Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 ஜூலை, 2014

நெல்லை தமுமுக வின் மனித நேயபணி ....


இந்தியாவிலேயே 115 ஆம்புலன்ஸ்களை வைத்திருக்கும் ஒரே தொண்டு இயக்கம் தமுமுக மட்டுமே என்பது யாவரும் அறிந்த ஒன்று.

சாதி, மதம், நேரம், காலம் பாராமல் அந்த அவசர ஊர்திகள் இயங்குகின்றன.

அவற்றை இரவு & பகலாக ஓட்டும் டிரைவர்களின் உழைப்பும், தியாகமும் இணையற்றது. தங்கள் குடும்பத்தினரின் சுக-துக்கங்களில் கூட பங்கேற்க முடியாமல் உயிருக்குப் போராடுபவர்களைக் காக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு ஊட்டியில் ஒரு நிகழ்வு நடந்தது. பெருநாள் தொழுதுவிட்டு வெளியே வந்த நமது ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஒரு இந்து சமுதாய குடும்பத்திலிருந்து ஒரு போன் வந்தது. உயிருக்கு போராடும் நோயாளி ஒருவரை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரியுள்ளனர்.

பெருநாள் தொழுதவர் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்து தன் குடும்பத்தை சந்தித்து அறுசுவை உணவை உண்ணவில்லை. அடுத்தவரின் உயிர் காக்க கோவைக்கு போய்விட்டு அன்று மதியம் தான் வீட்டுக்கு வந்துள்ளார். இப்படி நிறைய சொல்லலாம்.

நேற்று(22.07.2014) மாலை ஒரு சோக சம்பவம். நெல்லை மாவட்டம் களக்காட்டில் தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவராக ஆரிப் (43) என்ற சகோதரர் செயல்பட்டு வந்தார். அவர் தமுமுகவின் ஆரம்ப கால ஊழியர்.

நேற்று மாலை 4 மணியளவில் நோன்பு திறப்பை எதிர்நோக்கியிருந்தார். அவருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. உடனே சென்று அவரை நெல்லை மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.

நோன்பு திறக்கும் நேரம் வந்தது. ஊருக்கு வந்தவருக்கு அழைப்பு வந்தது. அந்த நோயாளியையும் அழைத்துக்கொண்டு திரும்பவும் திருநெல்வேலிக்கு மீண்டும் புறப்பட்டார்.

அந்தோ... வேதனை நாங்குனேரி அருகே சென்றபோது அந்த டிரைவருக்கு நெஞ்சுவலி எடுத்துள்ளது. அப்போதும் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, வண்டியை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்படியே அவரது இன்னுயிர் பிரிந்துவிட்டது (இன்னாலில்லானஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) அவர் நோன்பாளியாகவே இறைவனிடம் போய்விட்டார். நோன்பு திறப்பை எதிர்பார்த்து இருந்தவர், அடுத்தவர் உயிர்காக்க அடுத்தடுத்து ஓடியவர், தன் உயிர் பிரியும் நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு வண்டியை நிறுத்திய மனிதநேயத்தை எந்த வார்த்தைகளால் வர்ணிக்க முடியும்?

நினைக்கும் போதே, கண்ணீர் வருகிறது. அவருக்கு இரண்டு பிள்ளைகள், இன்று மாலை அவரது ஜனாஸா தொழுகையில் மாநில பொருளாளர் அண்ணன் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சகோதரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அவருக்காக இறைவனிடம் அனைவரும் பிரார்த்தியுங்கள்.
தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தியுங்கள். அவர்களின் மனிதநேயப் பணிகள் மகத்தானவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக