Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 22 மே, 2014

தலைமையின் தனித்துவம்! உறுதியின் உறைவிடம்!

எனது பெயர் இங்கு முக்கியமல்ல. நான் முஸ்லிம் அல்லாதவன் என்பதும் ஓர் ஆராய்ச்சி மாணவன் என்பதும் இங்கு போதுமானது.
எனது ஆராய்ச்சி என்னவென்றால் உலகத் தலைவர்களும் அவர்களது தலைமைப் பண்புகளும் என்ற தலைப்பிலானது.

ஒரு பெரும் சமுதாயத்தின் தலைவர் என்ற அடிப்படையில் நான் முஹம்மது நபிகளின் வாழ்க்கையையும் ஆராய்ந்தேன். இவர் மற்றவர்களைப் போல் அல்ல என்று தீர்க்கமாக  உணர்ந்தேன்.
இந்த முடிவுக்கு நான் வரக் காரணம் இவரிடம் இருந்த அந்த அசாதாரணமான தலைமைப் பண்புதான். பல இடங்களில் நான் வியப்பில் நிலை குலைந்தேன். அதுவும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு போகும் அந்த ஹிஜரத் காட்சி. இப்போதும் நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்…
ஒரு பக்கம் எதிரிகள் சூழ்ந்து நிற்கும் மக்கா. மறுபுறம் முற்றிலும் அந்நிய தேசமான மதீனா. அடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்வதற்கில்லை. சூழலை மேலும் மோசமாக்கும் வண்ணம் முஹம்மது நபியைத் தேடி எதிரிகள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
நண்பர் அபூபக்கர் அச்சத்தால் பின்புறம் திரும்பிப் பார்த்தபடியே நடக்கிறார். முஹம்மது நபி எந்தச் சலனமும் இல்லாமல் நேராக நடக்கிறார். இதோ சுரக்கா இவர்களைப் பார்த்து விட்டார்.
நெருங்கி வரும்போது சுரக்காவிற்கு ஒரு மன மாற்றம். முஹம்மது நபியை ஏற்கிறார். அபயம் கேட்கிறார். முஹம்மது நபி மன்னிக்கிறார். அது போதாது என்கிறார் சுரக்கா. இதற்கு முஹம்மது நபி சொன்ன பதிலில் தான் நான் விழி விரிந்து நின்றேன்.
சுரக்கா உமக்கு என்ன வேண்டும்? பாரசீக மன்னன் கிஸ்ராவின் காப்பு உமக்கு போதுமா?…
நண்பர்களே என்ன அர்த்தம் என்று விளங்குகிறதா? அன்றைய பேரரசான பாரசீகத்தை இஸ்லாம் விரைவில் வெல்லும் என்பதுதான் இதன் அர்த்தம்.
எந்தச் சூழ்நிலையில் இதை முஹம்மது நபி சொல்கிறார் என்று பாருங்கள். அதைத்தான் மேலே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.
இது என்ன உறுதி? இது என்ன நம்பிக்கை? இது என்ன திடசித்தம்? இது என்ன தொலைநோக்கு? நான் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வை கண்டதில்லை.
கலீஃபா உமரின் ஆட்சியில் இஸ்லாம் பாரசீகத்தை வென்றதையும் மன்னரின் காப்பு சுரக்காவிற்கு வந்ததையும் நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.
நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். உண்மையிலேயே இந்த முஸ்லிம்கள் கொடுத்து வைத்தவர்கள். எப்பேற்பட்ட தலைவரை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள் இவர்கள்தான்.
பின்பு நான் வியந்தேன். பின் ஏன் இந்த முஸ்லிம்கள் இன்று அழிவுக்கும் இழிவுக்கும் சிறுமைக்கும் ஆளாகிறார்கள்? இதற்கும் நான் காரணத்தை கண்டுபிடித்தேன்.
முஸ்லிம்கள் தங்கள் தலைவரை உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள். சந்தேகமில்லை. ஆனால் அவரின் முன்மாதிரியைத்தான் கை விட்டு விட்டார்கள்.
இந்த முஸ்லிம்கள் தங்கள் தலைவர்பால் மீண்டு வர வேண்டும். அத்துவானக் காட்டில் தாயைப் பிரிந்த கன்று ஒன்று மீண்டும் தன் தாய் பசுவைக் கண்டு கதறிக் கொண்டு வருவதைப்போல் முஸ்லிம்கள் அவர்தம் தலைவர்பால் வர வேண்டும்.
அவர் மடி விழ வேண்டும். எழ வேண்டும். குன்றென நின்று குவலயம் வெல்ல வேண்டும். உலகில் நீதியும் அமைதியும் நிலை பெற செய்ய வேண்டும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக