சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.
சுவர்க்கம் சொன்னது: “எனக்கு என்ன ஆனது? மக்களில் பலஹீனமானவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் தானே இங்கே இருக்கிறார்கள்!”
இந்த விவாதத்தில் அல்லாஹ் குறிக்கிட்டான்.
சுவர்க்கத்திடம் அல்லாஹ் கூறினான்:”நீ என்னுடைய கருணை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாககருணை புரிவேன்.”
நரகத்திடம் அல்லாஹ் இவ்வாறு நவின்றான்: “நீ என்னுடைய தண்டனை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாக நான் தண்டனை கொடுப்பேன்.”
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வியின் இறுதி உருவம்தான் நரகம். அங்கீகாரமும், புகழும் தனக்கு உள்ளது என்ற எண்ணம், இருள் கொண்ட மனங்களில் திமிரையும் பெருமையையும் உண்டு பண்ணும். இத்தகைய தீய எண்ணங்கள் இறுதித் தோல்விக்கு ஒரு மனிதனை இழுத்துச் செல்லும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூஹ் நபி (அலை) அவர்களின் சமூகத்தில் பெரும்பாலோர் அவர்களை நிராகரித்தனர். அடித்தட்டு மக்களாகிய தொழிலாளிகள் சிலர் மட்டும்தான் அவர்களைப் பின்பற்றினர். இந்த நிலையைச் சுட்டிக்காட்டி நிராகரிப்பாளர்கள் நூஹ் நபியை கேலி செய்தனர். ஏகடியம் பேசி எக்களித்தனர். நாங்கள் உம்மை விசுவாசிக்கவா? தரம் தாழ்ந்த ஒரு சிலரல்லவா உம்மோடு இருக்கிறார்கள் என்று அவர்கள் நையாண்டி பேசினர்.
அவர்களைப் பார்த்து அமைதியாக நூஹ் நபி அவர்கள் கூறினார்கள்: “என்னை பின்பற்றுபவர்கள் என்ன தொழில் செய்கின்றார்கள் என்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்களது கணக்குகளை பார்க்க வேண்டியது அல்லாஹ் ஒருவன்தான். எனது பணி எத்தி வைப்பது ஒன்றே”
இது நூஹ் நபி (அலை) அவர்களுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல. விறகு வெட்டிகளும், துணி துவைப்பவர்களும் இன்னும் இது போன்ற தொழில் செய்பவர்களும் தான் ஈஸா (அலை) அவர்களிடம் சீடர்களாக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த முஹாஜிர்களை இரண்டாவது குடிமக்களாக சித்தரிக்க முனைந்தார்கள் முனாஃபிக்குகள். அல்லாஹ் அவர்களது சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுத்தான்.
வாழ்க்கையின் யதார்த்தங்களை அனுபவித்தறிந்த சாதாரண மக்கள்தான் இறைவனின் கட்டளைகளை ஏற்று நன்மையின் முன்வரிசையில் நிற்பார்கள்.
நன்றி :விடியல் வெள்ளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக