இந்தியாவில் சிறைக் கைதிகளில் அதிமானோர் முஸ்லிம்களும், தலித்துகளும் ஆவர் என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
குஜராத் மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக முஸ்லிம்களும், தலித்துகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய-மாநில சதவீதத்தை விட அதிகமான முஸ்லிம்களும், தலித்துகளும் குஜராத் சிறையில் உள்ளனர்.
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் 13.4 ஆகும். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சதவீதம் 19 சதவீதம் ஆகும். முஸ்லிம் கைதிகளில் 17.1 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகள். 21 சதவீதம் பேர் விசாரனைக் கைதிகள்.
தேசிய அளவில் அட்டவணை சாதியினரின் மக்கள் தொகை சதவீதம் 16.2 ஆகும். ஆனால், சிறையில் உள்ள அட்டவணை சாதியைச் சார்ந்த கைதிகளில் 22.5 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகள். 21.3 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர்.
தேசிய அளவை விட குஜராத் சிறைகளில் முஸ்லிம், தலித் கைதிகளின் எண்ணிக்கை அதிகம் என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவிக்கிறது.
குஜராத்தில் தலித்துகளின் மக்கள் தொகை சதவீதத்தை விட நான்கு மடங்கு அதிகமாக சிறையில் தலித் கைதிகள் உள்ளனர். குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களில் 32.9 சதவீதமும், விசாரணை கைதிகளில் 23.4 சதவீதமும் தலித்துகள் ஆவர்.
குஜராத் மாநிலத்தில் தலித்துகளின் மக்கள் தொகை சதவீதம் 6.7 மட்டுமே. 2013 டிசம்பர் மாதம் வரை 3808 கைதிகள் குஜராத் சிறையில் உள்ளனர். இதில் 1,251 பேர் அட்டவணை சாதியினர் ஆவர். 624 பேர் பழங்குடியினர். 1,360 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் ஆவர். இதர பிரிவினர் 573 பேர். விசாரணை கைதிகளான 7604 பேரில் 1,778 பேர் அட்டவணை சாதியினர். 1,405 பேர் பழங்குடியினர். 2,718 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர். 1,703 பேர் இதர பிரிவினர் ஆவர்.
தலித், முஸ்லிம் கைதிகள் அதிகமானோர் உள்ள 2-வது மாநிலம் அஸ்ஸாம். இங்கு தலித்துகளின் மக்கள் தொகை சதவீதம் 7.2. ஆனால், சிறையில் உள்ள குற்றவாளிகளில் 18.2 சதவீதம் பேர் தலித்துகளாவர். 17.7 சதவீதம் விசாரணை கைதிகளும் தலித்துகளாவர்.
23.3 சதவீத குற்றவாளிகளும், 23.6 விசாரணை கைதிகளும் முஸ்லிம்களாவர். குஜராத் மாநில முஸ்லிம் மக்கள் தொகை சதவீதம் 9.1 ஆகும். 7,604 விசாரணை கைதிகளில் 1,796 பேர் முஸ்லிம்கள் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக