Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 16 ஜூலை, 2014

பத்ருப் போர் – நீதிக்கான இடையுறாத போராட்டத்தின் உத்வேகம் !


நீதிக்கான போராட்டத்தின் வற்றாத நீரூற்றாக உத்வேகம் அளிப்பதே பத்ருப்போர். நீதிக்காக ஏங்குபவர்களுக்கு பத்ரு என்றைக்குமே அடங்காத ஆவேச உணர்வாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை நீதி என்பது உயிரைகொடுத்தேனும் நிலை நாட்டப்பட வேண்டும். காரணம், உலகின் சமநிலையை நிலைநிறுத்துவதற்கான ஆணிவேராக நீதி அமைந்துள்ளது.

பத்ருக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, ஏகத்துவ நம்பிக்கையை பாதுகாக்க நபி (ஸல்) அவர்கள் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டம். பத்ருக்கு முந்தைய தினம் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை இதில் நமக்கு பாடமாகும். “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்கமாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னையாரும் வணங்கமாட்டார்கள்” (அல் ரஹீக்குல் மக்தூம்) ஏகத்துவ நம்பிக்கை அழிந்து போகாமலிருப்பதற்கான போராட்டமாக பத்ருஅமைந்தது.
பத்ரின் மற்றொரு பக்கத்தை குர்ஆன் வெளிப்படுத்துகிறது. கடந்த 13 ஆண்டு காலம் மக்காவில் ஆயுதப் போராட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நம்பிக்கையாளர்களின் சமூகத்திற்கு போருக்கான அனுமதியை வழங்கியபோது அல்லாஹ்இவ்வாறு கூறுகிறான்:
”போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர்தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு)  அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவிசெய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். 22:40.
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித்தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன் தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும்,அல்லாஹ்வின் திருநாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப் பட்டுபோயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவிசெய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 22:39,40)
இதுதான் பத்ரின் அனுமதிக்கான பிரகடனம். ஏன் பத்ர்? என்ற கேள்விக்கு குர்ஆன் அளிக்கும் பதில் எந்தவொரு மதப்பிரிவினரின் வணக்கவழிப்பாட்டுத்தலங்களும் அழிக்கப்படக்கூடாது என்பதாகும். ஒரு கூட்டத்தினரைக் கொண்டு இன்னொரு கூட்டத்தினரை தடுப்பது என்பதன் பொருள், அக்கிரமக்காரர்களை, நம்பிக்கையாளர்கள் தடுக்கவேண்டும் என்பதே.
எல்லா மனிதர்களுக்கும், மதபிரிவினர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களை தடுக்கவேண்டும் என்பது முஃமின்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள பொறுப்பாகும். காரணம், அதுதான் நீதியைநிலை நாட்டுவதாகும். இதர மதப் பிரிவினரின் இறைக்கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், பிறழ்வுகளையும் குர்ஆன் ஒருபோதும் மூடிமறைக்கவில்லை. குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் நோக்கமாக அல்லாஹ் கூறும்போது,
’அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக்கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும்”(அல்குர்ஆன் 18:4) என்று குறிப்பிடுகிறான்.
ஆனால்,இந்தகொள்கை முரண்பாடுகள் இதர மதத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தடையாக அமைந்துவிடாது. இறைவனைக் குறித்த அவர்களது நம்பிக்கை தவறாக இருந்தாலும், அது நம்பிக்கை சுதந்திரத்தின்பால்பட்டது. அனைத்து மனிதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நீதியை நிலை நாட்டுவதின்பால்பட்டது. இந்த நீதியின் வழியில் அல்லாஹ்வுக்கு யார் உதவுகின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உதவுவான். ’நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக மாறிவிடுங்கள்” (அல்குர்ஆன்61:14)
மக்காவில் இருந்து முஸ்லிம்கள் மதஉரிமைகள் மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ’தங்களுடைய இறைவன் அல்லாஹ்’ என்று கூறியதைதவிர வேறு எந்த தவறையும் அவர்கள் செய்யவில்லை. அதாவது, ஒவ்வொரு மனிதர்களுக்கும் தான் விரும்பும் மதத்தை நம்பிக்கை கொள்ளவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு.
மக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகவே அல்லாஹ் அவர்களுக்கு போரிடுவதற்கான அனுமதியை வழங்குகிறான். மனித உரிமைகளுக்கு இஸ்லாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை இதன் மூலம்புரிந்து கொள்ளமுடியும். நம்பிக்கை முரண்பாடுகள் உரிமைகள் மீதான அத்துமீறலாகமாறிவிடக்கூடாது.
இந்த உரிமையை நிலைநாட்டுவது என்பது இறைநீதியைப்பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மனிதனுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள துறைகளிலும் தனது மார்க்கத்தையே பின்பற்றவேண்டும் அல்லாஹ் விரும்புகிறான். ஆனால்,  இதற்காக பலத்தை பிரயோகிக்க அல்லாஹ் கட்டளையிடவில்லை. நேர்வழியை நேரடியாக மனிதர்களிடம் அல்லாஹ் கொண்டு செல்வதில்லை. அதற்கு பதிலாக மனிதர்களில் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்கள் மூலமாக நேர்வழியின்பால் அழைப்புவிடுக்கிறான். இதன் மூலம் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப அல்லாஹ் நாடுகிறான்.
அந்த பொறுப்பை நிறைவேற்றுவதையே ‘அல்லாஹ்வுக்கு உதவிச்செய்யுங்கள்’ என்று குர்ஆன் கூறுகிறது. நம்பிக்கையாளர்களை பொறுத்தமட்டில் எந்தவொரு வணக்கவழிப்பாட்டின் மூலம் பெறமுடியாத உயர்ந்த பதவிதான் அல்லாஹ்வின் உதவியாளர் ’பதவி என்று அறிஞர் செய்யத் அபுல் அஃலா மவ்தூதி(ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இறைவனுக்கு உதவும் இந்த ஆன்மீக வழிமுறையின் ஒரு பகுதியே இறைவன் மனிதனுக்கு சுதந்திரம் அளித்துள்ள துறைகளிலும் இறைநீதியும், மனித உரிமைகளும் மலருவதற்கான போராட்டம். அங்கேயும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும்.
அல்லாஹ் நேரடியாக மனித உரிமைகளை நிலைநாட்டமாட்டான். அதற்கு பதிலாக இறைத்தூதர்களை நியமித்தான். அதன் மூலம் முஸ்லிம் உம்மத்தை உயிர்த்தெழச்செய்கிறான். அவர்களின் லட்சியமெல்லாம் இறைவனின் நேரான வழியைபரப்புரைச் செய்வதும், நீதியை நிலைநாட்டுவதுமாகும்.
இங்கு எடுத்துரைக்கப்படும் பத்ரின் இரு பக்கங்களான ஏகத்துவ நம்பிக்கையின் பாதுகாப்பும், அனைத்து மதத்தினரின் மதச்சுதந்திரத்திற்கான பாதுகாப்பும் பரஸ்பரம் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்துள்ளது. காரணம், அனைவருடைய சுதந்திரம் பாதுகாக்கப்படும் போது தான் முஸ்லிம்களின் சுதந்திரமும் பாதுகாக்கப்படும். நீதிமலர வேண்டும் என்பதன் பொருள் இஸ்லாமிய நீதி மலரவேண்டும் என்பதே.
இஸ்லாத்தின் சுதந்திரம் நிலைநாட்டப் படவேண்டும் என்பதன்பொருள் அனைவருக்குமான சுதந்திரம் நிலைநாட்டப் படவேண்டும் என்பதாகும். ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு மட்டும் நீதியும், சுதந்திரமும், உரிமைகளும் கிடைக்கவேண்டும் என்பதற்கு மேற்கண்ட வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது. காரணம், சுதந்திரமும், நீதியும், உரிமைகளும் ஒரு கூட்டத்தினருக்கு மட்டும் கிடைப்பதல்ல. ஆகவே நீதியை நிலைநாட்டுதல், மார்க்கத்தை நிலைநாட்டுதல் என்ற குர்ஆனில் இடம் பெற்றுள்ள வார்த்தை பிரயோகங்கள் தெய்வீக விழுமியங்களை எடுத்துரைக்கிறது.
இஸ்லாம் என்றாலே மனிதநேயம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகையால் தான் தவறான நம்பிக்கைகளைக் கொண்டவர்களின் வழிப்பாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்காக போராடுவதை புனிதசெயலாக அல்லாஹ் கூறுகிறான். இஸ்லாத்தின் இத்தகைய விழுமியங்கள் மறக்கடிக்கப்படுவதால் பெரும்பாலும் நீதி இவ்வுலகில் மலருவதில்லை.
பத்ருக்கான அனுமதியை பிரகடனப்படுத்தும் போதுதான் அல்லாஹ் அனைத்து மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அறிவிப்பையும் வெளியிடுகிறான் .உண்மையில் பத்ரில் யூத, கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மதத்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களின் பாதுகாப்புக் குறித்தே விஷயமே எழவில்லை. எனினும், முதல் போர் என்ற நிலையில் போரைக் குறித்தும், இஸ்லாத்தின் அரசியல் போராட்டங்களின் நோக்கம் குறித்தும் கட்டளைகளை அல்லாஹ் இந்த சந்தர்ப்பத்தில் இறக்கியருளினான்.
நம்பிக்கையை பரப்புரைச் செய்ய இஸ்லாம் எந்தப் போரையும் நடத்தவில்லை. இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. ”(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்த முமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன்2:256)
இஸ்லாத்தில் அனைத்து போர்களும், அரசியல் போராட்டங்களுமெல்லாம் ஜனநாயக, மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்காகவே நடத்தப்பட்டன. ஆகையால் தான், அரபுலக சர்வாதிகாரிகளை எதிர்த்து அமைதியான வழியில் போராடிய அரபுவசந்த போராளிகளை இறைமார்க்கத்தின் போராளிகள் என்றும், அதில் கொல்லப்பட்டவர்கள் உயிர் தியாகிகள் என்றும் சமகால அறிஞர்கள் அழைக்கின்றனர்.
நம்பிக்கையாளர்களுக்கும், நிராகரிப்பாளர்களுக்கும் இவ்வுலகில் ஒரு சேர கருணை புரிவதே அல்லாஹ்வின் பண்பாகும். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களிடம் இந்த பண்பு குடிக்கொண்டிருக்க வேண்டும். இஸ்லாத்தின் நீதிக்கான போராட்டங்களின் பலனை முஸ்லிம்கள் மட்டும் அனுபவிப்பதில்லை. அதனை நம்பாதவர்களுக்கும் பலன் கிடைக்கும். ஏனெனில் முஸ்லிம்களுக்கு மட்டுமான நீதி இவ்வுலகில் இல்லை என்பதாகும்.
முஸ்லிம் சமுதாயம் பூமியில் நீதியின் காவலாளிகள் ஆவர். அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது பூமியில் அநீதியும்,அக்கிரமும் ஒழிக்கப்படுவதற்கு அத்தியாவசியமானது .இதுக் குறித்து அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு எச்சரிக்கைவிடுக்கிறான்:
”நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.” (அல்குர்ஆன் 8:73)
ஏகாதிபத்தியம்,சியோனிசம்,பாசிசம்,அரசு பயங்கரவாதம் என உலகின் அனைத்து ஃபஸாதுகளாலும் அதிகமாக பாதிக்கப்படும் ஒரே சமூகம் முஸ்லிம்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஏன் இவ்வாறு நிகழுகிறது? என்பது சிந்திக்கவேண்டிய விஷயம்.
ஃபஸாதுகளை ஒழிக்க பாடுபடவேண்டிய ஒரு சமூகம் அந்த புனிதமான பொறுப்பை நிறைவேற்ற தயங்குவதன் காரணமாக உலகை அக்கிரமங்களும், அடக்கு முறைகளும் ஆளுகிறது. பாசிசத்தின் உச்சபட்ச கொடூரமாக பாபரி மஸ்ஜித் இந்தியாவில் இடித்து தள்ளப்பட்டது. பாசிசத்தின் ஃபஸாதை தடுத்து நிறுத்த வேண்டிய இந்திய முஸ்லிம் சமூகம் அந்த பொறுப்பை நிறைவேற்றாமல் தட்டிக் கழித்ததது. விளைவு தொடர்ந்து முஸ்லிம் சமூகம் வேட்டையாடப்பட்டு வருகிறது.
ஆகவே நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் அளித்த பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். எதிரிகளின் வளர்ச்சியும்,பலமும் எல்லாம் நமது பலகீனத்தின் வெளிப்பாடே. ஒவ்வொரு அநீதியும், நீதிக்கான போராட்டத்திற்கு முஸ்லிம்களுக்கு இறைவனிடமிருந்து விடுக்கப்படும் அழைப்பாகும்.
அல்லாஹ்வின் அழைப்புக்கு பதில் அளிக்காவிட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல மனிதகுலமும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
ஆகவே, அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ் படிந்து நீதியைநிலை நாட்டும் சமுதாயமாக நாம் மாறுவோம்!
நன்றி தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக