பெரம்பலூர், லப்பைகுடிகாடு பகுதிகளில் “அம்மா’ மருந்தகம் தொடங்கப்பட உள்ளது
என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற 61-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு பரிசுகள், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் 146 பயனாளிகளுக்கு ரூ. 81.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கிய ஆட்சியர் பேசியது:
கூட்டுறவுத் துறை மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் கறவை மாட்டுக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறை மூலம் 2011- 2012-ம் ஆண்டுகளில் ரூ. 20 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், 2014- 2015-ம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 14,999 விவசாயிகளுக்கு ரூ. 79.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடனாக ரூ. 71.84 கோடியும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவியாக ரூ. 3.50 லட்சமும், விவசாய இடுபொருள் பொருளீட்டுக் கடனாக ரூ. 18.40 லட்சமும், மத்திய காலக் கடனாக ரூ. 1.93 கோடியும், 177 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிக் கடனுதவியாக ரூ. 3.25 கோடியும், 22 கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு கடனுதவியாக ரூ. 78.44 லட்சமும் என மொத்தம் ரூ. 157.64 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மருந்து கடைகளில் விற்கும் மருந்துகளின் விலையை விட, அதிகபட்ச சில்லறை விலையிலிருந்து 12 சதவீதம் குறைவாக தரமான பொருள்கள் பெரம்பலூர் கூட்டுறவு அமராவதி மருந்தகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக