கெய்ரோ:நிகாப் அணிவது அடிமைத்தனம் என்று எங்களை அவமதிப்பதால் நாங்கள் என்ன வீடுகளில் சென்று ஒடுங்கி விடுவோமா? எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள் எகிப்தின் துணிச்சல் மிக்க முஸ்லிம் பெண்கள்.
முகம் முதல் கால்பாதம் வரை மறைக்கும் புர்கா அணிந்த பெண்கள் அரபுலகில் நடந்த, நடக்கும் புரட்சிகளில் முக்கிய பங்கினை ஆற்றியதை நாம் கண்டுவருகிறோம். எகிப்திலும், யெமனிலும், லிபியாவிலும் தற்பொழுது சிரியாவிலும் புரட்சிகளில் நிகாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பங்காற்றி வருகின்றார்கள்.
அடுத்தக் கட்டமாக தொலைக்காட்சி சானல் மூலமாக தங்களது சாதனையை துவக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல முழுக்க முழுக்க இஸ்லாமிய ஆடையை அணிந்துகொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் உலகின் முதல் தொலைக்காட்சி சானல் என்ற பெருமையை எகிப்திய நிகாப் அணிந்த முஸ்லிம் பெண்களால் துவக்கப்படும் ‘மரியா’ என்ற சானல் பெற்றுள்ளது.
ஆண்களுக்கு இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இம்மியளவும் இடமில்லை. ஏன் ஃபோன் – இன் – நிகழ்ச்சிகளில் கூட ஆண்களுக்கு அனுமதியில்லை. கேமராவுக்கு முன்பும், பின்னாலும் முழுக்க முழுக்க பெண்களே. இவர்களும் முழுமையாக புர்காவை அணிந்திருப்பார்கள். சானலின் முதல் ஒளிபரப்பு நேற்று துவங்கியது.
பெண்களுக்கு அநேக கட்டுப்பாடுகள் நிறைந்த ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு எகிப்து எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை சானலின் செயல்பாட்டு சுதந்திரம் நிரூபிக்கிறது என மரியா சானலின் தலைவி எல் ஷேக்கா ஸாஃபா ரெஃபாய் தெரிவிக்கிறார்.
“எனது உடல் அசைவுகளும், வித்தியாசமான குரலும், பாவனைகளும் தொலைக்காட்சி மூலம் தெரியும் என்பதால் முழு உடலையும் மறைக்கும் புர்காவை அணிகிறேன். அதுமட்டுமல்ல நிகாப் அணிந்துகொண்டே வெற்றிகரமாக வாழமுடியும் என்பதை பிறருக்கு புரியவைப்பதும் இதன் மூலம் சாத்தியமாகும்” என ஸாஃபா ரெஃபாய் கூறுகிறார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் திருமணம் புரிந்த அன்னை மாரியத்துல் கிப்தியா அவர்களின் பெயர்தாம் இந்த சானலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்ற ஆபீர் ஷாஹின் என்ற பெண்மணி புர்கா அணிந்துதான் பணிபுரிய வேண்டும் என்று உறுதிப்பூண்டவர். தற்போதைய பணியின் மூலம் தனது விருப்பப்படி வாழ முடியும் என ஆபிர் கூறுகிறார். இவர் சானலின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆவார்.
ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் புர்கா அணிந்த பெண்களால் குடும்பத் தலைவியாக வீட்டில் மட்டுமே வாழ முடிந்தது. ஆனால், மக்கள் எழுச்சியின் மூலம் மாற்றத்தை சந்தித்துள்ள எகிப்தில் புர்கா அணிந்த பெண்கள் டாக்டராகவோ, எஞ்சீனியராகவோ தற்பொழுது வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஹுஸ்னி முபாரக்கின் எகிப்திற்கு கிடைத்த சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இதனை காண தனக்கு விருப்பம் என ஆபிர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக