எகிப்தில் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டின் மூத்த எதிர்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்கா பெருமளவில் பணம் அளித்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக அல்ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க சிறப்பு திட்டம் உருவாக்கி அமெரிக்கா, எகிப்திற்கு பணம் அளித்துள்ளதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எகிப்தின் எதிர்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்கா பெருமளவில் பணம் அளித்துள்ளதை அல்ஜஸீரா ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.
எகிப்தில் ராணுவ புரட்சிக்கு முன்போ அதற்கு பின்போ தாங்கள் தலையிடவில்லை என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறினார்.ஆனால், முர்ஸி ஆட்சியில் அமர்ந்த பிறகு அவரை வெளியேற்ற ஒபாமா அரசு நடத்திய தலையீடுகள் கடுமையாக இருந்ததை ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன. மேற்காசியாவில் ஜனநாயகத்திற்கு உதவுகிறோம் என்ற போர்வையில் இந்த பணம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்க்கும் இஸ்லாமிய கட்சிகளை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான நயவஞ்சக மதசார்பற்ற சக்திகளுக்கு உதவும் திட்டத்தை அமெரிக்கா பிரயோகித்துள்ளது. வெளிநாட்டில் வசித்துவரும் எகிப்தின் முன்னாள் போலீஸ் அதிகாரியும், இஃவான்களுக்கு எதிரான அரசியல் தலைவருமான உதவியுடன் ஜனநாயகரீதியாக எகிப்தில் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை வெளியேற்ற அமெரிக்கா தனது திட்டத்தை அரங்கேற்றியுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மேற்காசியாவில் தங்களின் ஆதிக்கத்திற்கு முர்ஸியின் அரசு தலைவலியாக இருப்பதாகவும், இவர்களை வெளியேற்றவேண்டியது அத்தியாவசியம் என்றும் அமெரிக்கா கருதியதாக அந்த அறிக்கை கூறுகிறது. வெளிநாட்டு பணத்தை உபயோகித்து நாட்டில் அரசியல் செயல்பாடுகளை நடத்துவதற்கு எகிப்தில் தடை உள்ளது. ஜனநாயக அரசை கவிழ்க்க பணம் அளிப்பது அமெரிக்க சட்டத்திற்கும் எதிரானது. ஆனால், இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒபாமாவின் அரசு முர்ஸி அரசை கவிழ்க்க பணம் அளித்துள்ளது நிரூபணமாகியுள்ளது.
இதனிடையே, எகிப்திற்கு நான்கு எஃப்-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளைமாளிகையில் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உதவியுடனேயே எகிப்தில் ராணுவ புரட்சி நடந்துள்ளது என்று ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக