Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 ஜூலை, 2012

சிரிப்பு – ஆரோக்கியத்தின் முதலீடு!


‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு ப்போகும்’- என்பது பழமொழி.
சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.
சிரிப்பு வெறும் ஒரு முகபாவம் அல்ல. உடல் உறுப்புகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்ஸைம்களும், ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகிறது.
சிரிப்பு மூளைக்கு அளிக்கும் செய்தியின் மூலமே இவை உற்பத்தியாகின்றன. உடலில் உள்ள செல்களை சிரிப்பு செயல்பட தூண்டுகின்றது. இதன் மூலம் இயற்கையிலேயே நமது உடலில் ஆண்டிபயாட்டிக்குகள் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து நோய்க் கிருமிகளை எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.
சிரிப்பின் மூலம் நாம் பெறும் பலன்கள்

1.சிரிக்கும் பொழுது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்க காரணமாகிறது.
2.மன அழுத்தத்தை குறைக்கவும் சிரிப்பால் முடியும்.
3.சிரித்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
4.தசை நார்களின் இறுக்கத்தை குறைக்கவும், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்களை குறைக்கவும் சிரிப்பால் முடியும்.
5.வயிறு குலுங்க சிரிப்பது வயிற்றுக்கு பயிற்சியாக மாறுகிறது.
6.நீண்ட சிரிப்பின் மூலம் உடலில் அதிக கலோரி எரிந்துவிடும்
7.சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது. இது உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.
8.உடலில் ஆண்டிபயாட்டிக்குகள் அதிகரிக்க சிரிப்பால் இயலும். இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
9.சிரிக்கும் பொழுது மூளையில் அதிகமாக எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கிறது. இது சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்.
10.மன அழுத்தம் மூலம் சுரக்கும் கார்டிஸோல்(cortisol) என்ற ஹார்மோனின் அளவை குறைக்க சிரிப்பால் முடியும்.
ஆயுளை அதிகரிக்கும் மூலிகை
சிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசரமான நமது வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. டென்சன் நமது ஆயுளை வீழ்த்துகிறது. இங்கேதான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுளை அதிகரிக்கச் செய்யும் மூலிகையாக சிரிப்பு விளங்க காரணம் என்ன?
1. சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கிறது.
2.நிராசையில் இருந்து சிரிப்பு நம்மை விடுவிக்கிறது
3.கவலைகளை காற்றில் பறத்த சிரிப்பால் இயலும்
4.சிரிப்பு கோபத்தின் தீயை அணைக்கிறது
5.சோகத்தை அகற்றி உள்ளத்தை கிளர்ச்சியடையச் செய்யும்
6.இதயத் துடிப்பை சாதாரணை நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது
7.சிரிக்கும் பொழுது வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.
உள ஆரோக்கியத்திற்கு சிரிப்பு மருந்து
ஆரோக்கியமான நன்மைகளுடன் சிரிப்பால் மனரீதியான நன்மைகளும் விளைகின்றன. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் உறுதியை சிரிப்பு தருகிறது. மன இறுக்கம், கவலை, அன்றாட வாழ்வின் டென்ஷன் ஆகியவற்றில் இருந்து மீள சிரிப்பு உதவுகிறது.
நல்லுறவுகள் உருவாக
மனித சமூகத்திற்கு கிடைத்துள்ள ஒரு பெரிய கொடைதான் ஹியூமர் சென்ஸ் என அழைக்கப்படும் நகைச்சுவை உணர்வு. நகைச்சுவையான ஒரு செயலை கண்டாலோ அல்லது வார்த்தைகளை கேட்டாலோ சிரிக்க முடிவதே ஒரு பாக்கியம்தான். சிரிப்பவர்களுக்கு பாஸிடிவ் எனர்ஜி அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்கள் எங்கும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடுவார்கள். இரண்டு நபர்களுக்கு இடையேயான அகலத்தை குறைக்க சிரிப்பால் முடியும். சிரிக்காத நபர்களுடன் யாரும் எளிதில் நெருங்கமாட்டார்கள். சிரிப்பவர்களால் எங்கும் நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும். அவர்கள் சமூகத்தில் விரைவில் பிரபலமாகிவிடுவார்கள்.
சிரிப்பிற்கு 50 மதிப்பெண்கள்!
சிறந்த ஆளுமையின் அடையாளமாக சிரிப்பு விளங்குகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு இண்டர்வியூவிற்கு(நேர்முகத் தேர்விற்கு) செல்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். ஃபஸ்ட் இம்ப்ரஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஸன் என கூறுவார்கள். அதாவது முதலில் ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கமே சிறந்ததாகும். இங்கே உங்களது அகடாமிக் தகுதிகளை விட உங்களது மிடுக்குத்தனத்திற்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். காரணம் ஒரே தகுதிகளைக் கொண்ட பலர் நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிறந்த நபரை தேர்வுச்செய்யும் அளவுகோலாக அவர்களின் ஆளுமைத்திறன் கவனத்தில் கொள்ளப்படும். ஆளுமைத் திறனுக்கு ஆக்கம் கூட்டும் சிரிப்பு உங்கள் முகத்தில் மலர்ந்தால் நீங்கள் மிடுக்கான நபர் என்பது நேர்முகத்தேர்வை நடத்துபவர்களுக்கு புரிந்துவிடும். உங்களது ஒரு சிரிப்பில் 50 மதிப்பெண்களை நீங்கள் தட்டிச் செல்லலாம்.
முகம் மனதின் கண்ணாடி!
ஐரோப்பிய நாடுகளிலும், சவூதி போன்ற அரபு நாடுகளிலும் பணியாற்றும் போலீசாரிடம் கலாச்சாரத்தை மதிக்கும் பண்பு காணப்படும். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தால் ‘வாடா’ ‘போடா’ போன்ற அவர்களது மொழியில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். குற்றம் செய்த நபரால் முகத்தை நோக்கி சிரிக்க முடியாது என்ற மனோதத்துவத்தை புரிந்துகொண்டு அவர்களுடைய அணுகுமுறை அமைந்திருக்கும். உங்கள் முக பாவத்திலிருந்தே உங்களது தவறுகளை கண்டிபிடித்து விடலாம். ஆகையால்தான் முகத்தை  மனதின் கண்ணாடி என்கிறோம்.
நபிகளாரின் வாழ்வினிலே…
சரி, இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் சிரிப்பு எவ்வாறு இடம் பெற்றிருந்தது என்பதை சற்றுப் பார்ப்போம்:
ஜாபிர் பின் சமுரா அறிவிக்கின்றார். நபிகளுக்கு முன்னால் அவரது தோழர்கள் சிலபோது கவிதை பாடுவார்கள். சிலபோது ஜாஹிலிய்யாக் கால விசயங்களைக் கூறிச் சிரிப்பார்கள். அதை நபிகள் ஒருபோதும் தடுத்ததில்லை
நபிகள் தனது கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்துள்ளார்கள் என்று இப்னு மஸ்ஊத் கூறுகின்றார்.
காஃப் இப்னு மாலிக் பின்வருமாறு அறிவிக்கின்றார். நபிகளுக்கு சந்தோஷமேற்பட்டால் அவரது முகம் ஒளிவீசும். அது பௌர்ணமி நிலவின் துண்டுபோல் ஜொலிக்கும். (புஹாரி, முஸ்லிம்)
நபிகள் தனது மனைவிகளுக்கு மத்தியிலும் மிகப்பெரும் நகைச்சுவையாளராக விளங்கினார் என்று அனஸ் பின் மாலிக் கூறுகின்றார்.
ஆயிஷா அறிவிப்பதைப் பாருங்கள். ஒரு நாள் எனது வீட்டில் நபிகளும் சௌதாவும் இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதை கொண்டு வந்து சௌதாவிடம் உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உணது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவளின் முகத்தில் பூசினேன். நபிகள் எனக்கும் அவளுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவரது முழங்கால்களைத் தாழ்த்தினார். நான் அப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபிகள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள். (அபூயஃலா)
நபிகளைவிட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் கூறுகின்றார். (திர்மிதி, அஹ்மத்)
உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்(இப்னுஹிப்பான், திர்மிதி)
சிரிப்பு நமது மொத்த குணநலனையும் மாற்றிவிடும் என்பதை புரிந்துகொண்டோம். ஆகையால் நல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் நன்றாக சிரியுங்கள். அவ்வாறு சிரிப்பின் மூலம் உங்களது மதிப்பு உயரட்டும்! அதேவேளையில் அளவுக்கதிகமாக சிரித்து விடாதீர்கள். நம்மை தவறாக கருதிவிடுவார்கள்
Thanks: thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக