பெரம்பலூர் திருநகரில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள் மாரியப்பன், பழனி, செல்வக்குமார் மனைவி கற்பகம், மரியன் மனைவி அன்பு உள்ளிட்ட 8 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இதில், ரொக்கம், நகை, டி.வி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரண உதவி: தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும், பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினருக்கும் தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5,000 நிவாரண உதவித்தொகை, 20 கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகிய நிவாரணப் பொருள்களை வழங்கினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ரேஷன் பொருள்களை பெறுவதற்காக குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அருகேயுள்ள சமுதாயக் கூடத்தில் தங்கவும், உணவு வழங்கவும் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் (பொ) சீனிவாசன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக