Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு – தேர்தல் மல்லுக்கட்டு!

ஜல்லிக்கட்டு – தேர்தல் மல்லுக்கட்டு!
தமிழகத்தில் சில மாதங்களாக ஜல்லிகட்டு நடத்துவதற்கு அனுமதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்களும், அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் ஓங்கி ஒலித்ததின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதேபோல அனைத்து கட்சி தலைவர்களும் மத்திய அரசிற்கு நன்றி சொல்லி வருகிறார்கள். இந்த மக்கள் போராட்டமும், கட்சிகளின் குரல்களும் இப்போதுதான் ஒலிக்கிறதா? 

கடந்த ஆண்டு கூட ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி மக்கள் போராடினார்கள், கட்சிகள் குரல் கொடுத்தன. ஏன் அப்போதே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்று அனுமதி வழங்கவில்லை. அங்கேதான் அரசியல் விளையாட்டு இருக்கிறது. கடந்த ஆண்டே அனுமதி அளித்திருக்கலாம். அப்போது ‘வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்று சொன்னவர்கள் தற்போதும் ‘நீதிமன்ற தடை உத்தரவு இருக்கும் நிலையில்’ அனுமதி வழங்குகிறார்கள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும்! கண்டிப்பாக காரணம் இருக்கிறது, அதோடு உள்நோக்கமும் இருக்கிறது. இன்னும் மூன்று மாதத்தில் வரக்கூடிய தமிழக சட்டமன்ற தேர்தல்தான் அது.
தமிழகம் பாஜகவின் நீண்டகால கனவு. இங்கே காலூன்றுவது அவ்வளவு சுலபமானது இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆரம்பத்தில் அதிமுக, திமுக, மதிமுக ஆதரவில் வளர முயன்றார்கள். அதில் சில வெற்றிகளை பெற்றார்கள். ஆனால் ‘சீ இந்த பலம் புளிக்கும்’ என்பதை புரிந்துகொண்ட அந்த கட்சிகள் பாஜகவை கழற்றி விட்டன. அதனால்தான் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை அரவணைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள். வரக்கூடிய தேர்தலுக்குள் தனது கட்சியை வலுப்படுத்திக்கொள்ள துடிக்கிறார்கள்.
அதில் ஒரு நடவடிக்கைதான் இந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி. இதை வைத்து பாஜகவை தமிழர்களின் பாதுகாவலனாக காட்ட முனைகிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டு – அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது. இதை அரசியலாக ஆக்கவேண்டாம் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ், திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. ஜல்லிக்கட்டு அனுமதி வழங்கியதற்கு மோடி தான் காரணம் என்றும், இந்த பொங்கலை மோடி பொங்கலாக கொண்டாட வேண்டும் என்றும் பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாஜக மட்டும்தான் ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள். ஆனால் உண்மை என்ன? ஜல்லிக்கட்டு தடை விதிக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கும்.
ஆம்! இன்று பாஜகவின் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி தான் தடைக்கு வித்திட்டவர். பல ஆண்டுகளாகவே விலங்குகள் நல ஆர்வலர்கள், விலங்குகள் நல வாரியம், PETA போன்றவைகள் “இந்திய விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960″ னை ஜல்லிக்கட்டு மீறுகிறது. அதனால் அதை தடை செய்ய வேண்டும் என்று கோரி வந்தார்கள். ஆனால் அப்போதெல்லாம் தடை செய்யப்படவில்லை. பாஜகவின் மேனகா காந்தி தான் 2008 ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போதுதான் முதன் முதலாக ஜல்லிக்கட்டுக்கு இடைகால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறை சட்டம் 2009″ கொண்டு வந்து ஜல்லிக்கட்டை ஒழுங்குபடுத்தி நடத்தி வந்தது. மீண்டும் விலங்குகள் நல வாரியம் நீதிமன்றத்தை நாடவே உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது. “20 லட்சம் வைப்பு நிதியாக வைக்க வேண்டும், ஒரு ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடத்த வேண்டும், மருத்துவ துறையினர் அருகிலேயே தயார் நிலையில் இருக்க வேண்டும், ஐந்து பேருக்குமேல் காளையை அடக்க கூடாது” என்று சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதை தமிழக அரசு நடைமுறை படுத்தி வந்தது. அந்த நடைமுறைகள் ஓரளவிற்கு பின்பற்றப்பட்டதால் அதனால் உயிர் இழப்புகள் முன்பை விட குறைந்தது. பிறகு 2011 ல் “வன விலங்குகள் கூண்டில் வைத்தோ, பொது இடத்தில வைத்தோ வித்தை காட்ட கூடாது” என உள்ள பழைய சட்டத்தில் ‘காளையையும்’ சேர்த்தது அப்போதைய மத்திய அரசு.
அப்போதும் ஜல்லிக்கட்டு ஒரு சில நிபந்தனைகளுடன் நடந்துதான் வந்தது. மீண்டும் 2012 ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது விலங்குகள் நல வாரியம் அப்போது “காளை மாடுகளையும், விளையாட்டு வீரர்களையும் பதிவு செய்ய வேண்டும், காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ சான்று அளிக்க வேண்டும்” என பல நிபந்தனைகளை விதித்தது. அதன்பிறகும் ஜல்லிக்கட்டு நடந்தன. இறுதியாக இந்த நிபந்தனைகள் எல்லாம் சரிவர பின்பற்ற வில்லை என்று உச்ச நீதிமன்றம் போனபோதுதான் 2014 மே 7 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இந்த தடை வரை விலங்குகள் நல வாரியதிற்கு பின்புலமாக இருந்து எல்லா வேலையும் செய்தது பாஜகவின் மத்திய அமைச்சர் மேனகா காந்திதான்.
2014 மே அன்று முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை உள்ளது. அப்போதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசும் ஆட்சிக்கு வந்தது. இப்போது இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. இதுவரைக்கும் காட்சி படுத்தக்கூடாத பட்டியலிலிருந்து காளையை நீக்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றும் வழக்கை முடிக்கும் முயற்சியையும் செய்யவில்லை. இரண்டு வருடங்கள் சும்மா இருந்துவிட்டு இப்போது திடீர் என்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்திருப்பது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்வைத்துதான் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

- வி.களத்தூர் சனா பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக