Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 டிசம்பர், 2014

சிசுக் கொலைக்கு கள்ளிப்பால்! - முதியோர் கொலைக்கு பஞ்சுப்பால்!

தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படுவதைப் போல வயதான முதியவர்கள் பஞ்சுப்பால் ஊற்றி பலவந்தமாக கொல்லப்படும் போக்கு பலகாலமாக தமிழ்நாட்டில் நிலவிவருகிறது என்கிறார் 92 வயதான முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன்.

நீண்டநாட்கள் படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களுக்கு பஞ்சில் நனைத்தோ, பாலாடை மூலமாகவோ அல்லது தேக்கரண்டி கொண்டோ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பால் ஊற்றும் நடைமுறை வெளிப்பார்வைக்கு அன்பான மரபுவழிச் சடங்காக தெரிந்தாலும் அதன் அடிப்படை நோக்கம் அந்த வயதானவரை சீக்கிரம் மரணிக்கச் செய்வதே என்கிறார் கி ராஜநாராயணன்.
இப்படி ஊற்றப்படும் பால் அந்த முதியவருக்கு கபத்தை அதிகப்படுத்தி மூச்சுத்திணறி இறக்கச் செய்யும் அல்லது அவருடைய நுரையீரலுக்குள் சென்று அதன் விளைவாக அவரது மரணத்தை வேகப்படுத்தும் என்கிறார் கி ரா. அந்தப்பால் ஊற்றப்படுவதன் நோக்கமும் அதுவே என்கிறார் அவர்.
வெறும் பஞ்சுப்பால் மட்டுமல்ல, முதியவர்களின் உயிரை உடனடியாக பறிப்பதற்கு இன்றளவும் ஏராளமான நடைமுறைகள் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன. நாணயத்தை பானை ஓட்டில் தேய்ந்து ஊற்றுவது, தங்கத்தை பானை ஓட்டில் அல்லது கல்லில் தேய்த்து அதைக்கழுவி அந்த தண்ணீரை ஊற்றுவது, வீட்டு மண் அல்லது வயல் மண்ணை கரைத்து வாயில் ஊற்றுவது என்கிற பழக்கங்கள் எல்லாமே படுக்கையில் இருக்கும் முதியவரை வேகமாக இறக்கச் செய்வதற்கான செயல்களே என்கிறார் கி ராஜநாராயணன்.

தலைக்கூத்தல்: ஊரும் உறவும் கூடிச் செய்யும் முதியோர் கொலை

இப்படியான நடைமுறைகளில் தலைக்கூத்தல் என்கிற நடைமுறை இன்றும் பரவலாக தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. அது முன்பு குளிப்பாட்டி படுக்க வைத்தல் என்கிற பெயரில் கரிசல்காட்டுப் பகுதியில் கடைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் கி ராஜநாராயணன். அந்த நடைமுறைகளை நேரில் கண்டவர் அவர்.
அதன்படி, கரிசல்காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு முதியவர் படுத்த படுக்கையாக இருந்தால் அவரது வீட்டுக்கு அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் தத்தம் அளவில் பல குடங்களை சேகரிக்கத் துவங்குவார்கள். சுமார் நூறு குடங்கள் வரை இப்படி சேகரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த குடங்கள் அனைத்தும் இந்த முதியவர் வீட்டு முற்றத்திள் கொண்டுவந்து வைக்கப்பட்டு அந்த குடங்கள் அனைத்திலும் நீர் நிரப்பப்படும்.
அந்த குறிப்பிட்ட நாளில் அந்த முதியவர் அவர் படுத்திருக்கும் கட்டிலோடு வீட்டில் இருந்து வெளியில் முற்றத்திற்கு கொண்டுவரப்படுவார். அவர் தலைமுதல் பாதம்வரை உடல் முழுக்க அடர்த்தியாக விளக்கெண்ணெய் அழுத்தித் தடவப்படும். அடுத்து அந்த முதியவரை ஒருவர் அந்த கட்டிலில் உட்கார்ந்த நிலையில் பிடித்துக்கொள்ள கூடியிருக்கும் ஆட்கள் அந்த குடங்களில் இருக்கும் தண்ணீரை மளமளவென முதியவர் தலையில் கொட்டுவார்கள்.
ஒரு அருவி போல தொடர்ச்சியாக கொட்டப்படும் இந்த குளிர்ந்த தண்ணீரில் அந்த முதியவர் மூச்சுத்திணறி இறக்கும் சம்பவங்கள் நடக்கும். ஒருவேளை அதற்கும் தப்பிப் பிழைப்பவர்கள், விளக்கெண்ணெய் மற்றும் குளிர்நீர் குளியலால் வரும் ஜன்னிக் காய்ச்சலுக்கு பலியாவார்கள் என்கிறார் கி ராஜநாராயணன்.
இப்படியான மரணங்களை கலியாண சாவு என்று அழைப்பதுடன், இந்த மரணத்துக்காக யாரும் அழக்கூடாது என்று சொல்வதும், இறுதி ஊர்வலத்தை வெகு விமரிசையாக செய்வதும் கரிசல் காட்டில் வழமை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இந்த நடைமுறை ஏதோ தண்ணீரில்லாமல் காய்ந்த பூமியான கரிசல் காட்டில் மட்டுமல்ல, கடலைப்போல ஏரியைக்கொண்ட கடலூர் பகுதியில் இன்றுவரையிலும் கடைபிடிக்கப் படுவதாக சொல்கிறார் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ஜே ஆர் சிவராமகிருஷ்ணன்.
கடலூர் பகுதியில் இந்த நடைமுறை தலைக்கூத்தல் என்கிற பெயரில் நடப்பதாக கூறுகிறார் சிவராமகிருஷ்ணன். பொதுவாக நீண்டநாட்களாக படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள் அமாவாசையன்று இறந்துவிடுவார்கள் என்று கிராமங்களில் நம்பிக்கை நிலவுவதாக தெரிவிக்கும் சிவராமகிருஷ்ணன், அமாவாசையன்று இறக்காத முதியவர்களுக்கு அடுத்த சிலநாட்களில் இந்த தலைக்கூத்தல் சடங்கு நடத்தப்படும் என்கிறார்.
இப்படியான நடைமுறையை சம்பந்தப்பட்டவரின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊரும் உறவும் கூடிப்பேசி திட்டமிட்டே செய்வதாக சொல்கிறார் சிவராமகிருஷ்ணன். குறைந்தது 50 பேராவது கூடிப்பேசி முடிவெடுத்த பிறகு எல்லோரும் அந்த வீட்டில் குழுமி இந்த தலைக்கூத்தலை நடத்துவார்கள் என்கிறார் அவர்.
படுத்தபடுக்கையாக இருக்கும் முதியவரின் தலையிலும் உடலிலும் விளக்கெண்ணெயை நன்கு தடவி ஊறவைத்து பச்சைத் தண்ணீரில் குளிக்கச் செய்து, குளித்து முடித்ததும் இளநீரை அவருக்கு குடிக்கச் செய்வார்கள். இப்படிச் செய்தால் இரண்டு மணிகளில் அவருக்கு ஜன்னி வந்து இறந்துவிடுவார் என்று தெரிவிக்கும் சிவராமகிருஷ்ணன், இதில் இந்த எண்ணெய்க் குளியலை அந்த முதியவரின் மனைவி, அல்லது படுக்கையில் இருப்பது மூதாட்டியாக இருந்தால் அவரது கணவர் வீட்டுப் பெண்கள் நடத்துவது மரபு என்கிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுமே அந்த நோய்வாய்ப்பட்ட முதியவரின் உடலை விட்டு நீங்க மறுக்கும் அவரது ஆன்மாவுக்கான விடுதலை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறதே தவிர, அது ஒரு உயிர்க்கொலையாக பார்க்கப்படுவதில்லை என்று கூறும் சிவராமகிருஷ்ணன், இன்றளவும் இந்த நடைமுறை நீடிக்கவே
செய்கிறது என்கிறார்.

இவர் சொல்வது போன்ற இரண்டு சம்பவங்களை தன் சொந்த வாழ்வில் பார்த்ததாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரதிபா. இவரது தாய்வழிப்பாட்டிக்கு தலைக்கூத்தல் நடந்த பிறகே அவர் உயிர் பிரிந்தது. தந்தை வழிப்பாட்டியின் மரணத்தை எதிர்பார்த்து அவரது பிள்ளைகள் மற்றும் பேரன்கள் எல்லோரும் குடும்ப சகிதமாக கிராமத்துக்குப் போய் காத்திருந்த போதும் அவர் உயிர் பிரியாத நிலையில் அவரது உயிர் பிரியவேண்டும் என்பதற்காக பஞ்சுப்பால் ஊற்றியது முதல் இறப்புக்கான சிறப்பு பிரார்த்தனை வரை பலதும் செய்து, கடைசியில் கோவில் மண்ணை கரைத்து ஊற்றுவதற்காக அந்த குறிப்பிட்ட கோவில் மண்ணை எடுத்துவரப் போன பிறகு தான் அவரது மரணம் நடந்ததாக கூறினார் பிரதிபா.
பிரதிபாவின் பாட்டிகளுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. தமிழ்நாட்டின் பல பாட்டிகள் மற்றும் தாத்தாக்களுக்கும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. வெளியில் தெரியாமலே....
நன்றி:பிபிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக