பெரம்பலூர், : பெரம்பலூரில் போலீசாரின் தடையை மீறி அணிவகுப்பு நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 216 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000வது ஆண்டு தொடக்க விழா, ஆர்எஸ்எஸ் தொடங்கியதின் 90வது ஆண்டையொட்டியும், சமுதாய சமத்துவ நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று மாலை சீருடை அணிந்து ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றனர்.
போலீசாரின் தடையை மீறி துவங்கிய இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் வக்கீல் பிரசன்னம் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சந்திரசேகரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையறிந்த பெரம்பலூர் போலீசார் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை தடுத்து நிறுத்தி, ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, உங்களை கைது செய்கிறோம் என்று கூறி 216 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பெம்பலூர் பாலக்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, இரவு 9 மணியளவில் விடுவிக்க ப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக