”வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத சலுகை உருது மொழிக்குக் கொடுக்கப்படுகிறது. இது கொடுமையிலும் கொடுமை. அப்படி என்ன சிறப்பிருக்கிறது அந்த மொழியில்? உருது மொழியைக் கற்பிக்க அரசு ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவும் அந்த ஆசிரியர்கள் முசுலீமாகத்தான் இருக்க வேண்டும் என்பது இன்றைய நிலை. உருது தெரிந்த இந்து ஆசிரியர்களை நியமிப்பதில்லை. ஆகவே அரிய எழுத்து உள்ள உருது மொழிக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறோம். வானொலியில் உருது மொழியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு முசுலீம்களை மட்டும் நியமிக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழி செய்தி வாசிப்பாளர்களிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கப்படுகிறது… இதனுடைய ஆழத்தையும் அகலத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”
- ‘இந்து மக்களுக்கு உரிமையே கிடையாதா?’ இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 21.
வளமான இலக்கண மரபும், செறிவான இலக்கியங்களையும் கொண்டுள்ள உருது மொழி, இந்த மதவெறியர்களின் முசுலீம் எதிர்ப்பு அரசியல் அட்டவணையில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. ஏனைய தேசிய மொழிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச, பெயரளவு சலுகைகள் கூட உருதுவுக்கு வழங்கப்படாததன் காரணமும் அதுவே. நடப்பிலிருக்கும் ஒன்றிரண்டு அற்பச் சலுகைகள் கூட தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. மதம் கடந்து சில கோடி மக்கள் பேசும் உருது மொழியை, முசுலீம்கள் பேசுகின்ற துரோகிகளின் மொழியாகச சித்தரித்து ஒழிக்கப் பாடுபடும் இந்துமத வெறியர்களின் முயற்சி இன்றல்ல, காலனிய ஆட்சி காலந்தொட்டே துவக்கப்பட்டது. இந்தியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதற்காக உருது மொழியை அழிக்கும் சதி அப்படித்தான் துவங்கியது.
ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு இன்றைய இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை ஆண்டவர்கள் முகலாய மன்னர்கள். அவர்களின் ஆட்சி மொழியாகத் திகழ்ந்தது பாரசீகமாகும். அதனால்தான் அன்று பல்வேறு சமஸ்கிருத இலக்கியங்கள் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. ஆள்வோரின் மொழி என்ற தகுதியில் பாரசீகம் மக்களிடையே மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. அப்படித்தான் வட இந்தியாவின் வட்டார வழக்கு மொழியோடு (இந்தியின் மூல வடிவம்) பாரசீகம் இணைந்து உருது மொழி தோன்றியது. மக்களிடையே பரவவும் ஆரம்பித்தது.
பின்னர் தோன்றிய பக்தி இயக்கம் காரணமாக உருது, மதங்கடந்து மக்களிடையே வேர்விட ஆரம்பித்தது. மொகலாயர்களின் இறுதிக் காலத்தில் தெற்கே தக்காணத்தில் ஆட்சி செய்த சுல்தான்களின் அரசவை மொழியாகவும் உயர்ந்தது. அதேபோன்று வட மாநிலங்களின் பல பகுதிகளில் உருதுவும் வட்டார வழக்கு மொழியும் இணைந்த இந்துஸ்தானியும் மிகவும் நெருக்கமான மொழிகளாகும். இன்றைக்கு உருது மொழியை ஒழிப்பதற்கு இந்து மதவெறியர்கள் மேற்கொள்ளும் முயற்சியினை அன்று சமஸ்கிருதத்தை ஒழிப்பதற்கு முகலாயர்கள் மேற்கொள்ளவிலை. இருப்பினும் தமது சமூக, அரசியல் அந்தஸ்து குறைந்து போனதன் காரணமாக சனாதனிகள் முகலாயர் மேல் வெறுப்புக் கொண்டிருந்தனர். வெள்ளையர்களின் வரவு அவர்களின் வன்மம் நிறைவேற அடி எடுத்துக் கொடுத்தது.
காலனிய எதிர்ப்புப் போராட்டம் என்பது முசுலீம் எதிர்ப்பை உள்ளடக்கிய இந்து தேசியமாக இருந்தது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உகந்ததாக இருந்தது என்பதையும் இந்நூலில் பலமுறை பல பிரச்சினைகளுக்காகப் பார்த்திருக்கிறோம். அத்தகைய இந்து தேசியத்தின் பொது மொழியாக இந்தி வரவேண்டும் என்பதற்காக காங்கிரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சனாதனிகள் ஆரம்பம் முதலே பாடுபட்டு வந்தனர். இவற்றின் அடிப்படையில் உருது மற்றும் இந்துஸ்தானி மொழிகளைப் புறந்தள்ளும் வேலையும் தொடங்கியது. வெள்ளையர்களும் இதற்கு ஆதரவளித்தனர்.
1947 அதிகார மாற்றத்திற்குப் பின்னர், ‘தேசிய மொழி’ப் பிரச்சினை வந்தபோது ஆரம்பத்தில் உருது கலந்த இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பதாக நடித்த காங்கிரஸ் கும்பல், பின்னர் தேவநாகரி எழுத்திலமைந்த சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை ஆதரித்தது. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நகல் பற்றிய காங்கிரஸ் கட்சியின் வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 78 வாக்குகளும், இந்துஸ்தானிக்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. இப்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் மட்டுமல்ல, ஆரம்பம் முதலே காந்தி, நேரு கும்பலும் உடந்தையாக இருந்தனர்.
மேலும் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தி என்பது வட மாநிலங்களில் நிலவிய மைதிலி, அவதி, போஜ்புரி, கடி(ரி) போலி, மற்றும் இந்துஸ்தானி போன்ற பல்வேறு தனித்தனி மொழிகளை, வழக்குகளை அழித்து செரித்து உருவாக்கப்பட்டதாகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் உருது கணக்கில் எடுக்கப்படவில்லை. இவ்வளவிற்கும் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். உருதுவுக்கென்று தனி மாநிலம் இல்லாததுபோல், கல்விக்கொள்கையிலும் உருது புறக்கணிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக உருது அறிவிக்கப்பட்டதும் இங்கே துரோகிகளின் மொழியாக அது சித்தரிக்கப்பட்டது.
1947-க்கு பிறகு உருது மொழி நீடிக்க வேண்டுமானால், ”தேவநாகரி வரி வடிவத்தை ஏற்க வேண்டும், உருதுவில் உள்ள பாரசீகச் சொற்கள் களையப்பட வேண்டும், உருதுக்கென உள்ள ஒலி அமைப்பின் கறார்த் தன்மை தளத்தப்பட்டு தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்” என்று இந்து மதவெறியர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். பார்ப்பனியச் சுத்திகரிப்பு நடந்த பிறகு உருது உருதுவாக இருக்க முடியுமா? திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழைத் தவிர ஏனைய மொழிகள் சமஸ்கிருத மயமாக்கப்பட்டது இப்படித்தான் என்ற வரலாறு அக்கேள்விக்கு விடையளிக்கிறது.
மேலும் பாரசீகக் கலப்பு இல்லாத வட இந்திய மொழிகளே இல்லை என மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிருஜ் பாசா, கடிபோலி, மராத்தி போன்றவை உருது – பாரசீக இலக்கணத்தை ஏற்றுக்கொண்ட மொழிகள்தான். எனவே பாரசீக கலப்பு என்று கூறி உருதுவைத் தூற்றுவது ஒரு மோசடி. மேலும் உருது ஒரு மதத்தினரின் மொழியாக மட்டும் இருக்கவில்லை. இந்து மதவெறியர்களால்தான் அப்படி ஆக்கப்பட்டு விட்டது. மிகச்சிறந்த உருது இலக்கியவாதிகளான தயாசங்கர், லல்லுலால், ராஜாசிவ சங்கர் பிரசாத், கிஷன்சந்தர் போன்றோர் ‘இந்துக்’ குடும்பத்தில் பிறந்தவர்களே. முன்னர் உருது வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்த ஜகன்னாத் ஆசாத் ஒரு ‘இந்து’தான். பல்வேறு கஜல் பாடகர்கள் உருதுக் கவிதைகளைப் பாடுகிறார்கள். வாஜ்பாயி உள்ளிட்டு பல வட இந்தியப்பேச்சாளர்கள் உருது மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தித் திரைப்படம் – பாடல் இரண்டிலும் உருது தவிர்க்க முடியாத மொழியாகத்தான் இருக்கிறது. உருது பொது மக்களின் மொழி என்பதற்கு இப்படிப் பல சான்றுகள் உண்டு.
இருப்பினும் வாழ்வின் பல தளங்களிலும் ஊடுருவிவிட்ட இந்து மதவெறி உருதுவைப் புறந்தள்ளுவதில் வெற்றி பெற்றவிட்டது. மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தச் சொன்னபோது வட மாநில முதலமைச்சர்கள் உருதுவை ஏற்கவில்லை. எட்டாவது அட்டவணையில் செத்த பாடையான சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட வேண்டும் எனக் குளிப்பாட்டியவர்கள், மக்கள் மொழியான உருதுவைத் தள்ளி வைத்தார்கள். இந்தி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் பல்வேறு தேசிய இன மொழிகளுக்கான உரிமைகளும், தகுதிகளும் மறுக்கப்பட்டன. இதில் முக்கியமான சேதாரம் உருதுவுக்கு நடத்தப்பட்டது. குறிப்பாக உருது தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட்டது.
‘இந்தி’யை பெரும்பான்மையினரின் மொழியாகக் காட்டுவதற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் மோசடிகள் நடத்தப்பட்டன. உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவரையெல்லாம் ‘இந்தி’ பேசுபவராக மாற்றினாரர்க்ள. 1981 கணக்கெடுப்பில் நடந்த இம்மோசடியை எதிர்த்து பல உருது எழுத்தாளர்கள் வழக்கு தொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றும் அலிகார் முசுலீம் பல்கலைக் கழகத்தைத் தவிர முழுமையான உருதுக் கல்வி எங்கும் கிடையாது. சில மதராஸாக்கள், முசுலீம் தன்னார்வக் குழுக்கள் போன்ற அரசு சாரா நிறுவனங்களின் மூலமே ஓரளவு உருதுக் கல்வி இருந்து வருகிறது.
இந்து மதவெறியரிடம் அடிமேல் அடிபட்டு நொந்திருந்த முசுலீம் மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும், (இங்கே பா.ஜ. கூட்டணியில் இருந்து கொண்டே உருது அகாதமியை கருணாநிதி அறிவித்ததுபோல) என்பதற்காக உ.பி. மாநிலத்தில் உருதுவை இரண்டாம் ஆட்சி மொழியாக காங்கிரஸ் கட்சியினரும், முலாயம் சிங் யாதவும் அறிவித்தனர். அதைச் சாக்கிட்டே இந்து மத வெறியர் பல கலவரங்களை நடத்தி எண்ணிறந்த முசுலீம்களைக் கொன்றனர். பெங்களூர் தொலைக்காட்சியில் 10 நிமிடம் உருதுச் செய்தியறிக்கை ஒளிபரப்பியதற்காக, காவிரியை முன்னிட்டு தமிழர்களை எதிர்த்து வந்த கன்னட இனவெறி இந்து வெறியாக மாற்றப்பட்டு கலவரம் நடந்து பல முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.
இப்படித்தான் வளமையும் பாரம்பரியமும் கொண்ட உருது மொழி ஒரு நூற்றாண்டு காலத்தில் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறது. உருதுவை முசுலீம் மொழியாக்கியது போல இந்து, முசுலீம், சீக்கியர் என அனைத்து பஞ்சாபியராலும் பேசப்பட்ட பஞ்சாபி மொழியை சீக்கிய மொழியாக்கியதும் இந்து மதவெறியர்களே. மக்கள் தொகை கணக்கெடுப்பில் பஞ்சாபி இந்துக்களை ‘இந்திதான் தாய்மொழி’ என அறிவிக்க வைத்தனர்; பஞ்சாபி மொழியின் வரிவடிவமான குர்முகியை நசுக்கி தேவநாகரியைப் புகுத்தினர். இவற்றின் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். அதேபோல காஷ்மீர் இந்துக்களின் தாய்மொழியாக இந்தியை அறிவிக்க வைத்து, காஷ்மீர் மொழி முசுலீம்களுக்கானது என மாற்ற முனைபவர்களும் இவர்கள்தான். காலனிய காலந்தொட்டே இந்தியைத் தேசிய மொழியாக்குவதற்கு இந்து மத வெறியர்கள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை.
எனவே பலகோடி மக்கள் பேசும் உருது மொழிக்கு உரிய தகுதிகள் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சலுகைகள் ஏதும் இல்லாமல் சாகடிக்கப்படும் நிலையில் கூட உருதுவுக்குரிய சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கோருவது கடைந்தெடுத்த கயவாளித்தனமாகும். அதிலும் உருதுமொழி செய்தி வாசிக்க முசுலீம்களுக்கு மட்டும் இடம் கொடுத்து, தமிழ் செய்தி வாசிப்பிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கலாமா என இந்து முன்னணி கேட்கிறது. அதாவது தமிழர்களில் முசுலீம்கள் கிடையாது என்பதே அதன் சாரம். இந்தி எதிர்ப்பில் வீரம் செறிந்த தமிழ் மக்களின் போராட்டத்தையடுத்து, இங்கே இந்தி பருப்பு வேகாது எனத் தெரிந்து, தமிழ் மொழியே இந்து மொழிதான், தமிழர்கள் இந்துக்கள்தான் என்று காட்டி, முசுலீம்களுக்கு இங்கே இடமில்லை என்று – மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் இலக்கணத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு பொழிப்புரை எழுதப்படுகிறது.
பார்ப்பனீயத்தின் முடிவுரையை நாம் எழுதுவது எப்போது?
Source:
http://www.vinavu.com/2012/06/28/conversion-17/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக