காருக்குள் பாட்டிலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும்? கேட்கவே “பகீர்’ என்றிருக்கிறதல்லவா?
விஷயம் இதுதான். காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் காட்டிலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி மீதம் வைக்கப்படும் பாட்டில் நீரில் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் ரசாயன வினையை ஏற்படுத்தி “டையாக்சின்’ என்கிற விஷப் பொருளை உருவாக்குகிறது.
சமீபத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உலுக்கி எடுத்த, ரத்தத்தை “ஜிலீரிட’ வைக்கும் இந்தத் தகவல், இந்திய மருத்துவ வட்டாரத்தையும், மத்திய தர வர்க்கத்தினரையும் கலக்கி வருவது அச்சத்தின் உச்சம்.
பொதுவாக, பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீர் (மினரல் வாட்டர்) சந்தைக்கு வந்து பல நாட்கள் கழித்தே விற்பனையாகும். அது கெட்டுப் போகாமல் இருக்க ஒரு சில வகை ரசாயனங்களை அனுமதிக்கப்பட்ட அளவு (10 பி.பி.எம்.) குடிநீரில் சேர்ப்பார்கள்.
இது குறித்து பிரபல “ஃபுட் டெக்னாலஜிஸ்ட்’ சந்தரிடம் பேசினோம். “டையாக்சின் பயங்கர நச்சுப் பொருள். பெண்களின் மார்பக கேன்சருக்கு காரணமே இதுதான். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களில் நிறைந்திருக்கும் இந்த நச்சு அதிக வெப்ப நிலையில் மட்டுமே வெளியேறும். குறிப்பாக பிளாஸ்டிக்கை எரிக்கும் போது புகையோடு வெளிவரும். அதனை சுவாசித்தாலோ, வேறு ஏதேனும் பொருளோடு கலந்திருந்து அதனை நாம் எடுத்துக் கொண்டாலோ ஆபத்துக்கு சிவப்பக் கம்பளம் விரிப்பது போல்தான்!’ என்கிறார்.
ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.
அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.
ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு.
இது பற்றி பிரபல மருத்துவர் பிரேம் சேகர் என்ன சொல்கிறார்? “நம்மூரில் வெப்பம் 40 டிகிரி எட்டுவதும் உண்டு. இதன் மூலம்
பிளாஸ்டிக் பாட்டில்களின் உள்ளே இருக்கும் மெழுகுப் பூச்சு தண்ணீருடன் எளிதில் வினை புரியும் ஆபத்திருக்கு. அதே போல் கார் ஓடும்போது வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால் “கெமிக்கல் ரியாக்ஷன்’ ஏற்படுவது இயற்கைதானே. அப்போது டையாக்சின் வெளிப்படும். ஆபத்தை மறுப்பதற்கில்லை. இதனால் அழற்சி முதல் ஆண்மைக் குறைவு வரை பாதிப்புகள் ஏற்பட்டு மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போய்விடும்’ என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.
சரி! காருக்குள் தண்ணீர் வைக்க பயன்படுத்தும் பாட்டில், காரின் வெப்பத்தில் வினை புரியும் வாய்ப்பு உண்டா? என்பது குறித்து “இந்திய தர நிர்ணய ஆணைய’த்தின் (பி.ஐ.எஸ்) உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நம்மூரில் பருகும் நீரின் தன்மை பற்றி அறிய செய்யப்படும் சோதனையை “மைக்ரேஷன் டெஸ்ட்’டுன்னு சொல்வோம். அதன்படி 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சில ரசாயனச் சேர்மங்கள் கலக்கப்படுவதுண்டு. அதனால் ஆபத்து எதுவும் வராது.
பொதுவாக கார்களில் அதிக வெப்பம் உருவாகும் வாய்ப்பு இல்லை. அதனால் காருக்குள் இருக்கும் குறை வெப்பம் பாட்டிலில் இருக்கும் நீரோடு வினை புரிந்து டையாக்சினை வெளியேற்றும் வாய்ப்பு குறைவுதான்!’ என ஆறுதலாகப் பதில் தருகிறார் அந்த உயர் அதிகாரி.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் அறிய “ஐ.எஸ். 10146’, பிளாஸ்டிக் தவிர்த்து வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய “ஐ.எஸ். 9845’ என இரண்டு வகையான டெஸ்ட்கள் மட்டுமே இந்தியாவில் நடைமுறையில் இருக்கு. இதில் பாட்டிலிலிருந்து “டையாக்சின்’ வெளியேறுவதைக் கண்டறியும் சோதனை நம்மூரில் இல்லை! என்கிறார்கள்.
பாதிப்புகள் என்னென்ன?
நோயெதிர்ப்பு சக்தி குறையும். இனப்பெருக்கம் உறுப்புகள் செயலிழக்கும். “டயாபட்டீஸ்’, “தைராய்டு’, பற்கள், மூச்சுப் பிரச்னைகள். அதிக கொழுப்பு சேருதல், உயர் ரத்த அழுத்தம்.
நன்றி : குமுதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக