Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

கறி தின்னு நாளாச்சும்மா…

” தாயும் சிறு வயது கொண்ட மகனும் கொண்ட ஏழை குடும்பம் அது. தந்தை இல்லை.
கும்பி எரியுது குடல் காயுது கொஞ்சம் மிளகோ உள்ளியோ இருந்தால் பழையதுக்கு தொட்டுக் கொள்ளாலாம் என்ற நிலையில் கழியும் அன்றாடப் பொழுதுகள். இந்த நிலையில் சிறுவனுக்கு அந்த ஆசை வந்தது. கறி தின்று எவ்வளவு நாள் ஆகி விட்டது.
அம்மாவிடம் சொன்னான். அம்மா நெக்குருகி நின்றாள். சுதாரித்தாள். சின்னஞ்சிறு மகனின் கறி ஆசையை நிறைவேற்றிட முனைந்தாள். துணிந்தாள்.
அன்றிலிருந்து சிறுக சிறுக சேர்த்தாள். ஒரு நாள்
எண்ணிப் பார்த்த போது பணம் கறி வாங்கப் போதுமானதாக இருந்தது. ஆசையுடன் புறப்படும் போது அந்த சோதனை வந்தது. மகனுக்கு திடீர் உடல் நலக் குறைவு.
அந்தோ பரிதாபம். மொத்தப் பணமும் மருந்துக்குப் போயிற்று. கையறு நிலையும் சுய பச்சாதாபமும் சூழ அந்த ஏழைகள் நின்ற போது அந்த அதிசயம் நடந்தது. ஒரு இடத்திலிருந்தல்ல பல இடத்திலிருந்து அவர்கள் வீட்டுக்கு கறி வந்தது.
என்ன ஏது என்று திகைத்தபோதுதான் அவர்களுக்கு  நினைவுக்கு வந்தது. அது ஹஜ்ஜுப் பெருநாள்.”

மேலே சொன்ன கதை சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ‘மலர்மதி’ என்ற பத்திரிகையில் வந்தது. நாகர்கோயில் கோட்டாரை சேர்ந்த ஜனாபா. ஹலீமா ஜவஹர் அவர்கள்தான் அதன் ஆசிரியர்.

இன்று கறி நமக்கு மிகவும் மலிந்து விட்டது. நினைத்தால் ஆட்டுக் கறி. விரும்பினால் கோழிக் கறி என்று உண்டு மகிழ்கிறோம். ஒருக் காலத்தில் அப்படி இல்லை.

அரேபியாக் காற்றும் இன்ன பிற வெளிநாடுகளின் காற்றும் சகட்டு மேனிக்கு சமுதாயத்தில் வீசாத காலமது. பெரும்பாலும் ஓட்டு வீடுகளும் சில ஓலை வீடுகளும் ஒன்றிரண்டு மாடி வீடுகளும் தெருக்களில் நிறைந்து இருந்த காலம்.

கறி அப்போது அதிசயம். சில வீடுகளில் மட்டும் வாரம்தோறும் கறி உண்டு. சில வீடுகளில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை. சிலருக்கு மாதத்திற்கு மட்டுமே. சில ஜீவன்களுக்கு விஷேஷங்களும் கல்யாண வீடுகளும் மட்டுமே கறி ஆசையை தீர்த்து வைத்த காலம்.

“மக்கா இன்னைக்கு எங்கூட்ல கறி”. இப்படி சொன்ன சிறுவர்கள் அப்போது பலர் உண்டு. மலிவான விலையில் கிடைத்த மாட்டுக் கறி பலரின் கறி ஆசையை அன்று தீர்த்தது.

இன்று நாம் எங்கேயோ வந்து விட்டோம். அல்ஹம்துலில்லாஹ். இன்று கறிக்கு ஏங்கும் சிறுவர்கள் நமது ஊரில் இல்லாமல் இருக்கலாம். பக்கத்து ஊரில் இருக்கலாம். அல்லது நமது நாட்டில் வேறு இடங்களில் கண்டிப்பாக இருக்கலாம். ஆப்பிரிக்காவில் அநேகம் பேர் இருக்கலாம்.

இந்தத் தியாகத் திருநாளுக்கு அந்த ஏழைகளின் வீட்டுக்கு இந்தக் கறி சென்றடைய வேண்டும். அவர்களின் வயிறும் உள்ளமும் நிறைய வேண்டும். அப்படி நிறைந்தால்  அவர்கள் இறைவனைப் புகழ்வார்கள். தமக்கு உணவு தந்தவர்களுக்காக நெஞ்சாரப் பிரார்த்திப்பார்கள். கண்களில் நீர் தழும்புவார்கள். 

இந்தக் கண்ணீரினூடே சிலருக்கு அந்தத் தியாகத் திருக்குடும்பம் நினைவுக்கு வரும். இறைப்பொறுத்தத்திற்காக மகனையே அறுத்துப் பலியிட முனைந்த அந்த முன்னோடி, அந்த இறைவனின் நண்பர் கலீலுல்லாஹ் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்), பலியாத் துணிந்து நின்ற அந்தப் பொறுமை மகன் திருக்குடும்பத்தின் பெருமை மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்), பாலைப் பெருவெளியில் தண்ணீருக்காக தொங்கோட்டம் ஓடிய அந்தத் தாய் ஹாஜரா…

எங்கும் தியாக உணர்வலைகள் நெஞ்சில் பீரிட்டு எழுந்து நிற்கும் நன்னாள்.

இந்த ஈதுல் அழ்ஹா நம் அனைவருக்கும்  சிறப்பாக அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

- முஹம்மது ஃபைஸ் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்),  “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான். (புஹாரி 5021. – ஹதீஸ் சுருக்கம்)
அன்பார்ந்த வாசக நெஞ்சங்களே….! எதிர் வரும் பெருநாள் ஏழைகளின் பெருநாளாகவும் இருக்கட்டும். வறுமையில் வாடும் வட இந்திய மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் ரிஹாப் பவுண்டேசனுக்கு, நமது ஆதரவையும் அளிப்போம்.
- ஆசிரியர்

நன்றி தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக