இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
உலக நிமோனியா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது, இதையொட்டி பிரபல குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்ததாவது:
“நிமோனியா என்பது நுரையீரலை நுண்கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
குழந்தைகளால் சாதாரணமாக இது போன்ற அறிகுறிகளை பெற்றோர்களிடம் கூற முடிவதில்லை. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 2 அல்லது 3 நாட்களில் குணமடைய வேண்டும்.அதற்கு மாறாக 3–வது நாட்களுக்கு மேலும் காய்ச்சல் அதிமாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
சாதாரண நுண் கிருமிகளின் தொற்றினால் ஏற்படும் இந்த நோயினால் ஆண்டிற்கு இந்தியாவில் 4½ கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள மேம்பட்ட மருத்துவ வசதிகளும், அரசு மேற்கொள்ளும் உடனடி நடவடிக்கைகளுமே காரணம். மதுரையில் இந்த நோயினால் நாள் ஒன்றுக்கு 2 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்த நோயை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதற்கான சரியான சிகிச்சைகள் அளிக்கும் பட்சத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கவனிக்காமல் விட்டால் இது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.” என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக