பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழக அளவில் பெய்து வரும் மழை, பெரம்பலூர் மாவட்டத்திலும் குறைவின்றிப் பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அளவில் 11ம்தேதி மட்டும் 93மிமீ மழை பெய்துள்ளது. இதன்படி செட்டிக்குளம் 22மிமீ, பெரம்பலூர் 15மிமீ, வேப்பந்தட்டை 8 மிமீ, தழுதாழை 43மிமீ, பாடாலூர் 5மிமீ என மொத்தம் 93மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக 18.60மிமீ மழை பெய்துள்ளது.
இதேபோல நேற்று மாவட்ட அளவில் பரவலாக நல்லமழை பெய்தது. காலை 10 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை, விட்டுவிட்டு பெய்தது. மாலை 4 மணியளவில் பலத்த மழையாகப் பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தேனூர், பாண்டகப்பாடி ஏரிகள் 100சதவீதக் கொள்ளளவை எட்டியும், மீதமுள்ள 71 ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேலும் ஐந்தாறு ஏரிகள் நிரம்பி வழியும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக