முன்னெப்போதையும்விட இப்போது நம் தேசத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.
பள்ளிப்படிப்பு மட்டுமல்லாது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துதான் வருகின்றது. கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் மனிதனின்
வாழ்க்கையில் அவன் கற்கும் கல்வி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமோ அதனை ஏற்படுத்தாமல் இருப்பது மிகவும் வருத்தமே…! கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் சமூகத்தில் குற்றங்களும் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன, அதுவும் கல்வியாளர்கள் என்று அறியப்படுபவர்களால்! ஏன் இந்த முரண்பாடு? எந்தத் திசையில் சமூகத்தை வழிநடத்த வேண்டுமோ அப்படிப்பட்ட வல்லமை கல்விக்கு மட்டுமே உண்டு. இன்றைய கல்வித்திட்டம் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லையே ஏன்?
நெல்சன் மண்டேலா மிக அழகாகக் கூறினார்: "உலகை மாற்றியமைப்பதற்கான மிக வலிமையான ஆயுதம் கல்வி". ஆனால் நடைமுறையில் இருக்கக்கூடிய இன்றைய கல்வித்திட்டமே மாற்றப்பட வேண்டியதாக உள்ளது. அமர்த்தியா சென் அவர்கள், "நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சி என்பது பண முதலைகளைக் கொண்டு கணக்கிடப்படக் கூடாது. மாறாக, ஒவ்வொரு தனிமனிதனைக் கொண்டும் கணக்கிடப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கல்வி, சுகாதாரமும் கிடைக்கும்போது அவனது பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சியடையும்" என்றார். ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். கோத்தாரி அவர்கள் கூறினார்: "நாளைய தேசத்தின் தலையெழுத்தை வகுப்பறைகள் தீர்மானிக்கின்றன". ஆனால், இன்றைய கல்வி முறை சமூகத்தை மாற்றக்கூடியதாக இல்லை.
நாம் பயின்று கொண்டிருக்கும் கல்வித்திட்டம், ஆங்கிலேயரான மெக்காலே அவர்களால் உருவாக்கப்பட்டது. அவர் ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1835-ஆம் ஆண்டு இவ்வாறு உரையாற்றும்போது, "இந்தியா முழுவதும் நான் வலம் வந்துவிட்டேன். அங்கு ஒரு பிச்சைக்காரர்களையும் நான் பார்க்கவில்லை, அவர்களின் வாழ்வு சிறப்பாக உள்ளது. அதற்குக் காரணம் அவர்களின் ஆன்மீக உணர்வும், கலாச்சாரமும்தான். அவர்களை நாம் அடிமைப்படுத்துவது சாதாரண விஷயமல்ல" என்று கூறிவிட்டு, "அவர்களை அடிமைப்படுத்த வேண்டும்; அவர்களின் கல்வி முறையில் நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அப்படி செய்து விட்டால் அத்திட்டத்திலிருந்து வெளிவருபவர்கள் நிறத்திலும், வெளிப்புறத் தோற்றத்திலும் இந்தியர்களைப் போன்று இருப்பார்கள். ஆனால், அவர்களின் சிந்தனையும் செயல்பாடும் ஆங்கிலேயர்களைப் போன்று இருக்கும்" என்றார்.
அவர்களின் ஒட்டுமொத்தக் குழுவும் இதனை சாதித்திருக்கின்றது. இன்று நாம் உடுத்தக்கூடிய உடை தமிழன் என்ற அடையாளத்தை இழந்துவிட்டது. இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு அப்பால் இட்லி என்கின்ற உணவினை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும். அவர்களின் திட்டத்தில் அவர்கள் சாதித்துள்ளனர், நம்மை சிந்தனை ரீதியாக அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதுதான் உண்மை. ஆனால் அக்கல்வித்திட்டம் இறைமறுப்புக் கொள்கை மற்றும் உலகாதயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அது மாணவ சமூகத்தின் மத்தியில் பணம் சம்பாதிப்பதை மட்டும் தூண்டக்கூடியதாக உள்ளது. மாணவர்களைப் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக உற்பத்தி செய்கின்றது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு மிக ஆர்வத்துடன் எத்தனை நபர்கள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்கின்றார்கள்? இல்லை, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட கடினமான போக்கை இன்றைய கல்விமுறை உருவாக்கி இருக்கின்றது.
இன்று நடைமுறையில் உள்ள மெக்காலே கல்வித்திட்டம் நம்மிடம் இருந்த நல்ல பல முக்கிய அம்சங்களை அழித்துவிட்டது...!
- அறிவை வளர்ப்பதற்காகவே கல்வி என்ற சிந்தனையை ஊட்டுவதை அழித்து, பணம் சம்பாதிக்கவே கல்வி என போதிக்கின்றது. அதனால் மாணவர்களின் முக்கிய நோக்கம் நிறைய மதிப்பெண்கள், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் எனக் குறுகிவிட்டது.
- ஒழுக்கத்தைப் போதிப்பதை அழித்து, தமிழகத்தில் பள்ளி மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்கின்றான். கல்லூரி மாணவர்கள் தங்கள் முதல்வரை வெட்டிச் சாய்த்துள்ளார்கள். எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை இன்றைய கல்வி நிறுவனங்களில் அரங்கேறுகின்றன.
- சமூக அக்கறையை அழித்து, இன்று நம் தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சினை மது என்றாகிப் போயுள்ளது. ஆனால் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதைக் குறித்து எத்தனை முறை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்திருக்கின்றார்கள்? இல்லை, இல்லவே இல்லை. ஏன்?
- அனைவருக்கும் கல்வி கொடுக்காமல், இன்று பணக்காரர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் தரமான கல்வியினையும், ஏழைகள் அரசுக் கல்வி நிறுவனங்களில் தரம் குறைந்த கல்வியினையும் பெறுகின்றார்கள். தரமான கல்வியினை அனைவருக்கும் கிடைப்பதற்கான வழியினை இன்னும் ஏன் மேற்கொள்ளவில்லை?
- இன்று மாணவர்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக்கூடப் போராடக்கூடிய உணர்வை பார்க்க முடியவில்லை. தமிழகத்தில் இதற்கு முன் நடந்த போராட்டங்கள் அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. இன்று அது போன்று இல்லையே ஏன்?
- மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டாமல், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கான சமுதாயமாக இன்றைய மாணவ சமுதாயம் இல்லாமல் இருக்கின்றது. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் தற்கொலை நிகழ்வுகளும் அரங்கேறத்தான் செய்கின்றன.
- இன்றைய கல்வி முறை இறை உணர்வை ஊட்டவில்லை. இந்திய தேசம் ஆன்மீக பாரம்பரியம் கொண்டது. ஆனால் இறை உணர்வை எந்த அம்சத்தையும் இக்கல்வி முறை நமக்கு ஏற்படுத்தவில்லை. அதனால்தான் குற்றங்கள், பிரச்சனைகளும் அதிகமாக உருவாகின்றன.
நமக்குத் தேவை என்ன?
மாணவ இயக்கங்களும் கல்வியாளர்களும் மாணவ இளைஞர்களும் இன்றைய கல்வித்திட்டத்தைக் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். நமக்குத் தேவை அறிவை போதிக்கக்கூடிய கல்வித்திட்டம். அந்த அறிவு இறை உணர்வை ஏற்படுத்த வேண்டும், ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும், சமூக அக்கறையை ஊட்ட வேண்டும், தீமைகளை எதிர்த்து நிற்கும் போராட்ட உணர்வை வளர்க்க வேண்டும், தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட கல்வித்திட்டம் ஏற்படுத்தப்படுமானால் நாட்டிற்குச் சிறந்த அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் நல்ல குடிமக்களும் கிடைப்பார்கள்.
மாணவ இயக்கங்களும் கல்வியாளர்களும் மாணவ இளைஞர்களும் இன்றைய கல்வித்திட்டத்தைக் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். நமக்குத் தேவை அறிவை போதிக்கக்கூடிய கல்வித்திட்டம். அந்த அறிவு இறை உணர்வை ஏற்படுத்த வேண்டும், ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும், சமூக அக்கறையை ஊட்ட வேண்டும், தீமைகளை எதிர்த்து நிற்கும் போராட்ட உணர்வை வளர்க்க வேண்டும், தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட கல்வித்திட்டம் ஏற்படுத்தப்படுமானால் நாட்டிற்குச் சிறந்த அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் நல்ல குடிமக்களும் கிடைப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனம் கல்வியைக் குறித்துதான். மேலும், "ஒருவன் அறிஞன் என்று சொன்னால் அவன் இறைவனுக்கு அஞ்சக்கூடியவனாக இருக்க வேண்டும்" என்று குர்ஆன் கூறுகின்றது. இறைவனுக்கு அஞ்சக்கூடிய கல்விமுறை உருவானால் சமூகத்தில் மாற்றம் விரைவில் ஏற்படும். சரியான கல்வித்திட்டம் சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்கும்; சிறந்த மாணவ சமுதாயம் வலிமையான தேசத்தை உருவாக்கும். மாற்றத்தை வழிநடத்துவதற்கு நாம் தயாராவோம். புதிய கல்வித்திட்டத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம். மாற்றம் ஏற்பட்டே தீரும்!
M.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,
ஆராய்ச்சி மாணவர்,
ஜமால் முஹம்மது கல்லூரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக