Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 அக்டோபர், 2015

அரசியல் மீளாய்வு செய்ய வேண்டிய தருணத்தில் ம.ம.க

1990களின் காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் சூழல் மட்டுமின்றி, வழி நடத்த முறையான தலைமையின்றியும் தவித்துக் கொண்டிருந்தது முஸ்லிம் சமூகம். இந்தியா முழுவதும் காவல்துறையின் அடக்குமுறைகளும், அரச  பயங்கரவாதத்தின் கோர முகங்களும் முஸ்லிம்களை நோக்கி பாயாத நாட்களே என்று சொல்லலாம். இது தமிழகத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலப்பாளையம், கோவை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. 

1992ல் பாபரி மஸ்ஜித் ஆர்.எஸ்.எஸ். கயவர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையொட்டி நடந்த மும்பை, உத்திர பிரதேசம், பீஹார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற கலவரங்களால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்ச உணர்வு தொற்றிக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில்தான், 1995ம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க) என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. 
முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஒவ்வொரு இடங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டு,பல்வேறு சமூகப் நலப் பணிகளை முன்னெடுத்துச் சென்றது இந்த இயக்கம். இதனை நிறுவியவர்களில் குணங்குடி ஹனீபா, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, ரிபாய் போன்றவர்கள்  என்று கூறப்படுகிறது. ஆரம்பம் தொட்டே இந்த இயக்கம் வெகுஜன மக்கள் இயக்கமாகவே பார்க்கப்பட்டது. 
த.மு.மு.க. தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் தமிழகத்தில் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து கொண்டு போவதில் வெற்றிடமே நிரம்பி இருந்தது எனலாம். அந்தக் குறையை போக்கும் விதமாகவே அனைத்து மக்களாலும் த.மு.மு.க. பார்க்கப்பட்டது. கிளைகளும், உறுப்பினர்களின் எண்ணிக்கையும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. 
ஆம்புலன்ஸ் சேவை, இடஒதுக்கீடு போராட்டம், இரத்த தானம் செய்தல், பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் என்று தொடர்ந்து போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றது த.மு.மு.க. தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் என்று நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளில் மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். 
2006ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசூல் செய்த நிதியில் ஏற்பட்ட குளறுபடியால், அமைப்பில் முக்கிய பேச்சாளராக இருந்த பி.ஜைனுல் ஆபிதீன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தனியாக தொடங்கினார். இந்த அமைப்பை அரசியலில் ஈடுபடுத்த மாட்டோம் என்றே பி.ஜைனுல் ஆபிதீன் பிரச்சாரம் செய்து வந்தார். இதன்பிறகும் த.மு.மு.க.விற்கான வரவேற்பு குறையவில்லை. ஆனால், த.மு.மு.க.வும் அவர்களின் தலைவர்களும் மக்களை ஒரு கட்டமைப்புடன் உருவாக்க தவறியதன் விளைவு, இன்றளவும் அதனுடைய தாக்கம் கிளை முதல் மாநிலம் வரை எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கிடையில் இயக்கத்தில் இருந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள் தனித்தனி இயக்கமாக தொடங்கி செல்ல ஆரம்பித்தனர். அந்தக் காலக்கட்டத்தில் த.மு.மு.க. அரசியல் நிலைப்பாட்டில் திராவிட கட்சிகளையே ஆதரித்து வந்தது. 
த.மு.மு.க.நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்து, 2009ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியை சென்னை தாம்பரத்தில் வைத்து தொடங்கினர். தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் கட்சி என்று செயல்பட்டு வந்த முஸ்லிம் லீக் திராவிட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதையே பிரதானமாக கொண்டு செயல்பட்டு வந்தது. அவர்கள் கொடுக்கக்கூடிய ஒரு சில சீட்டுகளை பெற்றுக் கொண்டு முஸ்லிம்களின் பிரதிநிதியாக தங்களை காட்டிக் கொண்டது. 
இந்தத் தருணத்தில்தான் மனிதநேய கட்சி தொடங்கப்பட்டது. கட்சியை தொடங்கும் போதே பாரிய அரசியல் தெளிவில்லாத முழக்கத்தை முன்வைத்தது மனிதநேய மக்கள் கட்சி. அதாவது, தமிழகத்தின் அரசியல் சூழல் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்திக்கக்கூடிய சூழல்தான் இருந்து வருகின்றது. 
இதைப் புரிந்தும் ம.ம.க. தலைவர்கள் முன்வைத்த முழக்கம் என்னவென்றால், திராவிட கட்சிகளின் ஒரு சீட்டு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று சொல்லி, 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கொடுத்த ஒரு எம்.பி. சீட்டை நிராகரித்து தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 
இராமநாதபுரம், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, மத்திய சென்னை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட ம.ம.க. கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். கட்சியின் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்களான ஜவாஹிருல்லா,ஹைதர் அலி போன்றவர்களும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் ஓட்டுக்களை பெறவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் ம.ம.க. தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்தது. அதோடு, ம.ம.க. தலைவர்களின் அதீத நம்பிக்கையால் எந்த ஜமாத்துகளையும், முஸ்லிம் அமைப்புகளையும் தேர்தல் சமயத்தில் சரியான முறையில் அணுகவில்லை. இது, அனைத்து தரப்பு மக்களிடமும் ஜமாத்துகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்கால அரசியலை முன்னெடுக்காமல், தற்கால அரசியலை மட்டுமே மேற்கொண்டது ம.ம.க. 
அதோடு, த.மு.மு.க.வின் அரசியல் பிரிவாகவே ம.ம.க. செயல்பட்டு வந்தது. இன்றளவும் அந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்று, இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவைகள், சமூக இயக்கங்களாகவே ஆரம்பத்தில் இருந்ததும், கட்சியை ஆரம்பித்தவுடன் அதை தனியாக நடத்துவதையே வழிமுறையாக கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு,இன்று ஆட்சியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ்.அமைப்பால் தொடங்கப்பட்ட கட்சிதான். ஆனால், அதற்கென்று, தனியான  தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ம.ம.க. அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. த.மு.மு.க.வும், ம.ம.க.வும் ஒரே கூட்டமைப்பாக செயல்படுவதினால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி அப்பொழுது யாரும் புரிந்து கொள்ளவில்லை. 
த.மு.மு.க.வுக்கும், ம.ம.க.வுக்கும் ஒரே தலைவர்தான் என்று அறிவித்தனர். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி போன்றவர்கள் மூத்த தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். த.மு.மு.க.வின் கீழ் ம.ம.க. இருப்பதினால் கட்சியால் சுயமாக இயங்க முடியவில்லை என்பதை, கட்சியில் இருந்த இளம் தலைவர்கள் உணர்ந்து தங்களுடைய குரல்களை பதிவு செய்துள்ளனார். ஆனால், அது எடுபடவில்லை. அதில், முக்கியமானவர்தான் தமிமுன் அன்சாரி என்று கூறப்படுகிறது. 
ம.ம.க.வில் உள்ள  நிர்வாகக் குழப்பத்திற்கு சிறு உதாரணத்தை கூறினால் உங்களுக்கு நன்றாக புரியும். ம.ம.க.நடத்தக்கூடிய கூட்டத்தில் த.மு.மு.க.வின் தலைவர் நன்றியுரை வழங்குவார். த.மு.மு.க.வின் பத்திரிகையான மக்கள் உரிமையில் இரண்டு விதமாக அறிக்கைகள் வெளிவரும். ஒரு பக்கத்தில் த.மு.மு.க. தலைவர் ரிபாயீ கண்டனம் என்று இருக்கும், இன்னொரு பக்கத்தில் ம.ம.க. தலைவர் ரிபாயீ கண்டனம் என்று இருக்கும். இதுவெல்லாம், எப்படி சாத்தியமாகும் என்பதை தலைவர்களும், தொண்டர்களும் மீளாய்வு செய்யவில்லை. 
அதனுடைய வெளிப்பாடு, வரக்கூடிய 2016 சட்டமன்ற தேர்தலை வலுவான கட்டமைப்புடன் சந்திக்க வேண்டிய ம.ம.க. ஜவாஹிருல்லா ஒரு அணியாகவும், தமிமுன் அன்சாரி ஒரு அணியாகவும், அரசியல் அரங்கில் பலகீனமாக காட்சி தருகின்றது. கடந்த 2011ம் வருடம் அ.தி.மு.க. கூட்டணியில் மூன்றில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடித்த ம.ம.க.,அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தி.மு.க.வுடன் நெருக்கம் காட்டியது. ராஜ்யசபா தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. 
அதனுடைய எதிரொலி 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து,மயிலாடுதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டது. இந்த தேர்தலில் தி.மு.க.வும் படுதோல்வியடைந்தது. ம.ம.க. தரப்பில் கூறும்போது, தி.மு.க.வில் உள்ள கீழ்மட்டத் தொண்டர்கள் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றனர். 
அதன்பிறகு, தி.மு.க.வும் இல்லாமல், அ.தி.மு.க.வும் இல்லாமல் இருந்த ம.ம.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நெருக்கம் காட்டியது. அதனுடைய வெளிப்பாடு இந்த கட்சிகள் எல்லாம் இணைந்து மக்கள் நல கூட்டியக்கத்தை தொடங்கினர். பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது தேர்தல் கூட்டணியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தக் கூட்டணியில் இருந்து ம.ம.க.தன்னுடைய இருப்பை வெளியேற்றியது. அதன்பிறகே ம.ம.க.வில் விரிசல்கள் ஏற்பட தொடங்கிவிட்டது. ஒரு கட்சியில் இரு பொதுக்குழுவை அறிவிக்கக்கூடிய சூழல் உருவாகி, ஒரு வேளையாக தமிமுன் அன்சாரி நடத்த இருந்த பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது. 
அதோடு, முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிமுன் அன்சாரி தஞ்சாவூரில் பொதுக்குழுவை கூட்டி நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்று அறிவித்துள்ளார். இது, கூடுதல் அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகின்றது. ஜவாஹிருல்லாவும், தமிமுன் அன்சாரியும் ஒரே மாதிரியே கூறுகின்றனர். அதாவது, யாரும் கட்சியின் கொடிகள் மற்றும் பெயரை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று. 
ஜவாஹிருல்லாவுக்கோ கட்சியை த.மு.மு.க.வின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும், தமிமுன் அன்சாரிக்கோ கட்சியை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் முழக்கங்களை முன் வைக்கின்றனர். கீழ்மட்டத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு யாருடைய பக்கம் நியாயம் இருக்கின்றது என்ற குழப்பத்துடன் பயணித்து வருகின்றனர். இதனுடைய முடிவு எங்கிருக்கின்றது என்று நம்மால் அறிய முடியவில்லை. 
வரக்கூடிய காலங்களிலாவது கடந்த காலங்களில் செய்த தவறுகளை ம.ம.க.வின் தலைவர்கள் மீளாய்வு செய்து,எதிர்காலங்களில் நல்ல ஒரு அரசியல் கட்சியாக பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பõர்ப்பாகும். கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைய தலைமுறைக்கு வழிவிடவும், அவர்கள் வழி தவறி செல்லும் போது,அதை சரி செய்யும் அளவுக்கு மனப்பக்குவத்தையும் பெற வேண்டும். ம.ம.க.விடத்தில் அது இல்லாததும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.  ம.ம.க.வின் முழக்கமான “மண்டிய இருள் கிளிக்கும் மக்களின் எழுச்சி, மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சி”  என்ற முழக்கத்தோடு மீண்டும் அரசியலில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
– ஏர்வாடி சலீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக