திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் ஜவுளித் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோருடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
எறையூர் சர்க்கரை ஆலை அருகே அமையவுள்ள ஜவுளி தொழில்நுட்ப பூங்கா பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு பொக்கிஷமாக விளங்கும். பூங்கா அமையவுள்ள பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எளிதில் கிடைக்கும்.
இங்கிருந்து உருவாக்கப்படும் துணிகளை வெளிநாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் வகையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுடன் கூடிய பெருநகரங்கள் அருகில் உள்ளன. மேலும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட உள்ளதால், உற்பத்தித் துணிகளை ஏற்றுமதி செய்வதற்கு சாலை வசதி உள்ளது. எனவே, ஊழியர்களும், தொழில் முனைவோரும் ஜவுளிப் பூங்காவில் வேலை செய்ய முன்வருவர் என்றார் அவர்.
கூட்டத்தில் பங்கேற்ற தொழில் முனைவோர் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படும் கட்டடம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பது குறித்தும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக