Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

மாதொருபாகனும் ! கருத்துச்சுதந்திரமும் !!

மிழகத்தின் இலக்கிய வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் தற்பொழுது தீவிரமாக பேசப்பட்டு வரும் மாதொருபாகன் என்னும் நாவல் தொடர்பான சர்ச்சையும், அந்த நூலை   எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இந்துத்துவ அரசியல் கூட்டங்கள் செய்யும் இரட்டை வேட நாடகங்களும், அதற்க்கு ஆதரவாக எழும் முற்போக்கு குரல்களின் பின்னால் உள்ள அரசியல் சார்பு  நிலைகளும் பற்றி நாமும் பேசவும் விவாதிக்கவும்  வேண்டிய தருணம் இது.
முதலில் வெளிவந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அந்த நூலைப்பற்றிய எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கியபோது, அது இந்துத்துவ சித்தாந்த்த்தின் மூடத்தங்களை கேள்வி எழுப்பும் மற்றொரு நூலாக இருந்திருக்கும் என்பதால்தான் பரிவார் கூட்டங்கள் வழக்கம்போல் எதிர்ப்பு அரசியல் நாடகம் ஆடுவதாகவே நாமும் நினைத்தோம். ஆனால் பின்னர் அந்த புத்தகத்தின் சர்ச்சைக்குறிய பக்கங்களாக சொல்லப்படும் சில பக்கங்களை வாசித்தபொழுது அது எவ்வளவு  அபத்தமும் ஆபத்துமான தகவல்களை கொண்டுள்ளது என்பதையும் அந்த நாவலை எதிர்ப்போரின் நியாயமான மன உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்தது.
தென் தமிழகத்தின் திருச்செந்தூர் பகுதியின் வாழ்க்கை நடைமுறைகளை கொண்டு புனையப்பட்ட மாதொருபாகன் நாவலில் அந்த பிரதேச மக்களுடைய திருவிழாக்கள் பற்றி விரிவாக கதை ஓட்டத்தில் புனையப்பட்டுள்ளது, அப்படி அந்த நாவல் பேசும் அந்த மக்களுடைய தேர்த்திருவிழாக்கள் எல்லாம் வெறும் ஊர் மக்களுடைய காம இச்சைகளை கட்டுப்பாடுகளின்றி தீர்த்துக் கொள்ள பயன்படுத்தும் தளம் போலவும் அந்த பகுதியிலுள்ள குழந்தைப்பேறு அற்ற  பெண்கள் இத்திருவிழா இரவுகளில் வேற்று ஆடவருடன் கூடி பிள்ளை பெற்றுக்கொள்வது போலவும் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
 இன்றைய நாட்களில் பெரும்பாலான நாவல்கள் இவ்வாறு  எவ்வித சமூக பொறுப்பாரு  எழுதப்படுவது வழமைதான் எனினும் இந்த நாவலின் துவக்கம் உண்மைக் கதைகளின் அடிப்படையில் புனையப்பட்டது என்று பெருமாள் முருகன்  கூறியிருப்பதாலேயே இது முக்கியத்துவம் பெருகிறது. மேலும் பெருமாள் முருகன் இப்பிரைச்சனைக்கு பிறகு அவருடைய விளக்கத்தில் அவர் இன்னொரு அபத்தமான வாதத்தை  முன்வைக்கிறார் அதாவது இவை போன்ற கற்பனை கதைகளுக்கு எழுத்துப்பூர்வ ஆதாராம் கேட்கக்  கூடாது என்றும் வாய்வழிக்கதைகளாக சொல்லப்பட்டு வந்த சம்பவங்களுக்கு கற்ப்பனை வடிவம் கொடுக்கப்படும்பொழுது வெளிப்படும் உண்மைத் தன்மையை தேடுதல் ஆபத்தானாதாகும் என்று கூறுவதால் இதன் ஆதாரமற்ற தன்மையை அவர் நியாயப்படுத்துவதாகவே தோன்றுகிறது. இந்த நழுவல் ஒன்றே அவருடைய கதையின் நம்பகத்தன்மை பற்றி நாம் மேன்மேலும் கேள்வி கேட்க வேண்டிய அவசியமற்ற நிலையை உண்டாக்கியிருக்கிறது, அது பற்றி விரிவாகவும் பேச தேவையில்லை. எனவே இங்கு நாம் இவ்விஷயத்தின் மற்றொருபக்கமான கருத்து சுதந்திர அரசியல் பற்றி அலச வேண்டிய அவசியமிருக்கிறது.
இன்று கருத்துச்சுதந்திரத்தின் வரைமுறை என்பதுதான் என்ன? அதன் நீள அகலம் எவ்வளவு என்று யோசித்தோமென்றால் அப்படி எவ்வித வரைமுறையும் இல்லாத சொல்லாகத்தான் இது இருக்கிறது. அதாவது கருத்து சுதந்திரம் என்பதை ஃபாசிஸம் என்ற இடத்திற்க்கு இன்றைய முற்போக்குவாதிகள் என்று சொல்லப்படுவோர் கணகட்சிதமாக  நகர்த்தியிருக்கிறார்கள். அதாவது நாங்கள் கற்ப்பனையாகவோ, பொய்யாகவோ எவற்றை வேண்டுமானாலும் சுவாரசியமாக எழுதுவோம் அவற்றின் நம்பகத்தன்மையையும் அதாரங்களையும் பற்றியெல்லாம் நீங்கள் கேள்வி எழுப்ப தேவையில்லை என்றும் வேண்டுமென்றால் உங்கள் தரப்பு  வாதங்களை நீங்களும் எங்கள் பாசையிலேயே பேசி பதில் சொல்லுங்கள் என்ற ரீதியிலேயே பதில் சொல்லப்படுகிறது. இது பச்சையாக பொய்யையும், அவதூறையும் வியாபரம் செய்யும் தந்திரம் அன்றி வேறு என்ன ? நான் என்ன வேண்டுமென்றாளும் பேசுவேன் என்னப்போலவே நீயும் பேசக்  கற்றுக்கொள் என்பது வாய் இருப்பவனை யாரும் கேள்விகேட்கவே கூடாது  ஃபாசிஸ போக்கு அன்றி வேறு என்ன?
இன்று உலகம் முழுவதும் நடைபெறுவதும் இதுதான். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிற மக்களுடைய நம்பிக்கைகளை இழிவுபடுத்தி விளம்பரம் தேடும் முற்போக்கு கும்பலின் உக்தியானது. ஒரு சாரார் புனிதமாக கருதும் நம்பிக்கையினை, அவர்களுடைய கலாச்சாரத்தினை பற்றி பச்சையான  புழுகுகளையும், இழிவுபடுத்தும் கார்ட்டூண்களையும் வெளியிட்டு ஒரு சிலரின் உணர்ச்சிவசப்படலை தனக்கு சாதாகமாக்கி பிரபலமடைதல், வியாபாராமாக்குதல் போன்றவற்றில் தங்களை வளப்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் இழிவுபடுத்தும் அவதூறுகளையும்  பொய்களையும் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான குரளில் செய்யச் செய்ய மற்றொரு சாரார் உண்மையை தங்களுடைய பலவீனமான குரலால் அதர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற  ஃபாசிஸ போக்கு இன்று சாதாரனமாக மாறிவிட்டது. இதற்கு ஊடக வழிமையும் அவர்களுடைய பக்கம் இருப்பது காரணம்.
சிலர் இவ்வாறான கருத்து பாசிஸ போக்கிற்க்கு எதிரான எதிர்விளைவுகளைப் பற்றி பேசுகிறார்கள். இதில் சிலரால் வரம்பு மீறிய செயல்கள் நடைபெறுவதும் சகித்துக்கொள்ள முடியாத நிகழ்வுகள் நடப்பதும் கண்டனத்திற்க்கு உரியதுதான். ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டும் என்பதே முற்போக்குவாதிகளின் அவா!  உணர்வுகளை தூண்டிவிட்டு அதை சந்தைப்படுத்தி பிரபலமடைய அவர்கள் பயன்படுத்தும்  கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் இழிவுபடுத்தும்  அத்துமீறல். அவர்களுக்கு  எதிராக ஜனநாயக வழிகளில் நேர்மையாக கொடுக்கப்படும் அறிவுப்பூர்வமான எதிர்ப்புகளையெல்லாம் வசதியாக புறந்தள்ளிவிட்டு அவர்கள் எதிர்பார்த்த முட்டாள்தனமான செயல்களை விளம்பரப்படுத்துவதும் நடக்கிறது. முற்போக்கு கூட்டங்களின்  தலைவர்கள், அவர்களுடைய புத்தகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றிர்க்கெதிராக பொய்யான அவதூறுகளை வேறு யாரேனும் செய்தால் அவற்றிர்க்கு பிறர் என்ன எதிர்வினையாற்றுவார்களோ  அதே ஆர்ப்பாட்டம் செய்தல், புகார் தெரிவித்தல், மீடியா சந்திப்பு, சுவரொட்டி ஒட்டுதல் போன்ற ஜனநாயக எதிர்ப்புகளையே மத அமைப்புகள் அல்லது சாதி அமைப்புகள் செய்தாலோ இவர்கள் அய்யோ இந்த தேசத்தில் எங்களுக்கு இடமில்லையா, புத்தகத்தை எரித்துவிடவா என்று
வானத்திற்கும் பூமிக்குமாய் ஊடகங்கள் உதவியுடன் குதித்து விடுவார்கள்.
சரி இந்த மாதொருபாகன் நாவலுக்கு வருவோம் தன் மனதில் கற்பனையாக உதித்த ஒரு கேடுகெட்ட கதைக்கு நடைமுறை மக்களின் கலாச்சாரத்தை கதைக்களமாக்கிவிட்டு அவர் என்னுடைய கற்பனையை கேள்வி கேட்காதீர்கள் என்பது என்ன நியாயம். இதே இந்தியாவில்தான் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இதுபோன்ற கற்பனைக் கதைகள் இன்று புனித நூல்களாக மாற்றப்படவில்லையா ? புராணக்கதைகளை ஆதாரமாகக் காட்டி தீர்ப்பு வழங்குவதும், அந்த கதைகளையெல்லாம் சட்டமாக்க வேண்டும் என்று செயல்பட்டு வருவதும் இந்த நாட்டில்தான் இல்லையா? இப்படியாக கற்பனை கதைகள் எல்லாம் வரலாற்று சம்பவங்களாக மாறும் இந்த திருநாட்டில் இருந்துகொண்டு வெறும் கதைதானே விட்டுவிடுங்கள் என்று சொன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் எப்படி ஏற்றுக்கொள்ளும். சரி இதை ஒரு கற்பனை என்று எடுத்துக்கொண்டு அனுமதிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதன்பின்னர் திருச்செந்தூர்வாசிகள் சந்திக்கப்போகும் உளவியல் சிக்கல்களைப் பற்றி  நாம் சிந்திக்க வேண்டாமா?
அந்த வட்டார பெண்களின் மீது அந்த மக்களின் பிறப்பின் தூய்மைத்தன்மை மீது நிரந்தரமாக விழப்போகும் களங்கங்களைப் பற்றியெல்லாம் இந்த நாவலுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் போலி பெண்ணியவாதிகள் சிந்திக்கமாட்டார்களா?.
கற்பனை என்பது உண்மைக்கு வெகு அருகாமையிலிருக்கும் நடக்காத ஒரு நிஜம் என்ற கலீல் ஜிப்ரானுடைய கருத்துக்களை போன்ற நியாயமான கோட்பாடுகள்தான் இத்தனை ஆண்டுகளாக இலக்கிய வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்தது, ஆனால் என்று கடவுள் மறுப்பும் , கம்யூனிச சித்தாந்தங்களும் இலக்கிய வட்டத்திற்க்குல் நுலைந்ததோ அன்றிலிருந்து இலக்கியம் என்பது பொய்களும் புரட்டுமாகிப்போனது. இவற்றையெல்லாம் கலைந்துவிட்டு ஒரு புதிய இலக்கிய உலகை மீள்கொணர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் நமக்கு
இருக்கிறது.
இன்று நடைபெறும் கூத்துக்களில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மாதொருபாகன் நாவலுக்கு எதிராக சங்க பரிவார்கள் கட்டியிருக்கும் இவன் ரொம்ப நல்லவண்டா வேடம்தான்.
முற்றிலுமாக பெண்களை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் மோசமான கதைகளைக் கொண்ட வர்ணாசிர மனுதர்ம கொள்கைகளை அடிப்படை சித்தாந்தமாக கொண்ட சங்க பரிவார கும்பல் எல்லாம் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் நகைச்சுவையான விஷயம். இப்பொழுது மாதொருபாகன்
நாவலை தீவைத்து கொளுத்தும் போராட்டம் நடத்துவது போல் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது அவர்களுடைய வர்ணாசிரம கொள்கைகளை பின்புலமாக கொண்ட இந்துத்துவ  சித்தாந்தத்தைத்தான்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது நாம் ஒரு சர்ச்சையில் நம்முடைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமெனில் சங்க பரிவார்கள் எந்த நிலைப்பாடு எடுப்பார்களோ அதற்க்கு நேர் எதிரான நிலைப்பாட்டைத்தான் நாமும் எடுக்க வேண்டும் என்ற நிலையும் நம்மிடையே உள்ளது.ஆனால் இன்றைய காலத்தில் சங்கபரிவாரங்கள் தங்களை சித்தாந்த (ideological) ரீதியாக பெரும் மாற்றத்திற்க்கு உட்படுத்தியிருக்கிறார்கள்
அவர்களுடைய விஷமத்தனமான அடிப்படைவாத கருத்துக்களை முதுகுக்குப் பின்னால் மறைத்து விட்டு பொது நீரோட்டத்தில் முற்போக்கு முகமூடி அனிந்து உலாவ துவங்கி வெகு நாட்களாகிறது எனவே நம்முடைய அரசியல் நிலைப்பாடுகளை வெறும் இந்துத்துவ எதிர்நிலை மட்டும் என்ற பார்வையில் எடுத்தோம் என்றால் முஸாபர் நகரில் ஜாட்டுகள் அவர்களுடைய போலி அக்கறையில் மயங்கியதைப் போல் இங்கும் பெறும் ஜாதிய கூட்டு மக்கள் திரளை நாம் அவர்களின் சதி வலையில் இழக்க நேரிடும்.
சமீபமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுக்கும் அரசியல் முடிவுகள் யாவும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் சில சமயங்களில் நம்முடைய தோழமை சக்திகள் மற்றும் சொந்த சமூக மக்கள் செய்யும் வரம்பு மீறல்கள் நமக்கு நியாயமானவை போல் படுகிறது இத்தகைய மனப்போக்கிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். இதனால் நம் சமூகம் தனிமைப்படுத்தப்படுவதும் பெரும் மக்கள் கூட்டம் எதிரிகளிடம் தஞ்சம் அடைவது அன்னிச்சையாக நடைபெறுகிறது. நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த தலித் சமூகங்கள் விடுதலைப் பாதையில் பயனிக்கும் போது கோபமும் வன்மமும் கலந்த ஒரு தீவிர நிலை இருப்பது இயல்புதானெனினும் அந்த முகமூடியை பயன்படுத்திக்கொண்டு தலித் இலக்கியம் என்ற பெயரில் சில முற்போக்கு ஃபாசிஸ்டுகள் செய்யும் வரம்பு மீறல்களையும் நாம் கண்டித்தே ஆக வேண்டும்.
மேலும் இதுபோன்ற இழிவுபடுத்தி பிரபலமடையும் கருத்து சுதந்திர ஃபாசிஸ்டுகளிடமிருந்து விலகி பாதிக்கப்பட சமூக, பிரதேச மக்களுக்கு அரவனைப்பாக இருப்பது அவர்களுடன் தோளோடு தோளாக இணைந்து களமாடுவதும் அவர்களை இந்துத்துவ வாதிகளிடமிருந்து அப்புறப்படுத்துவதும் இன்றைய அரசியல் இன்றியமையாத ஒன்று அந்த வகையில் மாதொருபாகன் நாவல் அதனுடைய சர்ச்சைக்குறிய பக்கங்களை நீக்கிவிட்டுத்தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நம்முடைய கண்டனக்குரலையும் எழுப்ப பதிவு செய்ய வேண்டும்.

நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து:

  1. சிந்திக்க வைக்கும் எழுத்து நடை. ஆழமான கருத்துக்கள். பாசிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், சாமானியர்கள் என்ற அனைவரது பார்வையும் எப்படி பட்டது என்பதை உணர்த்தும் சிறந்த சிந்தனை. சங்க பரிவாரங்களுக்கு இந்த புத்தகத்தை எதிர்த்து போராட அல்லது எரிக்க எந்த உரிமையும் (தகுதியும்) இல்லை என ஆணித்தரமான ஆதாரத்துடனான தகவல். எழுத்தாலர்களுக்கான வரம்புகள் என்ன? என்ற பார்வை. மாதொருபாகனை விட ஆசிரியர் இந்த கட்டுரை பல படிப்பினைகளை சமூகத்திற்கு வழங்குகிறது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு