ஷார்ஜா: 2014ம் ஆண்டுக்கான ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 05.11.14 புதன் கிழமை அன்று கோலாகலமாகத் துவங்கியது. ஷார்ஜாவின் ஷேக் மரியாதைக்குரிய டாக்டர் ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காசிமி ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார் .
05.11.14 முதல் 15.11.14 வரை நடக்கும் இந்தப் பிரம்மாண்ட கண்காட்சியில் தமிழ் நூல்களும் கிடைக்கின்றன.
59 நாடுகளிலிருந்து 1256 நூல் வெளியீட்டகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மொழிகளில் நூல்கள் இடம் பெறுகின்றன. இதில் தமிழ் நூல்களும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஹால் எண் : 5, ஸ்டால் எண் : L 46ல் உள்ள “தேஜஸ் பப்ளிகேஷன்ஸ்” என்ற ஸ்டாலில் இலக்கியச்சோலை, புதுயுகம் பதிப்பகத்தாரின் நல்ல பல தமிழ் நூல்கள் பல்வேறு தலைப்புகளில் கிடைக்கின்றன.
இது தவிர தினமும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி, சமையல் கலைகளை விளக்கும் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி என்று அரங்கம் களை கட்டுகிறது.
வார விடுமுறையை குடும்பத்துடன் சென்று அங்கே பயனுள்ளதாக கழிக்கலாம்.
பார்வையாளர்களுக்கான கண்காட்சி நேரம் : காலை 10 முதல் இரவு 10 மணி வரை.
உலகிலேயே மிகப் பெரிய 4 புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி விளங்குகிறது. பல நாடுகளின் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கு பெறுகின்றன. ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இலக்கியம், கலை, அறிவியல், கலாச்சாரம், தத்துவம் உள்ளடக்கிய பல தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இங்கே விற்பனைக்கு உள்ளன.
கடந்த வருடம் 53 நாடுகளிலிருந்து 1010 பதிப்பகங்கள் பங்கு பெற்றன. இதில் 23 அரபு நாடுகளும், 26 அரபு அல்லாத வெளிநாடுகளும் அடங்கும்.
பல்வேறு அரபு எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், புகழ்பெற்ற நூல் ஆசிரியர்களும், பிரபல நாவலாசிரியர்களும், தொலைக்காட்சி நெறியாளர்களும், ஊடகவியலாளர்களும் உட்பட பல அரபு பிரபலங்களும், நடிகர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மலையாள நடிகை மஞ்சு வாரியர் போன்றோர் கலந்து கொள்கின்றனர்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக