மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறிய ‘நான் இந்து தேசியவாதி’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேணர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2014 நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா இந்துத்வாவை முன்வைத்துதான் சந்திக்கும் என நிரூபணமாகியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
பா.ஜனதா கட்சியின் தேசிய பிரச்சாரக் குழு தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்த மோடி, ‘நான் தேசியவாதி. நான் தேச பற்றுள்ளவன். அதில் எந்த தவறும் இல்லை. நான் பிறப்பால் இந்து. அதில் எந்த தவறும் இல்லை. அதனால் நான் ஒரு இந்து தேசியவாதி. நான் இந்து என்பதால் நீங்கள் என்னை இந்து தேசியவாதி என்று அழைக்கலாம்.’ என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பா.ஜனதா இதனை பொருட்படுத்தவில்லை. அத்துடன் இந்துத்வாவை முன்வைத்து 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை நிரூபிக்கும் விதமாகவே, மும்பை முழுவதும் மோடி கூறிய, “நான் இந்து தேசியவாதி” என்பது உள்ளிட்ட அவரது இந்து தேசியவாத கருத்துகள் அடங்கிய போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக