ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் செலவை விட குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா பயணித்துள்ளது என்று மேடிசன் சதுக்கத்தில் தொடர்ச்சியான கைத்தட்டல்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசிய பேச்சின் குதூகலத்தில் இருக்கும்போது, இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத ஒரு செய்தி வெளியானதை பலரும் கவனிக்க தவறியுள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டு பிறந்தபோது ஐக்கிய நாடுகள் அவையால் நிச்சயிக்கப்பட்ட ‘மில்லேனியம் வளர்ச்சி’ இலக்குகளில் முக்கியமான ஒன்று தாய்மை அடைந்த பெண்களின் மரண எண்ணிக்கையை குறைப்பது.
சிசு மரணத்தை குறைத்தல், ஊட்டச்சத்துக் குறைப்பாட்டிற்கு தீர்வு காணுதல் ஆகியவற்றையும் ஐ.நா இலக்குகளாக நிச்சயித்துள்ளது. இதில் கர்ப்பிணிப் பெண்களின் மரண எண்ணிக்கையை குறைப்பதில் இந்தியா தோல்வியை தழுவியதாக, இதுத்தொடர்பாக புள்ளிவிபரங்களை சேகரித்த அரசு சாரா நிறுவனம் ஒன்று அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது.
2015-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்தில் 109 என்ற கணக்கில் மரண எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று ஐ.நா அறிவுறுத்தியிருந்தது. ஆனால், 2011-12-ஆம் ஆண்டில் இந்தியாவில் கர்ப்பிணி பெண்களின் மரண எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு 179 ஆக உள்ளது. இச்சூழலில் ‘மில்லேனியம் வளர்ச்சி இலக்குகளை’ இந்தியா அடைய முடியாது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கர்ப்பமடைந்த நிலையிலும், பிரசவ வேளையிலும் மரணிக்கும் பெண்களில் அதிகமானோர் ஏழ்மையில் வாடுபவர்களே என்று அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களில் அதிகமானோர் தலித்துகளும், பழங்குடியினரும், சிறுபான்மை சமூகத்தினரும் ஆவர்.
உரிய நேரத்தில் மின்வசதி கிடைத்திருக்குமானால் பெரும்பாலான மரணங்களை தடுத்திருக்கலாம். ஆனால், காகிதத்தில் இருக்கும் பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
சிசு மரணங்களின் புள்ளிவிபரங்களும் நிராசையை ஏற்படுத்துகின்றன. நான்கு லட்சம் குழந்தைகள் பிரசவத்தின் போதே இறந்து விடுகின்றனர். இது உலகிலேயே அதிகமான மரண சதவீதமாகும்.
ஐந்து வயதிற்கு முன்பே 20 லட்சம் குழந்தைகள் உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் மரணமடைகின்றனர். 46 சதவீதம் குழந்தைகளுக்கு போதிய எடை இல்லை.
அடிப்படை வளர்ச்சிகளுக்கான இலக்குகளில் இந்தியா தற்போதும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
குஜராத் மாநிலம் தூய்மையில் முதலிடத்தில் இருப்பதாக மேடிசன் சதுக்கத்தில் ஆற்றிய உரையில் நரேந்திரமோடி பெருமையுடன் எடுத்துரைத்தார். ஆனால், கர்ப்பிணிகள் மற்றும் சிசு மரணத்தில் குஜராத்தின் நிலைமையும் மோசமாகவே உள்ளது.
ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் செலவில் செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பியதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதேவேளையில் கர்ப்பிணிகள், குழந்தைகளின் மரண எண்ணிக்கையை முடிந்தவரை குறைத்த பிறகே சூரிய குடும்பத்தில் செவ்வாய் என்ற கிரகம் இருப்பதை சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்தன.
எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்? என்பது குறித்து நமது ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம்!
- சையது அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக