Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 15 ஜூலை, 2013

உணவு பாதுகாப்பு மசோதா: உண்மையில் மக்களின் உணவு உரிமையை பாதுகாக்குமா?

பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உணவு என்பது மக்களின் உரிமை அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதே உணவு பாதுகாப்பு மசோதா.
நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உணவு திட்டங்களானது நலத்திட்டங்களின் (welfare based) அடிப்படையில் உள்ளது. ஆனால் இந்த திட்டம் உரிமை அடிப்படையிலானது (rights based) என்கிறது மத்திய அரசு.

மேலும் இந்த சட்டத்தின்படி இஷ்டம் போல் நலத்திட்டங்களை அறிவிப்பதை போல் அல்லாமல் தேவைப்படும் மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது அரசின் கடமையாகிறது என்கிறது மத்திய அரசு.
இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவிக்கவே மசோதா நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த மசோதாவை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த மசோதா மூலம் காங்கிரஸ் தேர்தல் ஆதாயம் அடைந்துவிடாமல் இருக்க பாஜக அதனை தடுக்க  முயற்சி செய்தாலும். பெரும்பாலான கட்சிகள் மசோதாவின் சாராம்சத்தால் எதிர்கின்றன.
ஏழைகளுக்கு உணவு உரிமையை கட்டாயமாக்கவே அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதாக சொல்லும் போது மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் இதனை எதிர்க்க காரணம் என்ன? இது குறித்தும் இந்த மசோதாவின் சாரம்சங்கள் என்ன அதன் பயனாளிகள் யார் என்பது குறித்தும் நாம் பார்ப்போம்.
பயனாளிகள்
இந்தியாவின் மக்கள் தொகையில் 63.5% பேர் இம்மசோதா மூலம் பயன்பெறுவர். இந்த சட்டத்தின் பயனாளிகள் பொதுவிநியோக முறை மூலம் முன்னுரிமை பிரிவினர், பொதுப் பிரிவினர் என இரு வகைப்படுத்தப்படுவர்.
முன்னுரிமைப் பிரிவினர் எனும் வறுமைகோட்டுக்கு கீழ் வரும் ஒவ்வொரு தனி மனிதனும் மாதம் ஒன்றுக்கு 7 கிலோ உணவுப் பொருட்கள் அதாவது அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், சிறுதானியங்கள் கிலோ ஒரு ரூபாய்க்கும் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொதுப்பிரிவு குடும்ப அட்டைதாரர்களில் ஒவ்வொரு நபரும் மாதம் ஒன்றுக்கு 3 கிலோ உணவுப் பொருட்களை மானிய விலையை விட அதிக விலைக்கு பெறுவார்கள்.
முன்னுரிமை பிரிவினர், பொதுப் பிரிவினர் என இருவகையாக பிரிக்கப்பட்டிருந்தாலும் பயனாளிகள் யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை.
1990 ம் ஆண்டுகளுக்கு முன்பாக பொது விநியோகத் திட்டம் (Universal Public Distribution System) நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டத்தை (Targeted Public Distribution System) 1990 களின் இறுதியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது  மத்திய அரசு.
இந்த இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் வழங்குவதில் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர் என்ற பிரிவினை கொண்டுவரப்பட்டு, பல வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன. இன்றும்  தமிழகத்தில் இந்த இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம்தான் நடைமுறையில் இருந்து வருகிறது.
உலக வங்கியின் அறிவுரைப்படி உணவு மானியத்தை குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தப் பிரிவினை.
ஆனால் உணவுப் பொருட்கள் ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே இந்த பிரிவினை கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால், இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பட்டினியால் வாடும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சமீபத்தில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 66 ஆவது இடத்தில் இருக்கிறது. கடும் வறட்சி பஞ்சம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகளைவிட பட்டினியில் முன்னணியில் உள்ளது. சத்தான உணவின்றி அரைகுறைப் பட்டினி நிலையில் வாழும் மக்களில் ஏறத்தாழ 27 சதவீதத்தினர் (23 கோடி பேர்) இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்; ஒவ்வொரு மாதமும் 75,000 குழந்தைகள் சத்தான உணவின்றி இந்தியாவில்  இறந்து போகின்றன;  உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 15 இலட்சம் குழந்தைகள் அரைகுறைப் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுகின்றன என இந்தியாவின் பட்டினிப் பட்டாளத்தைப் பற்றிப் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட காத்திருக்கிறது உணவு பாதுகாப்பு சட்ட மசோதா.
இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் வாழும் மக்களில் 74.6 சதவீதம் பேருக்கும், நகர்ப் புறங்களில் வசித்துவரும் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே பொது விநியோக திட்டத்தின் கீழ் (ரேஷன் கடைகளில்) உணவுப் பொருட்கள் வழங்கப்படுமென்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வருபவர்கள் முன்னுரிமை பிரிவினர், பொது பிரிவினர் என இரு வகையினராக பிரிக்கப்படுவர்.
இதன்படி பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களில் கிராமப்புறத்தை சேர்ந்த 46 சதவீதம் பேர் முன்னுரிமை பிரிவின் கீழும், நகர்ப்புறங்களில் 28 சதவீதம் பேர் முன்னுரிமை பிரிவின் கீழும் மாதந்தோறும் 7 கிலோ உணவுப் பொருட்களை மானிய விலையில் பெறுவர்.
ஆனால் பொதுப் பிரிவினருக்கு மானிய விலையை விட அதிக விலைக்கு மாதந்தோறும் 3 கிலோ உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைக்கும் என உணவு பாதுகாப்பு சட்ட மசோதா தெளிவாக வரையறுத்திருக்கிறது.
மேலும், தேசிய அடையாள அட்டை (ஆதர்) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் படி இனி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என கூறுகிறது  இம்மசோதா. ஆனால் நாட்டில் இதுவரை 30 சதவீதம் மக்களுக்கு கூட இந்த ஆதர் திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்படவில்லை.
நகர்புறங்களில் வசிப்பவர்களில் வெறும் 28 சதவீதப் பேருக்குதான் பொது விநியோகத் திட்டத்தின் முன்னுரிமைப் பிரிவின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, கோதுமை கிடைக்கும் என்றால், நகரமயமாக்கத்தில் முன்னணியாகத் திகழும் தமிழகத்தின் நிலை என்னவாகும்?
தமிழக மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பிழைப்பிற்காக நகர வாழ்க்கையை நோக்கி வருபவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே. இம்மசோதாவின் படி நகர்புறத்தின் 28 சதவீதம் மக்களே முன்னுரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்றால் மீதியுள்ள ஏழைகளின் நிலை என்னவாகும்?
இதுபோன்ற காரணங்களால் உணவுப் பொருட்கள் ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்படும் இம்மசோதாவின் நோக்கம் கேள்விக்குறியாகி நிற்கிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தான் முன்னுரிமை பிரிவின் கீழ் வருவார்கள் என்றால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு மத்திய அரசு வைத்துள்ள சில கணக்கீடுகள் பெறும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மத்திய அரசின் கணக்கீடு படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 6.52 கோடி. இது மாநில அரசுகளின் கணக்கீடு படி 11.03 கோடி குடும்பங்கள். இது போன்ற குழப்பத்தால் மசோதாவின் பயன் அனைத்து ஏழை மக்களுக்கும் சென்றடையுமா என்ற சந்தேகம் எழுகின்றது.
மேலும் வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு நபரின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.25 க்குள்ளும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.20 க்குள்ளும் இருக்க வேண்டும் என வருமான அளவுகோலை மத்திய திட்ட கமிசன் வரையறுத்துள்ளது. திட்ட கமிசனின் இந்த வரையறைப்படி பார்த்தால் பிச்சையெடுப்போர் கூட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற தகுதியை பெறமுடியாது.
மேலும் அவ்வப்போது வறுமைக் கோடு பற்றி எடுக்கப்படும் கணக்கீட்டின் அடிப்படையில் முன்னுரிமை குடும்ப அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படும் என்றும் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே மத்திய அரசின் இந்த உணவு பாதுகாப்பு மசோதா, ஏழைகளுக்கு ஏற்கெனவே கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் பறித்துவிடும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஏழைகளுள் ஒரு பகுதியினருக்குக்கூட உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என்றோ, அவர்களுக்கு மலிவான விலையில் அரிசியும் கோதுமையும் கிடைக்கும் என்றோ எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.
(கட்டுரை ஆசிரியரை rahim@newindia.tv என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக