எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம்
மக்காவில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்துவிட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்கிரகாராதனைக்காரருக்குப ் பொறாமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி முகம்மது நபி செவிக்கு எட்டிவிட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கா அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப்படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டு வழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர்களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்: “ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!” என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானார் . அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸ்ல்லம்) அவர் சொல்லுகிறார்;
“கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்று கூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கு ஒரு தீங்கும் வரமாட்டாது. அல்லா ஸ்ர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதனால் எனக்குப் பயமில்லை. என்னுடன் அல்லா இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.
இந்த ஸமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே, என் மனத்தில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று.
இஸ்லாம் மார்க்கத்தின் மன்னராக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் முதலாவது கலீபாவாக அபுபகர் மன்னராக ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார்.
குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.
(20-6-1920 அன்று பொட்டல் புதூரிலே “இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை” என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் பேசியவை)
தொகுப்பு-Editor Alaudeen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக