இங்கு எல்லாவகையான மீன்களும் கிடைக்கும். மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பார்கள். மீன் சாப்பிடாதவர்கள்கூட இங்கு வந்து மீன் சாப்பிடக் கற்றுக்கொண்டார்கள், மீன் விற்பனையாளர்களில் அதிகமாக மலையாளிகள்தான் இருப்பார்கள். இவர்களிடம் சென்றால்தான் நமக்கு பெயர் தெரியாத மீன்களையும் கேட்டு வாங்கலாம் என்று இந்தியர்கள் எல்லோரும் இங்குதான் கூட்டம் கூட்டமாக செல்வார்கள்.
முதலில் உள்ள மூன்று வரிசைகளில் மலையாளிகள் தான் இருப்பார்கள். மலையாளிகள் மிகவும் அதிகமாக விரும்பி சாப்பிடும் மீன் 'மத்தி' மீன், 'ஐலா' மீன் இது இரண்டுதான், அவர்கள் இந்த இரண்டுவகையான மீன்களை அதிகம் விருப்புவதற்கு காரணம், மீனில் உள்ள "சுவை" என்று சொல்லிவிட முடியாது, விலைக் குறைவான மீன்கள் என்றால் இந்த இரண்டு வகைகள்தான். அதனாலும்தான் இந்த மீன்கள் மீது இவ்ளோ விருப்பம்.
இதன் விலை காலையில் கிலோவுக்கு 5 திராம்ஸ், அல்லது 10 திராம்ஸ், ஒரு மன் (நாலுகிலோவுக்கு) 20 திராம்ஸ்தான், கடை அடைக்கும் நேரத்தில் போனால் இரண்டு கிலோவுக்கு 5 திராம்ஸ் கொடுத்தால் போதும்.
இங்கு மீதமுள்ள மீன் விற்பனையாளர்கள் யார் என்று பார்த்தால் பாகிஸ்தானிகள்தான். ஒன்று இரண்டு சதவீதம் பங்காளாதேஷ்காரர்கள். இன்னும் ஓரிரு சதவீதம் வேறு நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
மீனைக் "கிளீன்" செய்து கொடுக்க கிலோவுக்கு 1:50 திராம்ஸ்தான், தலை இருக்கணுமா? அல்லது வேண்டாமா? என்று கேட்பார்கள் நமக்கு எப்படி வேண்டுமோ! அப்படி சொன்னால் போதும், சிரியவகை மீன்களை சுத்தம் செய்யும்போது தலை கிடைக்காது என்று சொல்லிவிடுவார்கள்.
இந்த மீன்கள் ஓமன் மற்றும் துபாய் கடல்ப் பகுதிகளில் அதிகம் கிடைப்பதாக ஒரு மீன் வியாபாரி சொன்னார்.
காலையில் 4 மணிக்கு தொடங்கி 11 மணிவரை விற்பனை நடக்கும், 11:30 க்கு பிறகு சுத்தம் செய்வார்கள் மருந்து அடித்து மேலும் தூய்மை படுத்திவிடுவார்கள். மதியம் அங்கு சென்று பார்த்தால் அந்த இடம் மிகவும் சுத்தமாக இருக்கும்.
மீன் மார்கெட் என்பதால் மீன்கள் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. பழங்கள், பச்சைக் காய்கறிகள் , அரிசி , ஆட்டுக்கறி , மாட்டுக்கறி, கருவாடு, இளநீர், பேரீச்சம்பழம் என எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்கும்.
இங்கு வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகவும், மீன்களை கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துவதற்காகவும், மிகப்பெரிய அளவில் 'பாக்கிங்' வசதிகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு கட்டணம் செலுத்தவேண்டும். விடுமுறை நாட்களிலும்கூட இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும். இந்த 'பார்கிங்கிற்கு' விடுமுறை கிடையாது. ஒரு மணி நேரத்திற்கு இரண்டு திராம்ஸ் என கொடுக்கவேண்டும்.
அதிக மீன்களை வாங்குபவர்களுக்கும், மீனை கையால் தொடுவதற்கு அச்சப்படுபவர்களுக்கும் பிரச்சினை இல்லாமல் இருக்க இங்கு கூலி ஆள்களும் கிடைக்கும்.
உதவி செய்வதற்காக தயார் நிலையில் இருக்கும் கூலி ஆட்கள். சில நேரங்களில் நாம் கூப்பிடாமலேயே நமது கையில் இருக்கும் மீன்களை வாங்கி அவர்கள் வண்டியில் வைத்துக்கொள்வார்கள்.
மீன்கள் மட்டும் இல்லை, கடலில் வாழும் அனைத்தும் இங்கு கிடைக்கும், தனித்தனியாக பிரித்து வைத்திருப்பார்கள்.
கீரை வகைகளும், காய்கறிகளும் "பிரெஷா" கிடைக்கும். இதை வாங்கலாமா? அதை வாங்கலாமா? என்ற ஆசைகள் வரும்.
மீன்களை 'கிளீன்' செய்யும் இடம், இது பழைய நிலை, இப்போது உக்காரவேண்டிய அவசியம் இல்லை, நிக்கிற நிலையிலேயே செய்யலாம்.
விற்பனை முடிந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்தபிறகு யாராவது ஒரு சிலர் நிழலுக்காக இங்கு பேசிக்கொண்டிருப்பார்கள்.
தர்ப்பூசணிப் பழம், மற்றும் காய்கறிகள், இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
கருவாடு, மிகவும் சுத்தமாக இருக்கும், மொத்தமாகவும் சில்லைரையாகவும் இங்கு கிடைக்கும்.
இளநீர் ஓமன் நாட்டில் இருந்து வருவதுதான், சில சமயம் ஸ்ரீ லங்கா , மற்றும் இந்தியாவில் இருந்தும் வருவதாக சொல்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக