மெட்ராஸ் ஐ இதுவரை இல்லாத அளவுக்கு மழைக்காலத்தில் அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
வழக்கமாக வெயில் கொளுத்தும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாகக் காணப்படும் மெட்ராஸ் ஐ, தற்போது மழைக்காலத்தில் தீவிரமாக பரவி
வருகிறது. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தினமும் சராசரியாக 70 பேர் வீதம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இது மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைரஸ், பாக்டீரியாவால் பரவும்
அடினோ என்ற வைரஸ் மூலமாக மெட்ராஸ் ஐ வருகிறது. இதுதவிர பாக்டீரியா கிருமி மூலமாகவும் மெட்ராஸ் ஐ பரவும். ஒரு சிலர் 2 வகையிலும் பாதிக்கப்படுவார்கள். 75 சதவீதம், வைரஸ் மூலம்தான் வருகிறது.
வழக்கமாக கோடைகாலத்தில் தான் மெட்ராஸ் ஐ அதிகம் காணப்படும். இதுவரை இல்லாத வகையில், மழைக்காலத்தில் பரவிவருகிறது. அது மட்டுமின்றி, பெரும்பாலும் ஒரு கண்ணில்தான் வரும். தற்போது 2 கண்களிலும் வருகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மெட்ராஸ் ஐ வைரஸின் தன்மை மாறுபட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
பெங்களூருவில் பரிசோதனை
எனவே, பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள வைராலஜி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரத்தில் பரிசோதனை முடிவு வந்துவிடும். அதன்பின்னர், மெட்ராஸ் ஐ வைரஸின் தன்மையைப் பொருத்து, அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என முடிவு செய்யப்படும்.
மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், சினிமா தியேட்டர், வழிபாட்டுத் தலங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணி, சோப் உள்ளிட்ட எந்த பொருட்களையும் மற்றவர்கள் தொடக்கூடாது.
பார்த்தால் பரவாது
பாதிக்கப்பட்டவர்களின் கண் களைப் பார்ப்பதால் மற்றவர் களுக்கு மெட்ராஸ் ஐ பரவாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொட்டால்தான் பரவும். கண் சிவப்பது, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் வீக்கம் போன்றவை மெட்ராஸ் ஐ-யின் முக்கிய அறிகுறிகள். அனைவரும் கை, முகம், கண்களை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும்.
மெட்ராஸ் ஐ வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். முறையாக சிகிச்சை பெறாவிட்டால் கருவிழி பாதிக்கப்படும். அதன்பின் பார்வையை இழக்கவும் நேரிடலாம். மெட்ராஸ் ஐ-யால் கருவிழி பாதிக்கப்பட்டு நிறைய பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு டாக்டர் நமிதா புவனேஸ்வரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக