மும்பை:“மக்களை துச்சமாக நினைக்காமல், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று மகாராஷ்டிர மாநில புதிய பாஜக அரசுக்கு சிவசேனை கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சேவசேனை கட்சிப் பத்திரிகையான “சாம்னா’வில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணமான புதிதில் மாமியாரை அன்போடு நடத்தும் புது மணப்பெண் போல தற்போது மகாராஷ்டிர மாநில அரசு உள்ளது. இதில், மாமியார் இடத்தில் மகாராஷ்டிர மக்கள் உள்ளனர்.
புதிய அரசு, மக்களை துச்சமாக நினைத்து விடக் கூடாது. அரசு தவறு செய்தால், அதைத் தட்டிக் கேட்டும் அதிகாரம் மக்களிடம் உள்ளது.
தேர்தல் பிரசாத்தின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு புதிய அரசிடம் மந்திரக்கோல் இல்லை.
ஆனால், இந்த மாநிலத்தில் முதல் முதலாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் எதிபார்ப்புகள் சாம்பலாக்கப்பட்டன. தீயில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிய முதல்வர் செயல்பட வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக