குறிவைக்கப்படும் டெல்டா !
தமிழகத்தின் டெல்டா மாவட்டமானது தஞ்சை,திருவாரூர், நாகையாகும். இந்த மாவட்டமானது எண்ணற்ற விலைமத்திபில்லா வளங்களும், நிலங்களும் கொண்டது. உலக நாடுகளின் உணவு தேவைகளில் அரிசியும் ஒன்று, இந்த அரிசியை அதிகமாகவும் தரமாகவும் உற்பத்தி செய்யும் மாவட்டம் தான் தஞ்சை. இந்த மாவட்டங்களின் வளங்களை சொரண்டவும் அந்த வளங்களை அழிக்கும் நோக்கத்தில் தான் இந்த மீதேன் எடுக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் எடுத்துரைத்தால் மீதேன் வாய்வு தானே எடுக்கபோகிறார்கள் அதனால் நமக்கு என்ன ஆபத்து என்று பதிலளிக்கின்றனர். அரசு தரப்பில் இதை பற்றி கேட்டால் இந்த திட்டத்தினால் உங்களுக்கு பளப்பாளப்பான சாலைகளும் நவீன மருத்துவ மனைகளும் அமையும் அதனால் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லி மலுப்பினர். உண்மையில் மீதேன் எடுக்கும் திட்டத்தினால் நமக்கு நன்மையா? தீமையா?
தமிழகத்தில் எங்கும் மீதேன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமும், பேரணியும்,இரயில் மறியலும்,சாலைமறியலும், கருத்தரங்களும், போரட்டமும் ஏன் நடக்கிறது?
பதில் மீதேன் திட்டத்தினால் நமக்கு மிகபெரிய ஆபத்து தான் இருக்கிறது.மீதேன் என்பது ஒரு வாய்வு இது மண்ணில் 8000 அடிக்கு அடியில் நிலகறிக்கு இடையில் இருக்கும் இதை எடுக்க hydraulic Fracking drill என்ற முறையை பயன்ப்படுத்தவுள்ளனர். இந்த முறை அமேரிக்க, பிரித்தனிய நாடுகளிலும், இரசியா நாடுகளில் கைவிடப்பட்டுள்ளது.ஆனால் இந்த திட்டத்தை நமது நாட்டில் அமல்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதுவும் வளம் நிறைந்த டெல்டா மாவட்டங்களில் ஏன்? hydraulic Fracking என்ற முறை தான் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் முறை, இந்த முறையை பற்றி அறிய முயலும் போது நமது கண்களுக்கும் முன் வருவது மீதேன் எதிர்ப்பு குழுவின் கருத்தரங்கம் தான். முழு தகவல்களையும் நமக்கு எடுத்துரைத்தவர்களுக்கு நன்றி. அவர்கள் என்னிடம் எடுத்துரைத்ததை நான் உங்களுக்கு கொடுக்கிறேன்.
மண்ணில் 8000 அடி ஆளத்திற்கு துலையிட்டு செல்லும் ஒரு ட்ரில்லை பூமிக்கு செலுத்துகின்றனர். அது குடிநீரின் படுக்கையை கடந்து நிலகரி படுக்கைக்கு சென்றடையும் பின் அந்த இயந்திரம் பக்கவாட்டில் 3 கி.மீ. தூரம் செல்லும். அடுத்து அந்த இயந்திரம் வெளியே எடுக்கப்படும் பின் அந்த துளைகளில் ஓர் குழாயினை செலுத்துவர் அந்த குழாய் சக்தி வாய்ந்த காற்றினால் நிலக்கரி படுகையில் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தும். பின் அந்த குழாய்ய் வெளியில் எடுக்கப்படும், அடுத்து அந்த துளையில் தண்ணீர்,வேதியல் பொருள் மற்றும் மண் ஆகிய கலவையினை அந்த துளையில் செலுத்தப்படும் அந்த திரவம்துளையின் அடி வரை சென்று நிலகரி படுகையில் ஒட்டி இருக்கும் மீதேன் வாய்வுகளிடம் கலந்து இருக்கும் பின் அந்த திரவம் உறிஞ்சு எடுக்கும் போது திரவத்தோடு அந்த மீதேன் வாய்வும் சேர்ந்து வரும்.பின் அந்த திரவத்திலிருந்து மீதேன் பிரித்து எடுக்கப்படும்
முன் பாகத்தில் ஒரு திரவம் பற்றி கூறியிருந்தேன் அல்லவா அந்த திரவத்திற்கு சுமார் 65,00,000 காலன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் மற்றும் 500 லாரி மணலும் தேவைபடும்.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
இந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்.
1 நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது.
2 மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்குஉப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.
3 மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. (அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point என்பர்.) அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.
4 நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.
5 இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள் , தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.
6 மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள்இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.
7 தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
8 இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலைஅமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்குஇருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால்அழிக்கப்படும்.
9 இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக்குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது தவறுதலாக தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.
மீதேன் வாய்வு எடுக்கும் முறையை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி நம் நாட்டு நலம் கருதியும், மக்கள் நலன் கருதியும் இங்கு நான் உங்களுக்கு என்னால் இயன்ற வரை எடுத்துரைத்துள்ளேன். இந்த திட்டத்திற்கு முதலில் எதிர்த்தவரும் இந்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எத்திவைத்த நம்மாழ்வார் இப்பொழுது நம்மிடம் இல்லையென்றாலும் அவரின் போராட்டத்தை நாம் முன் நின்று நடத்தவேண்டும். இத்திட்டத்தை எதிர்த்த நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் போராட ஆரம்பித்து இருப்பது ஒரு ஆறுதல். இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழினம் உணவிற்காக நிரந்தரமாக அடுத்த நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு மட்டுமல்ல, முழுமையாகவும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வேலை செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக