"காயிதே மில்லத்"..
"கண்ணியத்திற்குரிய
காயிதே மில்லத்" என்று போற்றப்படும் ஜனாப் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில்
சாகிப், இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர்.
திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல்
பிறந்தவர். காயிதேமில்லத் என்ற அரபி சொல்லுக்கு "மக்களின் வழிகாட்டி"
என்று பொருள்.
தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல்
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபட துவங்கினார்.
1936_ம் ஆண்டு
இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு
அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
"இந்தியா
தான் எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்' என்று அதிக
எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இங்கே தங்கிவிட்டதால், அவர்களுக்காக
கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கி விட்டு.. 1949-ல் 'இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதேமில்லத். இதன் முதல் மாநாடே
சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் தான் நடந்தது.
1971 ல்
பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்தபோது, "தனது ஒரே மகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயார்" எனக்கூறி
அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில்
மாநில அரசுக்கு உரிய பங்கு கோரி பெற்றுத் தந்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய
மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என ஓங்கி முழங்கியவர்.
அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக
விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு
கொண்டிருந்தார்.
கேரளா "மஞ்சேரி" மக்களவை
தொகுதியிலிருந்து மூன்று முறை (1962,
1967, 1971) தொகுதிக்கு சென்று
வாக்கு சேகரிக்காமலே வெற்றி பெற்ற மகத்தான தலைவர். அவ்வளவு தூரம் தொகுதி மக்களின்
செல்வாக்கை பெற்றவர்.
அன்றைய சென்னை மாநிலத்தின் சட்டமன்ற பிரதான
எதிர்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். 1967ல் திராவிட
முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும்
காயிதே மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி
ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால்
சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக
ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில்
திட்டக்குழு, சுங்கவரி கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில்
உறுப்பினராக விளங்கினார்.
சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டவர்.
தமிழகத்தில் 14 இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர். அடக்கமும் ஒழுக்கமும்
நிறைந்த நன்னடத்தையால் அனைத்து தரப்பினராலும் "கண்ணியத்திற்குரிய காயிதே
மில்லத்" என அன்புடன் அழைக்கப்பட்டார். இவர் 5-4-1972ல் மரணித்தார். மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில்
சாகிபுக்கு வயது 76.
அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து
கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
நன்றி: விக்கி பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக