Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 17 நவம்பர், 2014

விளைவுகளுக்குப் பிறகு விழித்து என்ன பயன்?

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது 23 ஆண்டுகால இறைத்தூதர் பணியில் முஸ்லிம்களை இரண்டு அடிப்படையான நிலைப்பாடுகளில் மிக உறுதியோடு இருக்குமாறு மிக ஆழமாக திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள்.
ஒன்று - அல்லாஹ்வின் கலாம் - அல்குர்ஆன்
இரண்டு - பெருமானார் (ஸல்)அவர்களின் சொல்செயல்அங்கீகாரம் - ஹதீஸ் அல்குர்ஆனையும் - ஹதீஸையும்
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முழுமையாகப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் உலகில் உன்னதமான மக்களாக உலகையே தன் வசப்படுத்தும் மக்களாக உலகின் போக்கையே தீர்மானிக்கும் மக்களாக உருவாவார்கள். அதன் மூலம் மரணத்திற்குப் பிறகான மறுமை வாழ்வில் பரி பூரணமான வாழ்வைப் பெறுவார்கள். அல்குர்ஆன் உலக மக்களுக்குத் தரும் உறுதிமொழி இது.
அல்லாஹ் இந்த பூமியில் இந்த உறுதி மொழியை மெய்ப்பித்துக் காண்பித்துள்ளான். உலக வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்பவர்களுக்கு அது புரியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அடுத்து வந்த சில நூற்றாண்டுகள் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் அந்தப் பரிசை பெற்று உலகின் உயர்ந்த சமூகமாக வாழ்ந்துள்ளது.
காலம் செல்லச் செல்ல அல்குர்ஆன் மீதும் ஹதீஸின் மீதும் முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய பிடிமானம் தளர்ந்த போது ஏற்பட்ட தீமைகளையும் அதனால் உண்டான விளைவுகளையும் உலக வரலாறு பதிவு செய்துள்ளது. இன்று வரையிலும் அது தொடர்கதையாக உள்ளது.
இன்றைய முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் அனைத்து விதமான இன்னல்களுக்கும் காரணம். தனித்தன்மை வாய்ந்த அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையிலிருந்து விலகியதே !
மனம் போன போக்கில்ஊர் உலகம் போகின்ற போக்கில் வாழ்வதால் முஸ்லிம்களின் வாழ்வு அவர்களுக்கு தீமைகளை உற்பத்தி செய்கிறது. தீமைகள் பல்கிப் பெருகி தமக்கு பெரும் பின் விளைவுகள் ஏற்படுகின்ற போதும்விளைவுகள் பெருகும் போதும் அதை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் சமூகம் கூச்சலிடுகின்றது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது தொடர்கதையாக உள்ளது. சமூகத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இந்தக் காட்சியைக் காண முடியும்.
1) இஸ்லமிய சமூகக் கட்டுமானத்தின் ஆரம்ப நிலையான குழந்தை வளர்ப்பு குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் அத்தியாயம் அத்தியாயமாக கூறிய பிறகும்பெருமானார் (ஸல்) அவர்கள் தனது குழந்தைகளையும் தனது பேரக் குழந்தைகளையும் வளர்த்து வழி காட்டிய பிறகும்நாம் அதனை பின்பற்றாமல்அதன் படி வளர்த்தெடுக்காமல் அறியாத இளம் பிஞ்சுகளை இன்றைய அதி நவீன ஷைத்தான்களான சினிமாதொலைக்காட்சிசெல்போன் போன்ற தீமைகளில் ஊறித் திளைக்க விட்டு விட்டு அதனால் இளம் பிஞ்சுகள் சீரழிந்த பிறகு பெற்றோர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர்.
இளம் பெண்கள் அல்குர்ஆன் - ஹதீஸின் வாடையே இல்லாத வளர்ப்பினால் தறிகெட்டு தவறான தொடர்பால் ஓடிப்போகும் விளைவுகளைக் கண்ட பிறகு பெற்றோரும் சமூகமும் வேதனைப்படுகிறது. ஓடிப்போகும் விளைவுகளுக்கு என்ன தீர்வு என்பதை கூட்டம் போட்டு விவாதிக்கிறது எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்என்று தற்காலிக தீர்வுகளை நாடுகின்றனர். சில இளைஞர்கள் தவறான பாதையை தேர்வு செய்கின்றனர். விளைவு முஸ்லிம்களின் மீதும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் பிற மக்களுக்கு தவறான எண்ணம் எற்படுகிறது.
2. மனிதன் தனது வயிற்றைப் பேண வேண்டிய வழிமுறை குறித்தும் உணவையும் உண்ணும் முறைகள் குறித்தும் பெருமானார் (ஸல்) அவர்கள் பாடம் நடத்திய பிறகும் வாழ்வில் அவற்றை அலட்சியப்படுத்தும் நாம் அந்நிய உணவுகளுக்கு அடிமையாகி கவர்ச்சியான விளம்பரத்தினால் கண்ட கண்ட குப்பைகளை வாங்கி வயிற்றில் அது வெடித்து விடும் அளவுக்கு கொட்டுகிறோம். அல்சர்புற்று நோய்சிறுநீரகப் பாதிப்புஇதய நோய்மூட்டு வலிஉடல் பருமன்மன நோய் இந்த "பெருமைக்குரிய நோய்ப் பட்டங்களை" வாங்காத முஸ்லிம்களே இன்று இல்லை. உழைக்கும் செல்வம்பரம்பரை சொத்துக்கள் எல்லாம் பல அடுக்குமாடி மருத்துவ முதலாளிகளின் பாக்கெட்டை நிரப்புகின்றன.
நோய்களின் பிடியில் சமூகம் சிக்கி சீரழியும் கொடும் விளைவுகள் ஏற்பட்ட பிறகே அது பற்றி விவாதிக்கிறோம். தீர்வு என்னவென்று ஏற்கனவே வெண்ணெய் போல் இருக்க அதனைத் தெரியாமல் நெய்யைத் தேடி புலம்புகிறோம். இஸ்லாம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுகிறோம். அதை அணுஅணுவாக ரசித்து வாழத்தவறிவிட்டோம். குடும்ப வாழ்வு,சமூக வாழ்வு என்று எல்லா நிலைகளிலும் இன்றைய முஸ்லிம்கள் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக தவறான வாழ்வியலால் விளைவுகள் ஏற்படும் போதும் வேதனை சூழும் போதும் மட்டும் சிந்திக்கிறோம். சமூக வாழ்விலும் அரசியலிலும் இந்தப் பிற்போக்குத்தனம் தான் தொடர்கிறது.
3. இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சி அதிகாரத்தை முகலாயப் பேரரசர் ஜஹீருத்தீன் பாபருக்கு கி.பி.1526இல் இறைவன் வழங்கினான். அடுத்தடுத்து வந்த பாபரின் வாரிசுகள் அல்லாஹ்வுடைய தீனை நிலை நாட்டும் வண்ணம் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் முகலாயப் பேரரசு அழிக்கப்படும் நிலை உருவாகி இருக்காது. "அல்லாஹ்வுடைய பாதையில் பயணிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அவர்கள் பாதை மாறாத வரை நாம் திரும்பப் பெறுவதில்லை ". என்று அல்குர்ஆன் கூறுகிறது . முகலாய வாரிசுகளின் தவறான வளர்ப்பும் தறி கெட்ட வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியை சீர் குலைத்து அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று அன்றைய முஸ்லிம்கள் அன்னியப் படையெடுப்புகளையோபெருகி வந்த உள் நாட்டு எதிர்ப்புகளையோ கவனிக்காமல் அலட்சியமாக வாழ்ந்தனர்.
"அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும்திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்);அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்என்ற அல் குர்ஆன்( 8:60.) வசனம் அலட்சியப் படுத்தப்பட்டது.
விளைவு : எதிர்ப்புகள் பெருகிப் பெருகி கி.பி. 1857 இல் முகலாய சாம்ராஜ்ஜியம் காணாமல் போனது. பிரிட்டீஸ் ஆக்கிரமிப்பாளர்கள் எனும் வளர்ந்து விட்ட தீய விளைவுகளை கடைசி கட்டத்தில் வீழ்த்த முயன்ற முஸ்லிம் சமூகம் எவ்விதத் தகுதியும்திறனும் இல்லாமல் தன்னளவில் அறிவையும்ஆற்றலையும்,மேம்படுத்தாமல் பிரிட்டனிடம் முட்டி மோதி பலியானது. இன்று வரை அது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
அதுபோலவே கி.பி.711 இல் முஸ்லிம்களின் தியாகத்தால் ஸ்பெயின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அல்குர்ஆனும் - ஹதீஸும் வாழ்க்கை வழிகாட்டியாக முழுமையாக பின்பற்றப்பட்ட போது உலகின் தலைசிறந்த பிராந்தியமாக இஸ்லாமிக் ஸ்பெயின் அல் அந்தலூசியா மாறியது.
கி.பி.1200 க்குப் பிறகு குழுச்சண்டை கோஸ்டிச்சண்டை இனப்பகை ஆகியவை பெருகிப் பெருகி அதன் கோர விளைவுகளால் ஏறக்குறைய 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள் கி.பி. 1495 இல் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்ற அளவுக்கு இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள். இன்றும் அந்த அவலத்தை உலக முஸ்லிம் சமூகம் அவ்வப்போது அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. அது போல பாக்தாத் அப்பாஸிய கிலாஃபத்துருக்கி உதுமானிய கிலாஃபத் என்று முஸ்லிம்களின் அலட்சிய வாழ்க்கையும்அதன் விளைவுகளும் வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி உள்ளது.
அறிவு ரீதியாகப் பார்ப்போம்.
அல் குர்ஆனிலும் - ஹதீஸிலும் செய்த ஆய்வின் காரணமாக 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அறிவுச் செல்வம் முஸ்லிம்களிடம் இருந்தது அதுவரை ஆய்வாளர்கள்கண்டுபிடிப்பாளர்கள் என்ற பட்டத்தின் சொந்தக்காரர்களாக முஸ்லிம்களே இருந்தனர். இன்றைய போலியான நோபல் பரிசு போல அல்லாமல் அன்றைய உலகின் உயரிய விருதுகளை முஸ்லிம் விஞ்ஞானிகளே பெற்றனர்.
12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் அல்குர்ஆனிலும் - ஹதீஸிலும் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் அது அருளப்பட்ட விதம் குறித்த வெட்டி விவாதங்களில் ஈடுபட்டனர். உலக இன்பங்களால் உல்லாசமடைந்தனர். இப்படி அறிவியல் தொழில் நுட்பத்தில் விஞ்சி இருந்தவர்களின் அலட்சியத்தின் காரணமாக அல்லாஹ் காற்றை திசை மாறிச் சுழலச் செய்தான். அறிவு கைமாறியது அறிவியல் - தொழில் நுட்பம் கைமாறியது. கண்டுபிடிப்பாளர்கள் என்ற மேன்மை நிலை கைமாறியது.
விளைவு : அறிவும்அறிவியலும் தொழில் நுட்பமும் ஐரோப்பியர்கள் வசமானது. அதை வைத்து உலகையே இன்று தம் வசப்படுத்தி விட்டனர். "எல்லாத்தையும் நாங்கதான் கண்டு பிடிச்சோம்" என்ற பெருமூச்சு மற்றும் பழம்பெருமை மட்டுமே இப்போது முஸ்லிம்களிடம் மிஞ்சி இருக்கிறது.
முஸ்லிம்களிடமிருந்து அனைத்தையும் கற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள். முஸ்லிம்கள் செய்யத் தவறியது என்ன என்பதை இப்போது நமக்கு பாடம் நடத்துகின்றனர். அல்குர்ஆன் - ஹதீஸின் எழுச்சி முஸ்லிம்களை உசுப்பி பழம்பெரும் ரோமப் பேரரசை வீழ்த்தியது. இப்போது மீண்டெழுந்த கிறித்தவர்கள் மீண்டும் நவீன ரோமப் பேரரசான "ஐரோப்பிய யூனியனை" கட்டி எழுப்பியுள்ளனர். இனி ஒருமுறை இந்த நவீன ரோமப் பேரரசை யாரும் அசைத்து விடக்கூடாது என்பதற்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டங்கள் தீட்டி அதை கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகின்றனர்.
அதே போல அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தேவையான அறிவு ஜீவிகளை உருவாக்கிடும் கல்விச்சாலைகள்,ஆய்வு நிறுவனங்கள் என உலகை தன் வசப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செய்து தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். சமூகஅரசியல் வாழ்வில் முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகின்றனர்.
எனவே தனி மனித வாழ்வு முதல் உலகின் ஆட்சி அதிகாரம் வரை இடைவெளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட கண் அயராமல் அல்குர்ஆனையும் - ஹதீஸையும் பரிபூரணமாக முஸ்லிம் சமூகம் பின் பற்றினால் மட்டும்தான் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க முடியும். முஸ்லிம் சமூகம் அல்குர்ஆன் - ஹதீஸ் பாதையை விட்டு ஒரு இஞ்ச மாறினாலும் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். என்பதை இன்றைய நமது வாழ்வை அங்குலம் அங்குலமாக எடை போட்டால் அப்பட்டமாகத் தெரியும்.
மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக