Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 13 செப்டம்பர், 2014

செப்.13 - இந்த ஆண்டின் சர்வதேச முதலுதவி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு 2000 ஆம் ஆண்டு முதல் இதை கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. அதன்படி சர்வதேச முதலுதவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு சர்வதேச முதலுதவி தினம் இன்று (செப்டம்பர்-13) கடைப்பிடிக்கப்படுகிறது.
விபத்து அல்லது சுகாதார குறைபாடு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் போது, அவர்களது உயிரைக் காப்பாற்றுவதற்கு, உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு, உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் ஆபத்தான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.
இந்தியாவில் விபத்துகளால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகின்றனர் என அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. இது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு உரிய முறையில் முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் உயிர் பிழைத்திருப்பார்கள். இது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் உள்ள முக்கிய பிரச்சனையாகும்
ஆகவே முதல் உதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் செப்டம்பர் 2வது சனிக்கிழமையை ‘உலக முதல் உதவி தினமாக’ கடைப்பிடிக்க கடந்த 2000 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
உயிர் பாதுகாத்தல், கூடுதலான ஆபத்து நேர்வதை தவிர்த்தல் மற்றும் குணமாவுதலை ஊக்குவித்தல் என்ற மூன்று நோக்கங்களின் அடிப்படையிலேயே முதல் உதவி முக்கிய பங்கினை வகிக்கிறது.
உலக அளவில் மனித உயிர்களை பலி வாங்குவதில் முதல் இடம் வகிப்பது சாலை விபத்து. உலக அளவில் 30 வினாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார். விபத்து நிகழ்வுகளில், அது நிகழ்ந்த சில நிமிடங்களுக்குள் 50 சதவிகிதத்துக்கும் மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் இந்த உயிரிழப்பைத் தடுக்க முடியும், அடிபட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தால்! முதலுதவிப் பயிற்சி, விபத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. மிகப் பெரிய மற்றும் சிறிய அவசர காலங்களில் உதவுவதற்கும் சிறப்பாக செயல்படுவதற்கும் தேவையான திறமையைக் கொடுக்கிறது.
முதலுதவிப் பயிற்சி ஒரு மனிதனின் வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும், வீடு, பள்ளி, பணிபுரியும் இடம் என எல்லா இடங்களிலும் அவசியம். எனவே, அதை எல்லோருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. முதலுதவி சிகிச்சையை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.


நெருங்கிய நண்பன்… நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து விடுகிறார். அவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது நமக்குப் புரிகிறது. இந்த நேரத்தில் அவருக்கு சிறியதாக ஒரு மசாஜ் செய்தால் போதும்… அவரைக் காப்பாற்றிவிடலாம். இதை முதலுதவிப் பயிற்சியில்தான் கற்றுக் கொள்ள முடியும். உண்மையில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு நம் தேசத்தில் மிக மிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அதற்கான பயிற்சி முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஒருவர் ஒருமுறை முதலுதவிப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் மட்டும் போதும். தொடர்ந்து அந்தப் பயிற்சியை செய்முறையாக செய்து கொண்டே இருந்தால்தான், அவசர காலத்தில் அவரால் சரியாகச் செயல்பட முடியும்.
கிணற்றில் ஒரு சிறுவன் விழுந்து விடுகிறான். அவனைக் கிணற்றிலிருந்து தூக்கியும் விடுகிறார்கள். ஆனால், அவனைக் காப்பாற்ற என்ன மாதிரியான முதலுதவியைத் தர வேண்டும் என்பது பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அவனைக் காப்பாற்ற முடியாது.

பல நாடுகளில் முக்கியமான பொது இடங்களில் ஏ.இ.டி. (Automated External Defibrillators) என்கிற முக்கியமான உயிர்காக்கும் சாதனங்களை வைத்திருக்கிறார்கள். இந்த சாதனங்களைக் கையாளத் தெரிந்தால் போதும்… பல உயிர்களைக் காப்பாற்றிவிடலாம். இது போன்ற முதலுதவி சிகிச்சை சாதனங்களை இந்தியாவில் பல இடங்களில் வைக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.
அவசர காலங்களில் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை என சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில…

விபத்து

* கார் வைத்திருப்பவர்கள், அதில் கண்டிப்பாக முதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டும்.
* விபத்து ஏற்பட்டு ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தால், அவருடைய கழுத்துப் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கழுத்து ஆடாமல் இருப்பதற்கு எதெல்லாம் கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்த வேண்டும். அவரை வெகு ஜாக்கிரதையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். இல்லையென்றால், ஒரு சிறிய காயம் கூட, பெரிய விளைவை ஏற்படுத்திவிடும்.
* அடிபட்ட ஒருவரின் ஹெல்மெட்டைக் கழற்றும் போது, அவருடைய தலை, கழுத்து மற்றும் உடலுக்குத் தேவையான சப்போர்ட் கொடுக்க வேண்டும். இதைச் சரியாகச் செய்யவில்லை என்றாலும், காயம்பட்டவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
* அடிபட்டவருக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் டானிக்கையும் கொடுக்கக் கூடாது.

பாம்புக் கடி

* பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி எந்த வெட்டுக் காயத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
* கட்டு எதையும் போடக் கூடாது.
விஷம்
* யாராவது விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு உப்புக் கலந்த தண்ணீரயோ அல்லது வேறு எந்த திரவத்தையோ குடிக்கக் கொடுக்கக் கூடாது. அதை உறிஞ்சிக் குடிப்பதால் அவர் இறந்து போகவும் வாய்ப்பு உண்டு.

வீட்டில்…

* சமையலறையில் உடம்பில் எங்காவது தீக்காயம் ஏற்பட்டால், காயம்பட்ட இடத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். பிறகு அதன் மேல் கொஞ்சம் வெண்ணெயை எடுத்துத் தடவவும்.
* வெட்டுக்காயம் பட்டால், காயம் பட்ட இடத்தை நீரால் கழுவிவிட்டு, அதன் மேல் சிறிது ஐஸ் கட்டியை வைக்கவும். அந்த இடத்தில் ரத்தம் உறைந்து போகும். பிறகு அதன் மேல் முகத்துக்குப் பூசும் பவுடர், கடலை மாவு அல்லது கொண்டைக் கடலை மாவு எதையாவது வைத்து லேசாக அழுத்தவும்.
* வாய்ப்புண்ணால் தாங்க முடியாத வலியா? வெந்நீரில் சிறிது கிறிஸ்டல் உப்பைக் கலந்து வாயைக் கொப்புளிக்கவும். கறிவேப்பிலை இலைகளையோ அல்லது 10 மணத்தக்காளி இலைகளையோ வாயில் போட்டும் மெல்லலாம். உடனடி பலன் கிடைக்கும்.
* தோலில் தடிப்பு அல்லது கட்டிகள் ஏற்பட்டால் மஞ்சள் தூளும் தேங்காய்த் தண்ணீரும் கலந்து பூசலாம்.
* அஜீரணக் கோளாறால் ஏற்படும் தலைவலிக்கு சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் பலன் கிடைக்கும்.
* வெயிலில் நடந்ததால் ஏற்பட்ட களைப்பில் மயக்கமா? ஒரு டம்ளர் தண்ணீரில் சிறுதுண்டு இஞ்சி, எலுமிச்சைச்சாறு ஒரு டேபிள்ஸ்பூன், சிறிது சர்க்கரை, சிறிது உப்புக் கலந்து குடித்தால் உடனடியாக மயக்கம் தெளியும்.
இவையெல்லாம் வீட்டு வைத்தியம் மட்டுமல்ல… முதலுதவியும் கூட.
ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவிப் பெட்டி இருப்பது நல்லது. அதை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். அதில் துணி, காயங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்து, அவசர உதவி எண்கள், அருகிலிருக்கும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
பல மருத்துவமனைகளிலும், செஞ்சிலுவைச் சங்கங்களிலும் முதலுதவி செய்வதற்கான பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதைக் கற்றுக் கொள்வது ஒவ்வொருவரின் சமூகக் கடமை. முதலுதவி சிகிச்சை உயிரைக் காப்பாற்றும்… அது எங்கேயும், எப்போதும், எல்லோருக்கும் தேவையான உயிர் காக்கும் ஆயுதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக