Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வெறுப்பு அரசியலின் உறைவிடமே பாஜக!


இந்திய தேசம் உலக நாடுகளுக்கு முன் “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் பண்பாட்டில் தலை நிமிர்ந்து கம்பீரமாக காட்சியளித்தது. ஆனால் பாஜக ஆட்சிக் கட்டிலை ஆக்கிரமித்ததிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் உண்மை புலப்படுகிறது. அந்த உண்மை, வேதனையின் வெளிப்பாடாய், வெற்றுக் கைகளுடன் விரல் பிசைந்து, வேடிக்கை பார்க்கும் வீணர்களாய், இந்த மண்ணின் மைந்தர்களை இழுத்து சென்றுவிடாமல், எதிர்த்து போராடுவதன் எதார்த்தத்தை விளங்கும் சமூகம், காலத்தின் கட்டாயம்.
இந்தியாவின் இறையாண்மையும், பண்பாடும், பாரம்பரிய கலாச்சாரமும் கேள்விக் குறியாக்கப்படுவதற்கும், பிரிவினை கலாச்சாரத்தின் சூத்திரதாரிகளின் கையில் எம் தேசம் அகப்பட்டு அல்லல் படுவதற்கும், வெறுப்பு அரசியலின் இரத்தம் தோய்ந்த ஃபாசிச கரங்களின் கையில் அகப்பட்ட வேற்றுமையில் ஒற்றுமை சித்தாந்தம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை பெற்று தந்து கொண்டிருப்பதற்கும் காரணம் – “கருவறுப்புக் கொள்கை” எனும் ஃபாசிஸ வலையில் விழும் விட்டில் பூச்சிகளாய் நம் மக்கள் மாறியதன் வெளிப்பாடு.
இதுநாள் வரை இந்துத்துவா என்னும் அடிமைத்துவ கொள்கையை பரவலாக்க வழிமுறைகளை தேடி அலைந்த கும்பல், இன்று இக்கொள்கையை சட்ட ரீதியாக அமுலாக்கம் செய்வதற்கான அனைத்து வேலைகளையும், தெளிவான திட்டமிடலின் அடிப்படையில் முன்னெடுத்திருக்கிறது.
அதன் முன்னோட்டமாக பாஜகவின் அமைச்சர்களும், உயர்பதவியில் இருப்பவர்களும் கொடுக்கும் அறிக்கைகளும், பேசும் பேச்சுகளும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து, ஒன்றுபட்ட மக்களிடையே இரத்த களரியை ஏற்படுத்தி அந்த மாமிச நெடியில் உயிர் வாழும் உன்னத கனவை அகண்ட பாரத கனவாக கண்டு மகிழ்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆட்சிக் கட்டிலில் ஏறிய அடுத்த நாளில் இருந்து இன்று வரை வெற்று சுற்றுப் பயணங்களுடன் பிரபல பத்திரிகைகளின் அட்டைப்பட மாடலாக மட்டும் வலம் வரும் பிரதம மந்திரியின் அமைச்சரவை குற்ற பின்னணி கொண்ட அமைச்சர்களின் கேந்திர கூடமாக காட்சியளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது வாய்களில் இருந்து வரும் வார்த்தைகளும், அவர்கள் போடும் திட்டங்களும் எப்படி இருக்கும்? நாட்டை இடுகாடாய் மாற்றும் அதி நவீன திட்டங்களாகத்தான் அவை இருக்கும்.
நஜ்மா ஹெப்துல்லாவில் ஆரம்பித்து இன்று சுஷ்மா சுவராஜ் வரை நீடிக்கும் சர்ச்சை கருத்துகள் ஏதோ எதார்த்தமாய் உதிர்ந்தவை அல்ல. இந்துத்துவாவின் தெளிவான திட்டமிடல், வெறுப்பு கொள்கையின் வேர்களாய் இருக்கும் ஃபாசிச சித்தாந்தத்தின் கிளைகள்தான் இந்தக் கருத்துகள். பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதல் இன்று வரை தொடரும் அவலங்களை நடுநிலை தன்மையோடு அணுகுவோம்.
முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல
முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல; பார்சிகள்தான் சிறுபான்மையினர்; 2001ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கின்படி, இந்தியாவில் 138 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதாவது 13.4 விழுக்காடு. எனவே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உண்மையில், பார்சிகள்தான் சிறுபான்மையினர். ஏனென்றால், அவர்களது எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவர்கள் சமுதாயம் அழிந்து விடாமல் பாதுகாக்க அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. நாங்கள் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடஒதுக்கீடு வாக்குறுதி கொடுத்தது கிடையாது. காங்கிரஸ்தான் அவ்வாறு செய்தது.
- இவையெல்லாம் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் திருவாய் மலர்ந்தருளியது.
அனால் நீதிபதி சச்சார் ஆணையத்தின் அறிக்கையில் உள்ள ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு அதிக அளவில் முஸ்லிம் குழந்தைகள் கல்வியை இடையில் கைவிடுவது என்பதுதான்.
கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வருவதைவிடக் குறைவாகவே இருந்துள்ளது. 2008இல் சிறுபான்மையினருக்குப் படிப்புதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி 75 விழுக்காடு செலவினை மத்திய அரசும் 25 விழுக்காடு செலவினை மாநில அரசும் ஏற்க வேண்டும்.
இந்தத் திட்டம் தொடங்கியது முதல் குஜராத் மாநிலத்தில் எவர் ஒருவருக்கும் இந்தப் படிப்புதவித் தொகை வழங்கப்படவே இல்லை; மத்திய அரசு இதற்காக ஒதுக்கிய நிதி அனைத்தும் செலவிடப்படாமல் வீணாகப் போனது நினைவிருக்கலாம்.
இந்தியாவில் இஸ்லாமியர்களின் கல்வி நிலை
இந்தியச் சிறுபான்மை இனத்தவர்களாகிய முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் வெறும் 59.1 விழுக்காடு மட்டுமே. இந்திய முஸ்லிம் குழந்தைகளில் ஏறக்குறைய 35 விழுக்காட்டினர் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத நிலை இன்னமும் நீடிக்கின்றது. பள்ளியில் சேரும் முஸ்லிம் குழந்தைகள் 44 விழுக்காட்டினரே பள்ளிப் படிப்பை முடிக்கின்றார்கள். மீதி பேர் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.
கிராமப்புற முஸ்லிம்களுக்குள் பட்டப் படிப்பைப் பயின்றோர் எண்ணிக்கை 0.8 விழுக்காடு, நகர்ப்புறத்தில் 3.1 விழுக்காடு, மேற்பட்டப் படிப்பை முடித்தோர் எண்ணிக்கை 1.2 ஆகும். இந்திய அளவில் முஸ்லிம் பட்டதாரிகள் எண்ணிக்கை 3.6 விழுக்காடே ஆகும்.
பொருளாதார நிலையில் இந்திய கிராமப்புற முஸ்லிம்களுக்குள் 64.9 விழுக்காடு பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். 45 விழுக்காடு நகர்ப்புற முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்
கிராமங்களில் உள்ள விவசாயத்தை நம்பியே உணவு உற்பத்தி இருந்து வரும் சூழல், விவசாயத் துறையிலாவது விற்பன்னர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்களா என்றால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
இந்தியாவில் ஏறக்குறைய 2 கோடி விவசாயிகள் சொந்தமாக டிராக்டர்கள் வைத்துள்ளனர். அதில் சொந்த டிராக்டர் வைத்துள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 2.1 விழுக்காடேயாகும். இதிலும் முஸ்லிம்களின் நிலை பரிதாபமாகவே உள்ளது. மிகப் பெரும் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்குள் முஸ்லிம் நிறுவனங்கள் ஒரு கை விரலுக்கும் குறைந்த எண்ணிக்கை எனில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை எப்படி என்று உணரலாம்.
சமஸ்கிருத திணிப்பு
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSC) பாடத்திட்டத்தை பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆகஸ்ட் 7 முதல் 13 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. மாணவர்களுக்கு மத்தியில் பிளவை உண்டாக்கும் இழி செயலின் முதல் கட்ட நடவடிக்கைதான் சமஸ்கிருத திணிப்பு.
இச்செயலை ஒருவகையான மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனி கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிக்க முயல்வதை ஏற்க முடியாது.
சமஸ்கிருதம் என்பது இந்தியாவில் ஒரு சாராரின் மொழியாகவும், கலாச்சார அடையாளமாகவுமே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் பேர் மட்டுமே அம்மொழியை பேசுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. மொழிகளில் பாகுபாடு காட்டுவது மத்திய அரசின் இந்துத்துவா சித்தாந்ததின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.
முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்ய வேண்டும்
இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசினார்.
கடந்த 2007ம் ஆண்டில், கோரக்பூரில் இன வன்முறையை தூண்டி விட்டதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொண்டவர். தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றில் தனது ஆதரவாளர்கள் முன்பாக பேசுகையில், ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என வன்முறையை தூண்டிவிடும் நோக்கில் பேசியது வெளியானது.
பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது
நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் போன்ற பாஜக தலைவர்களை விமர்சித்தால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோவை மிரட்டும் தொனியில் பேசி சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தொடர்ந்து இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்து வருகிறார்.
ஒரு அரசியல் கட்சி தலைவருக்கே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடும் அளவிற்கு வளர்ந்திருக்கும் ஃபாசிசம் பெரியாரையும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதரசாகள் தீவிரவாதத்தை போதிப்பதாக விஷக் கருத்து
பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ் சிறுபான்மையினருக்கு எதிராக கண்டனத்திற்குரிய கருத்தை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ தொகுதி எம்.பி. சாக்ஷி மகாராஜ், மதரசா பள்ளிகள் தீவிரவாதத்தை போதிப்பதாக விஷம் கக்கும் கருத்தை தெரிவித்தார்.
மதரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்பட்டு வருகிறது. மதரசாக்களிலிருந்து தீவிரவாதிகளும், ஜிகாதிகளும் உருவாக்கப்படுகின்றனர். இது தேசத்திற்கு நல்லதல்ல. மதப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசியவாதம் பற்றி போதிக்கப்படுவதில்லை. குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தின் போதும் ஒரு மதரசா கூட மூவர்ணக் கொடியை ஏற்றுவதில்லை. தேசியவாதத்துடன் எந்த ஒற்றுமையும் இல்லாத மதரசாக்களுக்கு அரசு நிதியை வழங்கிக்கொண்டிருக்கிறது என சாக்ஷி மகாராஜ் எம்பி பகைமையை தூண்டும் கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதிக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கி நாட்டை மற்றொரு பாகிஸ்தானாக மாற்ற முயற்சி” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கூறுகையில், “சமூகத்தில் வேறுபாடுகளை உருவாக்கும் நோக்கத்தில் சாக்ஷி பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சான்று கூறும் விதத்தில் அவரது பேச்சு அமைந்துள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகளால் இப்புரளி கிளப்பிவிடப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இராமரின் மகன்களுக்கா  (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?”
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசும்போது. “ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
“நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்? இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?”
பிஜேபியில் அங்கம் வகிக்காத அனைவரும் முறைகேடாக பிறந்தவர்களாம். முற்றும் துறந்த ஒரு பெண் சாமியாரின் பேச்சைப் பார்த்தீர்களா?
பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற பகவத் கீதை தொடர்பான விழாவில் பேசிய விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை சுஷ்மா வெளியிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சுஷ்மா இப்போது தமது கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் அதற்கு செயல் வடிவம் கொடுக்கத் துடிக்கிறார்.
மதச்சார்பற்ற நாடு என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு இலக்கணமாகவும் திகழும் இந்தியாவில் ஒரு சாராரின் புனித நூலாக கருதப்படும் கீதையை அனைத்துத் தரப்பினர் மீதும் திணிப்பது சரியானதாக இருக்காது.
அனைத்துத் தரப்பினரின் பிரச்னைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு சொல்லப்பட்டிருப்பதால் தான் அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பகவத் கீதையில் பல நல்ல கருத்துக்கள் இருப்பதை மறுப்பதற்கல்ல. அதே கருத்துக்கள் திருகுர்ஆனிலும், பைபிளிலும் உள்ளன.
கீதை, திருக்குர்ஆன், பைபிள் ஆகிய மூன்றும் வெவ்வெறு மதங்களை பின்பற்றுபவர்களின் புனித நூலாக இருந்தாலும் அவை ஒரே மாதிரியான பாடங்களைத் தான் போதிக்கின்றன.
இந்த சூழலில் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது, இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமையும்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 6 மாதங்களில் போற்றத்தக்க வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மொழித் திணிப்பு மற்றும் கலாச்சாரத் திணிப்பு, வெறுப்பு அரசியல், பிரிவினைவாத திட்டமிடல் என அவலம் நிறைந்த அரசாங்கமாகவே மோடி அரசு திகழ்கிறது.
இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால் பி.ஜே.பி.யினர் தங்களின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த கோதாவுக்குள் குதித்துவிட்டனர் என்பது வெளிப்படை.
விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் விழிக்காமலேயே கதையை முடித்துவிடுவார்கள்.
வலசை ஃபைஸல்
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக