரட்சியை உலகமே கொண்டாடியது. சமூக வலைத்தளங்களின் நன்மைகள் குறித்த பெரிய குரல்கள் எகிப்திய புரட்சிக்குப் பின்னேதான் பரவலாக பேசப்பட்டது.
எகிப்திய சர்வாதிகார அரசின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகவே கோபம் கொண்ட ஓர் இளம் பெண் தஹ்ரீர் சதுக்கத்தில், “நான் இத்தனை மணிக்கு போராட செல்கிறேன். யார் வருகிறீர்கள்?” என்ற பாணியில் சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்தார். அவருடைய பதிவு காட்டுத் தீ போல பரவியது. அதனைத் தொடர்ந்து தஹ்ரீர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கூடினர்.  நவீன எகிப்திய புரட்சியின் பொறி இங்கேதான் சுடர் விட்டது.
முகநூல்வாசிகள் எகிப்திய புரட்சி சமூக வலைத்தளங்களால்தான் சாத்தியமாயிற்று எனப் பீற்றிக் கொண்டனர். ஒன்றை இங்கே நாம் கவனிக்க வேண்டும். எகிப்தில் நல்லாட்சி மலர போராடுவோமென வெறுமனே வெற்று முழக்கங்களை பதிவிட்டு ஒளிந்து கொள்ளவில்லை அந்த இளம் பெண். மாறாக, களம் கண்டு கொண்ட கொள்கையில் தஹ்ரீர் சதுக்கம் அதிர அநீதிக்கெதிராய் கர்ஜித்தாள்.
அந்த இளம் பெண் வெறுமனே தன் பங்கிற்கு ஒரு பதிவு போட்டுவிட்டு வீடு சென்று உறங்கியிருந்தால் எகிப்திய புரட்சி என்ற அழகிய அரபு வசந்தத்தைப் பற்றி நாம் கேள்வியே பட்டிருக்கமாட்டோம்.
உலகமே ஆச்சரியத்தோடு உற்று நோக்கும் பல்வேறு சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய தேசத்தில் நவீன கால அரசியல் நடப்புகள் ஆரோக்கியமானதாக இல்லை. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நாட்டின்  ஏதோவொரு மூலையில் அநீதிகளும், அராஜகங்களும், வெறுப்புப் பேச்சுக்களும் எளிமையான மக்கள் மீதும், பாட்டாளிகள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும், பெண்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அமைதியான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழல் திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறது.
எல்லா வளங்களும் பெற்று அறிவாயுதம் ஏந்தி வீரியமாக இத்தகைய பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இளைய தலைமுறைக்கு உண்டு.  இளைய தலைமுறை என்பதே அதற்கானதுதான். போராட்ட உணர்வை இளைய தலைமுறையினருக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது இளைய தலைமுறையினரோடு இரண்டறக் கலந்த ஒன்று. ஆனால் சமீபகால அரசியல் பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பதில் ஏன் இவ்வளவு தேக்கம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இன்றைய நவீன கால இளைய சமூகம் குறுகிய வட்டத்தினுள் சுற்றிக்கொள்ள அத்தனை ஆசை கொள்கிறது. சமூக பொறுப்பென்பது முகநூலிலும், வலைத்தளங்களிலும் வீரவசனம் பேசுவதல்ல. மாறாக, அநீதிக்கெதிரான வீரியமான குரலாய் களமாடுவதுதான் நமக்கிருக்கும் சமூகப் பொறுப்பு.
சமூக மாற்றத்தின் அங்கத்தினர்களாய் வேகத்துடனும், விவேகத்துடனும் வெற்றிகரமாய் களமாடிக் கொண்டிருந்த இளைய சமூகத்தை திசை திருப்பியது எது?
நுகர்வுக் கலாச்சாரமும், தரம் கெட்ட அரசியலும் செய்த சூழ்ச்சியின் விளைவால் ஒன்று தொழில்நுட்பத்தின் பெயரால் வெற்றுச் சவடால்களோடு உணர்ச்சிகளை வீணாக்கி கணினிக்கு முன் குத்துச்சண்டை விளையாடுகின்றனர். அல்லது மது எனும் நச்சுப் பொருளால் சமூகம் குறித்த சிந்தனையற்றவர்களாய் மயங்கி கிடக்கின்றனர். இரண்டுமே ஆபத்தானவை.
ஒன்று கோழையாக்கி விடும், இரண்டாவது மிருகமாக்கி விடும். இவையெல்லாம் ஏதோ போகிற போக்கில் நடந்தவை அல்ல. எல்லாவற்றிற்கும் பின்னால் சதியும், கேடுகெட்ட அரசியலும் ஒளிந்து கொண்டு காய் நகர்த்துகின்றன.
சமையலறை தொடங்கி படுக்கயறை வரை அரசியல் நுழைந்துவிட்டது. இன்னும் கழுத்திற்கு வருவதுதான் மிச்சம். இனியேனும் விழிப்புணர்வற்று கண்டும் காணாதது போல் உணர்ச்சிகளால் பொங்கி வழிந்தோமெனில் நாளை அடக்குமுறையின் கரங்கள் நம் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும். அப்பொழுது வேறொருவன் இதே பாணியில் பொங்கி வழிவான்.
இளைய சமூகமே… கற்பனையில் கரைந்ததும், கனாக்களில் ரத்தம் உறைந்ததும் இனியும் போதும். அறம் எனும் கோட்பாடு தரித்து, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி, அறிவாயுதம் ஏந்தி களங்களில் கரம் கோர்ப்பதே இன்றைய தேவை.
கயவர்களுக்கெதிராய்..,
கள்ள மௌனங்களுக்கெதிராய் ..
கறை படிந்த அரசியலுக்கெதிராய்..
களமாடினால் நீயும் என் தோழன் என ”சே”க்களாய் உருவெடு தலைமுறையே..!
அஹ்மது யஹ்யா அய்யாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக