[ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு இன்றைய சூழலில் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், அவற்றை எதிர் கொள்ளல் ஆகியவை குறித்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை இன்று (03-09-2014) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். என்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு நான் அனுப்பியிருந்த எதிர்வினைகள்]
இதை வெறும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதாக மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இதுவரைக்கும் இல்லாத அளவு வாக்குப் பதிவு, அதிக அளவு இளைஞர்கள் பங்கேற்பு ஆகியவற்றுடன் இந்த வெற்றியை பா.ஜ.க ஈட்டியுள்ளது. மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்தி பெல்டில் மட்டும் உள்ள கட்சி என்கிற பெயரைத் தாண்டி ஒரு அனைத்திந்தியக் கட்சி என்கிற நிலையை இன்று அது எடுத்துள்ளது. தெற்கின் கடைக்கோடியில் இன்னும் அதனால் முழுமையாக ஊடுருவ இயலாத போதும் கிழக்கில் முதன் முதலாக அது விரிவாகக் கால் பதித்துள்ளது.
பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் மத வாதம் முதலான குறுகிய அரசியல் வளர்ந்து வருகிறது என்பதை இது காட்டுகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ளை இடது சாரி மற்றும் முற்போக்குச் சிந்தனைகளின் வீழ்ச்சியின் ஊடாக ஏற்பட்ட வெற்றிடத்தை இத்தகைய பிற்போக்குக் கருத்துகள் நிரப்புகின்றன.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் பா.ஜ.க வெற்றிபெறாததை நாம் இந்தப் பொதுப்போக்கிலிருந்து ஏற்பட்டுள்ள விலகலாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி கொள்ள இயலாது. பா.ஜ.கவின் இடத்தை இங்கு அதிமுக நிரப்பியுள்ளது. திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கங்களும் இங்கு ஏற்படுத்தி இருந்த முற்போக்கான சிந்தனைகள் கடந்த 20 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்துள்ளன. சோழர் கால ஆட்சியைப் பொற்காலம் எனவும் அவர்களால் உருவாக்கப்பட்ட பார்ப்பனக் குடியேற்றம், நிலவுடைமை முறை, தேவதாசி முறை ஆகியவற்றை தமிழனின் பெருமை எனவும் பேசக்கூடிய நிலை இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது. இது மிக ஆபத்தானது.
வீங்கி வளரும் மத்தியதர வர்க்கம், உலகமயத்தின் பலன்களாகக் கருதப்படுபவைகளில் பங்கு கோரி முன்னேற நினைக்கும் இளைஞர்கள் ஆகியோர் ஊழல், வளர்ச்சி ஆகியவற்றைப் பிரதானப் படுத்தி அடிப்படை வாத ஆபத்து, எகாதிபத்திய ஊடுருவல், சாதிப் பிரச்சினை முதலான இன்னும் முக்கியமான ஆபத்துக்களைக் கண்டு கொள்ளாதிருக்கும் போக்குகளை இங்குள்ள சில குறுகிய நோக்கிலான கட்சிகளும் இயக்கங்களும் ஊக்குவிக்கின்றன. தமிழகத்தில் உருவான முரட்டுத்தனமான காங்கிரஸ் மற்றும் தி.மு.க எதிர்ப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இத்தகைய போக்கு ஆபத்தானது. கவலைக்குரியது .பா.ஜ.கவின் இந்த வெற்றி உறுதியாகச் சிறுபான்மையினரது நலனைப் பாதிக்கக் கூடியது.
2. மாறிய இந்த அரசியல் சூழல்களின் பின்னணியில் முஸ்லிம்களும் அமைப்புகளும் எவற்றிற்கு முன்னுரிமை தர வேண்டும்?
முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை. அவர்களின் ஆதரவு இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறுவோம் என வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் நிலையை இப்போது இந்துத்துவம் மேற்கொண்டுள்ளது. முதல்முறையாக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு எதுவும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படவில்லை. பெருநாள் வாழ்த்துச் சொல்லும் அடிப்படை நாகரீகமும் கூட இனி கடைபிடிக்கப்படாது என்பதன் மூலம் சொல்லப்படும் சேதி கவலைக்குரியது. அமித் ஷா போன்ற கொலை வழக்கில் சிக்கியுள்ள ஒரு நபரை கட்சித் தலைமையில் அமர்த்தியுள்ளதும், முசாபர் நகர் வன்முறைக்குக் காரணமானவரை அமைச்சராக்கி உள்ளதும், மூத்த தலைவர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுத்திருப்பதும், கல்வித்துறை போன்ற முக்கிய இடங்களில் ஸ்மிருதி ராணி போன்றவர்களை அமர்த்தியுள்ளதும், நீதித்துறையைத் தம் வசப் படுத்தும் முயற்சிகளும் இந்துத்துவ சக்திகளுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் சொல்லும் சேதிகள் பாரதூரமானவை. சிறுபான்மை மக்களுக்கு எதிராக எது வேண்டுமானாலும் செய்யலாம், இந்த அரசு நமக்குப் பாதுகாப்பும் தண்டனை விலக்கும் (immunity) அளிக்கும் என்கிற எண்ணம் இந்துத்துவ வன்முறையாளர்கள் மத்தியில் உருவாவதற்கு இந்த நடவடிக்கைகள் வாய்ப்பளிக்கின்றன. இதன் விளைவுகள் தொடங்கி விட்டன. நூறு நாட்களுக்குள் வகுப்புக் கலவரங்கள் பல்கியுள்ளன.
அதே நேரத்தில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்கிற எண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் மத்தியில் உருவாவதற்கான எல்லா சூழலும் இன்று உள்ளது. இது நமது இளைஞர்கள் பாதை விலகிப் போவதற்கு வாய்ப்பளித்து விடக் கூடாது. முஸ்லிம் சமூகம் இதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படியான ஒரு போக்கைத்தான் இந்துத்துவ சக்திகள் எதிர்பார்க்கின்றன. இது வன்முறைப் போராட்டங்களுக்கான காலமில்லை. வன்முறையை வழிமுறையாகக் கொள்வது நம் மீது அடக்குமுறைகளை அதிகப்படுத்தும். நம்மைத் தனிமைப் படுத்தும். அவர்களை நியாயப்படுத்தும் என்பதை முஸ்லிம் சமூகம் இளைஞர்கள் மத்தியில் பேச வேண்டும்.
வெறும் பேச்சோடு நிற்கக்கூடாது. முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்தச் சமூகம் ஒன்றிணைந்து நின்று அமைதி வழியில் போராடி எதிர்கொள்ளும் என்கிற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இந்த நாட்டில் இன்னும் முற்றிலுமாக பாசிசம் வளர்ந்துவிடவில்லை. காந்தி, நேரு,, பெரியார், அம்பேத்கர் முதலான மதச் சார்பர்ற சிந்தனையாளர்களின் தாக்கம் இன்னும் முற்றாக மறைந்துவிடவில்லை. அவர்கள் உருவாக்கிச் சென்றுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளம் உறுதியாக உள்ளது. அவற்றை அவ்வளவு எளிதாகத் தகர்த்துவிட இயலாது என்பதை விளக்க வேண்டும். இடதுசாரிகள், மதச் சார்பற்ற சக்திகள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோர் என்றென்றும் நம்பிக்கை மிக்க கூட்டாளிகளாக நமக்கு உள்ளனர் என்பதைச் சொல்ல வேண்டும். அவர்களோடு உள்ள உறவுகளைப் பெருக்க வேண்டும். விலைவாசி ஏற்றம், தவறான பொருளாதாரக் கொள்கைகள் முதலானவற்றிற்கு எதிராக ஜனநாயக முற்போக்கு சக்திகள் நடத்தும் போராட்டங்கள் முதலியவற்றில் முஸ்லிம்களின் பங்கு அதிகமாக வேண்டும்.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தேவையில்லாமல் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி விடாமல் அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டும். அப்படியான தருணங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு, அமைதியான போராட்டங்கள், அதற்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுகுதல், சிறை ஏகுதல் என்கிற வடிவங்களில் நியாயத்திற்கான நமது போராட்டங்கள் அமைய வேண்டும். நமது சுதந்திரப் போராட்டம், சமகால அரபுலக அமைதி வழிப் போராட்டங்கள், வால்ஸ்ட்ரீட் போராட்டம் முதலியன நமக்குச் சில நல்ல எடுத்துக்காட்டுகள்.
3. முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், செக்யூலர் கட்சிகள் மேற்கொண்ட அரசியல் வியூகம் எந்த அளவிற்குப் பொருத்தமானது என நினைக்கிறீர்கள்? அதனை மேம்படுத்துவதற்காக என்ன செய்ய வேண்டும்?
எந்தப் பெரிய அரசியல் வியூகமும் தொலை நோக்கான பார்வையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. செக்யூலர் கட்சிகள் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பாசிசத்திற்கு எதிரான ஒருங்கிணைவு ஏற்பட்டிருந்தால் பா.ஜ.க இன்று வெற்றி பெற்றிருக்க இயலாது. அப்படி ஏற்பட்டால் நிச்சயமாக பா.ஜ.கவை வீழ்த்த முடியும் என்பதற்கு சமீபத்திய இடைத் தேர்தல் முடிவுகள் சாட்சி. இந்துத்துவ அபாயம், தவறான பொருளாதாரக் கொள்கைகள் இந்த இரண்டும் நாட்டைச் சூழ்ந்துள்ள மிகப் பெரிய ஆபத்துகள் என்கிற உணர்வுடன் செக்யூலர், இடதுசாரி, தலித் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இணைய வேண்டும். வெறும் காங்கிரஸ் அல்லது தி.முக எதிர்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பே போதுமானது என்கிற எண்ணத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். மக்களையும், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தையும் இந்தச் சிந்தனையிலிருந்து விடுவிக்க வேண்டும். (பார்க்க: இத்துடன் இணைக்கப்பட்டுள்ள யு.ஆர்.அனந்தமூர்த்தி அவர்களின், “பாசிசத்தை நாம்தான் வளர்த்தோம்“ என்கிற கட்டுரைச் சுருக்கம்)
4. இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் நாட்டில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இதனால் வகுப்புவாதம் கடுமையாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆம் எனில் இதைத் தடுப்பதர்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
முந்திய கேள்விகளுக்கான பதில்களிலேயே விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இராம ஜென்ம பூமி, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளை நிச்சயம் எடுப்பார்கள். ஆனால் உடனடியான கள நடவடிக்கைகளில் இறங்காமல் முக்கிய பல துறைகளிலும் ஊடுருவுவதற்கு அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது அவர்களின் முதற்கட்டச் செயல்பாடுகளாக அமையும். கல்வித்துறை, இராணுவம், நீதித்துறை முதலியன முதலில் இலக்காக்கப் படலாம். அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றக் கூடாது என்கிற கேசவானந்த பாரதி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கூட மாற்றி அமைக்க முயற்சிப்பார்கள். அந்த நோக்கிலேயே நீதித்துறைக்குள் ஊடுருவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு தயாராக உள்ளது. எப்படி இடித்தார்களோ அதே போல ஒரே நாளில் அந்தக் கட்டுமானத்தை மசூதி இருந்த இடத்தில் பொருத்தி விடவும் முடியும். அப்படி எல்லாம் நிகழ்ந்தால் ஜனநாயக சக்திகளைத் திரட்டி இதை எதிர் கொள்வதும் நீதிமன்றத்தை அணுகுவதுமே உள்ள வழி முறைகள். பெரிய அளவு மக்களைத் திரட்டிப் போராட முனைய வேண்டும். பிற ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி சக்திகளுடன் இணைந்து இதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்க வேண்டும்,
5. அரசு ஒரு வேளை, சர்ச்சைகுரிய விவகாரங்களில், எடுத்துக்காட்டாக. ராம் ஜென்ம பூமி, பொது சிவில் சட்டம் போன்றவற்றைக் கையில் எடுத்தால் அவற்றை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?
6. கல்வி, பண்பாடு, ஊடகங்கள், ஆராய்சி மன்றங்கள் போன்ற துறைகளில் மாற்றங்களும் திருத்தங்களும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் அவற்றை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?
நிச்சயம் எடுப்பார்கள். இப்போதே தொடங்கி விட்டனர். இதில் இரண்டு அம்சங்கள் முக்கியம். (அ) இந்த 100 நாள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பெரிய எதிர்ப்பில்லை என்பது வருந்தத்தக்கது. (எ.கா) காஸா தாக்குதலுக்கு இந்திய அரசு பிடிவாதமாக எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கான எதிர்ப்பு தமிழகம் உட்பட எங்கும் ஏற்படவில்லை. யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க விடயம். (ஆ) ஆனால் தமது நடவடிக்கைகளுக்கு ஓரளவு எதிர்ப்புகள் வரும்போது பா.ஜ.க அரசு பின்னடைவதையும் பார்க்கலாம். சமஸ்கிருத வாரம் கொண்டாடுதல், குரு உத்சவ் ஆகிய இரு பிரச்சினைகளிலுமே எதிர்ப்பு ஏற்பட்டவுடன் இது கட்டாயமில்லை என அரசு பின்வாங்கியுள்ளது.
முறையான, உறுதியான, அமைதியான எதிர்ப்பு நிச்சயம் பலனளிக்கும். சென்ற முறை பா.ஜ.க தலைமையில் தே.ஜ.கூ ஆட்சி நடந்தபொழுது (1999 – 2004) அரசு பாட நூல்களில் மேற்கொண்ட திருத்தங்களை முறியடித்தது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வேத, ஜோதிடக் கல்விகள், NCERT பாட நூல்களில் செய்த மாற்றங்கள் ஆகியவற்றிற்கு நாடெங்கும் கல்வியாளர்கள் மற்றும் இடதுசாரி சக்திகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பே அவற்றை முறியடிக்கப் போதுமானதாக அமைந்தது. தமிழகத்தில் குறிப்பாக இதில் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், கல்வியாளர்கள் முதலான அமைப்புகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் பொது கூட்டங்கள் நடத்தியது, ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பேசியது. விரிவான வெளியீடுகளை மக்கள் மத்தியில் வினியோகித்தது. டெல்லியிலிருந்து முன்னாள் NCERT தலைவர் பேரா. அர்ஜுன் தேவ் போன்றோரை வரவழைத்துக் கருத்தரங்குகளை நடத்தியது.
மாநிலங்கள் தோறும் மதச் சார்பற்ற சக்திகள், இடதுசாரிகள் மற்றும் இந்துத்துவ பாசிஸ்டுகள் ஆகியோருக்கு எதிரான சக்திகளைத் திரட்டி “மதச் சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்தைக் காப்பாற்றுவதற்கான குழு” என்பது போன்ற அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட வேண்டும். ஏற்கனவே ராம் புனியானி போன்றோர் முன் முயற்சியில் உருவாகியுள்ள இது போன்ற அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
புதிய சமூக ஊடகங்களில் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்பது வரவேற்கத் தக்கது. அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகள் முதலியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இன்று கூட்டப்பட்டுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தை, “மதச் சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்தைக் காப்பாற்றுவதற்கான குழு” என்பது போன்ற ஒரு நிரந்தர அமைப்பாக்கி அவ்வப்போது கலந்தாலோசித்து தேவையானால் மக்களைப் பல்வேறு வழிகளில் சந்திக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு, மதக் கலவரத் தடுப்புச் சட்டம், முஸ்லிம் இட ஒதுக்கீடு, அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவது முதலானவை குறித்த விழிப்புணர்வைச் சிறு வெளியீடுகள், கருத்தரங்குகள், மக்கள் சந்திப்புகள் ஆகியவற்றின் ஊடாகக் கொண்டு செல்ல வேண்டும்.
காவல்துறையும், உளவுத் துறையும் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவுவது பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ‘சிசிடிவி’ நிறுவும் முயற்சிகள், நெல்பேட்டை முதலான இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் profile செய்யப்படுவது, காவல்துறை கக்கும் செய்திகளை அப்படியே ஊடகங்கள் வெளியிடுவது போன்ற செயல்களை அவ்வப்போது உடனடியாகக் களத்தில் இறங்கிக் கண்டிக்க வேண்டும். இவற்றை முஸ்லிம் மூத்தோர்களும் இயக்கங்களும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதே இளைஞர்கள் வழி தவறுவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நாம் கருத வேண்டும். அதே நேரத்தில் இத்தகைய பணிகளை முஸ்லிம்கள்தான் செய்ய வேண்டும் என பிற ஜனநாயக சக்திகள் அமைதி காக்கக் கூடாது. இந்த நாட்டின் பன்மைத் தன்மைக்கு ஏற்படும் ஊறு ஒட்டு மொத்தமாக இந்த நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு ஏற்படும் ஆபத்து என்பதை அவர்கள் உணர வேண்டும்.
பிற ஜனநாயக சக்திகளின் நியாயமான போராட்டங்களில் முஸ்லிம் அமைப்புகள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும்.
எல்லோரும் படிக்கக் கூடிய, பார்க்கக் கூடிய மாதிரியான தரமான நாளிதழ், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றின் உருவாக்கம் குறித்தும் முஸ்லிம் சமூகம் கரிசனம் கொள்ள வெண்டும்.
முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிரிவுகளுக்கிடையேயான ஒற்றுமை. முஸ்லிம்கள் , மதச் சார்பற்ற சக்திகள், இடதுசாரிகள் முதலானோர் ஆகியோருக்கு இடையேயான ஒற்றுமை ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய காலத்தின் கட்டாயம். “மதச் சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்தைக் காப்பாற்றுவதற்கான குழு” போன்ற அமைப்புகள் பகுதி அளவுகளில் உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக