2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கான தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண விவரங்களில், ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ள விவரம் தெரிய வருகிறது.
தமிழக மின் வாரியத்தின் சார்பில் கடந்த 2012ம் ஆண்டில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2013-14ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த நிலையில், மின் கட்டணமும், மானியமும் மாற்றப்படவில்லை. இதற்கிடையில் தற்போது அனைத்து தேர்தலும் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த நிதியாண்டில் தமிழக மின்வாரிய மொத்த வருவாய்த் தேவை 39,818 கோடி ரூபாய், மின் கட்டணம் அல்லாத பிற வருவாய் 726 கோடி ரூபாய். நிகர வருவாய்த் தேவை 39,092 கோடி ரூபாய். தற்போதுள்ள மின் கட்டணம் மற்றும் அரசு மானியம் சேர்த்து 32,238 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதனால் 6,854 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
தற்போது புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில் ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் கிடைக்கும். ஆண்டுக்கு 49 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று மின் வாரிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த கட்டண விகிதத்தைப் பொறுத்தவரை, வீட்டு உபயோகதாரர்கள் (இரண்டு மாதங்களுக்கு) 100 யூனிட் வரை 40 காசுகள், 200 யூனிட் வரை 45 காசுகள், 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் வரை 50 காசுகள், மீதமுள்ள 300 யூனிட்களுக்கு 60 காசுகள், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, 500 யூனிட்களுக்கு மேல் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 85 காசுகள் உயர்த்தப்படுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு ரூபாய், பொது வழிபாட்டுத் தலங்கள் 75 காசுகள், குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை 50 காசுகள், அதற்கு மேல் 60 காசுகள், விசைத்தறிகள் இரண்டு மாதத்துக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், 500 யூனிட்டுக்கு மேலானோருக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், அதற்கு மேல் 75 காசுகள், வணிக (கடைகள்) இணைப்புதாரருக்கு 100 யூனிட் வரை 65 காசுகள், அதற்கு மேல் ஒரு ரூபாய் ஐந்து காசுகள் உயர்த்தப்பட உள்ளது.
தற்காலிக மின் இணைப்பு மற்றும் ஆடம்பரச் செலவு இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்த்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 75 காசுகள் உயர்த்தப்படுகின்றன.
உயர் அழுத்தக் கட்டண விகிதத்தில், தொழிற்சாலைகள், ரயில்வே, தனியார் கல்வி நிறுவன இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 72 காசுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ரூபாய் 72 காசுகள், வணிகத்துக்கு ஒரு ரூபாய் ஐந்து காசுகள், தற்காலிக வினியோகத்துக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் மற்றும் விவசாய பம்புசெட்களுக்கு மூன்று ரூபாய் 72 காசுகள் உயர்த்தப்படுகின்றன. இதில் விவசாய பம்புசெட்களுக்கான கட்டணம் முழுமையும் அரசே மானியமாக செலுத்தும்.
இந்த மனு குறித்து அனைத்து விதமான நுகர்வோரும் தங்கள் கருத்துக்களை கடிதங்கள், மனுக்கள் மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வரும் அக்டோபர் 23க்கு முன்பாக தெரிவிக்கலாம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக