மகாராஷ்டிரத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுபோல முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவும் தடை விதித்துள்ள நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு (கடந்த ஜூன் 25), கல்வி, அரசு வேலை வாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதமும் முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, இளைஞர்களுக்கான சம உரிமை அமைப்பின் கேதன் திரோட்கர், அனில் தனேகர், ஐ.எஸ்.கிலாடா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
மகாராஷ்டிராவில் கல்வி, அரசு வேலை வாய்ப்பில் ஏற்கெனவே 52 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில், அரசின் புதிய உத்தரவால் இட ஒதுக்கீடு 73 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயல் ஆகும். மேலும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசரகதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மொஹித் ஷா தலைமையிலான அமர்வு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக் கீடு வழங்கும் அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், முஸ்லிம் களுக்கு வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் தடை விதித்த நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்தது.
கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருப்பதால் இந்த தடை உத்தரவை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ப துதான் மாநில அரசின் நிலைப்பாடு. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். சட்டத்தில் முரண்பாடு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அது தொடர்பாக வரும் குளிர்கால கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்றார்.
இதற்கிடையே, இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் இந்த வழக்கை அரசுத் தரப்பு முறையாகக் கையாளவில்லை என தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக