Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 நவம்பர், 2014

எச்சரிக்கை தமிழகம்!

எச்சரிக்கை தமிழகம்!
2016 தமிழக சட்டமன்ற தேர்தல். மற்ற அனைத்துக் கட்சிகளை விடவும் பா.ஜ.க பாய்ச்சல் காட்டுவது தெரிகிறது. மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி, மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து பெற்று வரும் வெற்றி, ஊடகங்களின் தொடர் ஆதரவு என சாதக அம்சங்கள் அதிகம் இருப்பதால் புத்துணர்ச்சியோடு வேலை செய்கிறது.
ஜெயலாலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த நிலையில் அ.தி.மு.க திசை தெரியாமல் நிற்கிறது. தி.மு.க.வோ கலைஞரின் அறிக்கையை தவிர வேறு
எதுவும் செய்யாமல் செயலற்று கிடக்கிறது. பிற கட்சிகள் ஏற்கனவே பா.ஜ.க வின் பிடியில் இருக்கின்றன.
இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் மீனவர் பிரச்சனையிலும் பா.ஜ.கவின் தமிழர் விரோதப் போக்கை பெரிதாக்காமல் அமுக்கும் வேலையை செய்கின்றன மோடி ஆதரவு தமிழ் ஊடகங்கள். மீனவர்களுக்கு தூக்கு என்ற செய்தியை விட மோடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து என்ற செய்திக்கு முக்கியத்துவம் தருகிறது தினத்தந்தி.
மற்ற ஊடகங்களை விடுங்கள், கலைஞர் டி.வி.யில் கூட தினம் தமிழிசையின் ராகம் பாடுகிறார்கள். மோடியின் முயற்சியால் மீனவர்கள் விடுதலையாம். அதனால் தமிழகமே மகிழ்கிறதாம் என்று செய்தி வாசிக்கிறார்கள். அ.தி.மு.க எனும் அரசியல் எதிரியை வீழ்த்த பா.ஜ.க எனும் நச்சுப் பாம்புக்கு தெரிந்தே விளம்பர வெளிச்சம் தருகிறார்கள். இந்த மீனவர் விடுதலையை எனும் சூழ்ச்சியை வைத்து தமிழகத்தில் பல நாடகங்களை வரும் நாட்களில் பார்க்கலாம். நடிகர் விஜய் இப்போது ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
இவை தவிர இன்னும் பல திசைகளில் வலை விரிக்கும் வேலையை பா.ஜ.க தமிழகத்தில் செய்து வருகிறது.
தருண் விஜய். ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த அம்பி. பஞ்சஜன்யா என்ற சங்கப் பரிவார இதழின் ஆசிரியர். இவருக்கு பரிவாரத்தால் தமிழகத்தில் ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது தமிழை வைத்து தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் வேலை. இந்த ஏய்ப்பில் ஏமாந்து நிற்பார் ஒரு மூத்த திராவிடவாதி. கவிஞர் வைரமுத்துதான் அன்னார். இந்த நயவஞ்சகர்களை அழைத்து விழா நடத்துகிறார். எங்கும் பாராட்டு மழை, ஊடக வெளிச்சம் என கன ஜோராக காரியம் நடக்கிறது பரிவாராத்திற்கு.
‘ஏய் தாழ்ந்த தமிழகமே’ என்று பொறுக்க முடியாமல் இப்படிக் கூவி அழைத்தார் ஏமாந்த சோனகிரிகளாக நின்ற தமிழர்களை பார்த்து அறிஞர் அண்ணா அன்று. அவர்கள் ஏமாந்த காலத்தில் ஏற்றங் கண்டவர்களை அடையாளம் கண்டு விழிப்படைய தூண்டினார். தன் வாழ்வை அந்தப் பணியில் அர்ப்பணித்தார்.
அவரின் பாசறையில் வந்தவர்கள் இன்று தமிழகத்தில் அடிக்கும் இப்படிப்பட்டக் கூத்துக்களை பார்த்தால் நொந்து வெந்து போயிருப்பார். இவர்கள் விழிப்பது எப்போது?
அதே போல் தொடர்ந்து நடிகர் ரஜினியை நெருக்கி வருகிறார்கள். அவர் பிடி கொடுக்காமல் இருக்கிறார். இவர்களும் விடுவதாக இல்லை. இப்போது ஒரு விருது கொடுத்து காத்திருக்கிறார்கள். இங்கே ரஜினி பற்றியும் பா.ஜ.க அவரை தொடர்ந்து நெருங்குவது பற்றியும் சில வரிகள்,
ரஜினி ஆன்மீகவாதி. மதவாதி அல்ல. அவரின் இந்த ஆன்மீக ஈடுபாட்டை வைத்துதான் இந்துத்துவ சக்திகள் அவரை எளிதில் நெருங்குகின்றன. லதா ரஜினிகாந்தின் பார்ப்பன குடும்பப் பின்புலம் இந்துத்துவவாதிகளுக்கு பெரிய பலம்.
அவரது படங்களில் முஸ்லிம்களையோ இஸ்லாத்தையோ இழிவாக சித்தரித்ததில்லை. ‘பாட்சா’ என்று முஸ்லிம் பெயர் வைத்து படம் எடுத்தார். அந்த நேரத்தில் அல் உம்மா பாஷா மிகப் பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
கோவை குண்டு வெடிப்பு நடந்து முஸ்லிம்கள் கூனிக் குறுகி நின்ற போது “முஸ்லிம் சகோதரர்கள் அதை செய்திருக்க மாட்டார்கள்” என்று பேட்டி கொடுத்தார்.
சமீபத்தில் மோடி அவர் வீட்டுக்கு வந்த நிகழ்வை சொல்லும்போது, “என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட வேண்டும் என்றார். அதனால் அழைத்தேன்” என்று வற்புறுத்தி வீட்டுக்கு வந்ததை போட்டு உடைத்தார்.
இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்கு சொல்ல வருவது என்னவென்றால் ரஜினியை ஒன்றும் பா.ஜ.க.வால் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர் அல்ல. அப்படிப்பட்ட சூழல் அவரை நோக்கி பின்னப்படுகிறது. இதை உடைக்க வேண்டும். முஸ்லிம்கள் அவரை நெருங்க வேண்டும். அமைப்புகளோ தனி மனிதர்களோ அதை செய்ய வேண்டும்.
ஃபாசிச இந்துத்துவ அபாயம் பற்றி சொல்ல வேண்டும். இந்த ஆட்சியில் தொடர்ந்து நடை பெற்று வரும் வெறுப்பு பிரச்சாரங்களை எடுத்து சொல்ல வேண்டும். தமிழகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை பற்றியும் அதை கெடுக்க இந்துத்துவ சக்திகள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றியும் விளக்க வேண்டும். அல்லாஹ் நாடினால் மாற்றம் உண்டாகும்.
ரஜினி ஒரு முடிவுக்கு வராத நிலையில் நடிகர் கமலையும் ஆழம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கமல் அன்றும் இன்றும் :
அன்று:
நான் அக்ரகாரத்தில் இருந்து பெரியார் திடலுக்கு தவழ்ந்து வந்த குழந்தை என்று சொன்னார்.
பாபரி மஸ்ஜித் இடித்த போது நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.
மருதநாயகம் படத்தை தொடங்கினார்.
எனது பெயரை பார்த்து பலர் நான் முஸ்லிமா? என்று கேட்பார்கள். அதை நான் மிகவும் ரசிப்பேன் என்று சொன்னார்.
இதனாலெல்லாம் அவரின் சமூகமான பார்ப்பனர்களாலும் இந்துத்துவவாதிகளாலும் வெறுக்கப்பட்டவர்.
இன்று:
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஹேராமில் ஆரம்பித்து உன்னை போல் ஒருவன், விஸ்வரூபம் என்று அது தொடர்கிறது. பா.ஜ.க வில் மகளிர் அணித் தலைவியாக பொறுப்பு வகித்த நடிகை கவுதமியுடன் இணைந்து வாழ்கிறார்.
தனது சமூகத்தின் பால் அவர் பரிவு காட்ட தொடங்கி இருக்கிறார். இது தவறில்லை. ஆனால் இந்துத்துவவாதிகள் அவரை நெருங்குவது போன்ற சித்திரம் கிடைக்கிறது. மோடியுடனும் தமிழிசையுடனும் தூய்மை இந்தியா விளம்பரத்தில் சாதாரணமாக நிற்கிறார். இந்த சாக்கில் அவரின் ரசிகர் மன்றங்களை பா.ஜ.க நெருங்குகிறது. இதுதான் அபாயம்.
இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகனின் மஹாபாரதம் நூலை இவர்தான் சமீபத்தில் வெளியிட்டார். மஹாபாரதம் நூல் எதற்காக என்று ஜெயமோகன் குறிப்பிடும் போது, பெரியாரும் அண்ணாவும் தமிழர்களின் சிந்தனையை கெடுத்து விட்டார்கள், அதை சரி செய்யவே மஹாபாரதம் எழுதுகிறேன் என்று சொன்னார். அந்த நூல் வெளியீட்டு விழாவில்தான் கமல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆனாலும் ரஜினியைப் போல் கமலும் ஒருப் புதிராகத்தான் இருக்கிறார். இப்போது திப்பு சுல்தான் படம் எடுக்கப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். ஃபாசிஸ்ட்டுகள் நெளிந்து கொண்டிருக்கிறார்கள். வேறு நடிகரை பிடிப்பார்கள் என்று தெரிகிறது. விஜய் இப்போது வலிய வருகிறார்.
கட்சிக்கு பத்து கோடி பேரை சேர்க்கும் திட்டம் ஒன்றை இப்போது அறிவித்து இருக்கிறார்கள். இதன் வீச்சு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதிகம் என்றால், ஆப்பிரிக்க நாடான உகாண்டா வரைக்கும் நீள்கிறது. நண்பர் ஒருவர் உகாண்டா தமிழ் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இந்தியன் அசோசியேஷனிலும் உறுப்பினராக இருக்கிறார். அங்கே இவருடைய வடஇந்திய நண்பர் ஒருவர் இவரிடம், ‘பாய் இங்கே நாங்கள் பி.ஜெ.பி.க்கு ஆள் சேர்க்கிறோம், உங்கள் சமூகத்திடமும்(தமிழ் மற்றும் முஸ்லிம்) சொல்லி சேர சொல்லுங்கள்’ என்றிருக்கிறார்.
அதற்கு நண்பர் ‘நான் பெரியாரின் பூமியில் இருந்து வந்தவன். திராவிடக் கொள்கை உடையவன். என்னால் பி.ஜெ.பி.க்கு ஆள் சேர்க்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்.
இன்னொரு சம்பவம். தலைநகர் கம்பாலாவில் ஒரு நிகழ்ச்சி. ஒருப் பெரிய நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தும் உணவுத் திருவிழா. அங்கே ஒரு ஆப்ரிக்க வாலிபனும் ஒரு ஆப்ரிக்க இளம்பெண்ணும் ஒரு பாரத்தை போவோர் வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் ஒருவர் போய் என்னவென்று பார்த்திருக்கிறார். ஒன்றுமில்லை. பி.ஜெ.பி இல் சேருவதற்கான உறுப்பினர் பாரம் தான் அது.
இதை அந்த நண்பர் சொன்னதும் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு நண்பர் சொன்னார். ‘ஆனாலும் முஸ்லிம்களெல்லாம் பா.ஜ.க வில் சேர மாட்டார்கள் பாய்’. உடனே முதல் நண்பர் சற்று ஆவேசம் கொண்டவராக,
பாய் ஊர்ல உங்க வீடு எங்க பாய் இருக்கு?
ஆசாத் நகரில்.
அந்த திருவாளர் ஆசாத் இப்போது குமரி மாவட்ட பா.ஜ.க வின் சிறுபான்மை பிரிவில் இருக்கிறார்.
கேட்டவர் முகத்தில் ஈ ஆடவில்லை.
- முஹம்மது ஃபைஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக