Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 நவம்பர், 2013

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2013 : மனம் முழுவதும் நிரம்பிய பிரம்மாண்டம்!

09/11/13 சனிக்கிழமை அன்று ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன்.

என்னுடன் என் நண்பர்கள் மௌலவி இப்றாஹீம் ஃபைஜி, மாங்குடி ரியாஸ், நாகூர் ஷாஃபி ஆகியோர் வந்தனர். துபையிலிருந்து புறப்பட்டோம். ஷார்ஜா நெருங்கும்போழுதே சரியான போக்குவரத்து நெரிசல் இருந்தது. எங்கள் கார் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் சென்றது.

ஒரு வழியாக கண்காட்சி நடக்கும் இடம் வந்து சேர்ந்தோம். கண்காட்சி நடக்கும் ஷார்ஜா எக்ஸ்போ மிகப் பிரம்மாண்டமாக இருந்தது.

பிரதான நுழைவாயிலுக்கருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறுவர்களை மகிழ்விக்கும் கலைநிகழ்ச்சிகள்தான் எங்களை வரவேற்றது. அப்படியே போகிற போக்கில் அதனைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தோம்.

எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வரவேற்பு மேஜையைத் தாண்டி தொலைக்காட்சி சானல்காரர்கள் கேமராவை வைத்து படம் பிடித்துக் கொண்ருந்தார்கள்.

ஒரு பக்கம் அரபுலக எழுத்தாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து அவர்கள் எழுதிய புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். SIGNING CORNER என்றே அந்த இடத்திற்குப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டதும் மனம் மகிழ்ந்தது. நல்ல முயற்சி. எழுத்தாளர்களைக் கௌரவிப்பதற்கு இது ஒரு வழி. வாசகர்களும் மகிழ்வடைவார்கள்.

பல்வேறு நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 53 நாடுகளிலிருந்து 1010 பதிப்பகங்கள் பங்கு பெறுகின்றனவாம். நம் ஊரிலெல்லாம் இதனை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இந்திய நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் ஹால் எண் 5க்குள் நுழைந்தோம். அங்கே வழக்கம் போல் மலையாளத்தின் ஆதிக்கம். எங்கு பார்த்தாலும் மலையாள ஸ்டால்கள். M பிரிவில் 27ம் எண்ணில் மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டால் போட்டிருந்தார்கள். அங்கேதான் இலக்கியச்சோலை நூல்களும் வைக்கப்பட்டிருந்தன.

இவர்கள் உதவியில்லையென்றால் இந்தப் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சியில் தமிழ் நூல்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். இவையல்லாமல் தமிழ் நூல்கள் என்றால் தாருஸ்ஸலாம் பப்ளிஷர்ஸ் என்ற சவூதி பதிப்பகத்தாரின் ஸ்டாலில் ஒரு சில தமிழ் இஸ்லாமிய நூல்கள் இருந்தன.

இதுபோக வேறு எங்கும் நீங்கள் சல்லடை போட்டுத் தேடினாலும் நீங்கள் தமிழ் நூல்களைப் பார்க்க முடியாது.


தேஜஸ் ஸ்டாலைப் பார்த்துவிட்டு பிற ஸ்டால்களைப் பார்ப்பதற்காகக் கிளம்பினோம். சிறுவர்களுக்கான கார்ட்டூன்கள், காமிக்ஸ் புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் உள்ள கடைகளில் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோர்களிடம் அது வேண்டும். இது வேண்டும் என்று நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். சில பெற்றோர்கள் சங்கடத்தில் நெளிந்துகொண்டிருந்தார்கள்.

இதுபோக புகழ்பெற்ற ஆங்கில நாவல்கள் அதிகமாக உள்ள கடைகளிலும் நல்ல கூட்டம். நாங்கள் சென்றது சனிக்கிழமை. சனிக்கிழமை அமீரகத்தில் பகுதி மக்களுக்கே விடுமுறை என்பதால் மொத்தத்தில் கூட்டம் சுமாராக இருந்தது. அதற்கு முந்தைய தினம் வெள்ளிக்கிழமை நல்ல கூட்டம் இருந்ததாம்.

அதற்கு முந்தின தினமான 07.11.13 வியாழன் அன்று இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வந்து போய் விட்டாராம். கேள்விப்பட்டதும் ஏமாற்றமாக இருந்தது. எதிர்வரும் 14.11.13 வியாழன் அன்று நடிகர் கமலஹாசன் வருவதாகச் சொன்னார்கள். அநேகமாக அன்று தமிழர்கள், மலையாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சில நூல்களில் முதல் முறையாக ஒரு புதுமையைப் பார்த்தேன். புத்தகத்தின் முன் அட்டையை 3-டி வடிவத்தில் வைத்திருந்தார்கள்.

கண்காட்சியில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் கலைஞர்கள், இலக்கியவாதிகள் போன்ற விருந்தினர்களின் படங்களை மதிலில் மாட்டியிருந்தார்கள். அதில் நமது அப்துல் கலாம், கமலின் படங்களும் இருந்தன. உலகிலேயே நான்கு பெரிய சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் இதுவும் ஒன்றாம். அதில் நம் இந்தியர்களின் படங்களும் இடம் பெற்றிருப்பது மகிழ்வைத் தந்தது.

ஒரு பக்கம் சமையற்கலை செய்முறைகள் (Demos) நடந்து கொண்டிருந்தன.

எங்கு பார்த்தாலும் மலையாளிகள் குடும்பத்துடன் காணப்பட்டனர். தமிழர்கள் மிகவும் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். வாசிப்பிலும், இலக்கியங்களிலும் தமிழ்ச் சமுதாயம் இன்னும் அதிகம் விழிப்படைய வேண்டும். நிறைய தமிழர்கள் வருகை புரிந்தால்தான் எதிர்காலத்தில் இங்கே அதிகமான தமிழ் நூல்கள் இடம் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

அப்படியே சுற்றி விட்டு மீண்டும் M27லுள்ள தேஜஸ் பப்ளிகேஷன் ஸ்டாலுக்குத் திரும்பினோம். தமிழர்கள் சிலர் இலக்கியச்சோலை நூல்களை வாங்கிக் கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது.

தேஜஸ் பப்ளிகேஷன் ஸ்டாலில் எனக்கு இன்னொரு ஆச்சரியம். கமால் என்ற மலையாளியைச் சந்தித்தது. அவரை கோழிக்கோட்டில் சந்தித்து 10 வருடங்களுக்கு மேலிருக்கும். அதே தோற்றம். அதே அன்பு. என்னை நன்றாக நினைவில் வைத்திருந்தார்.

கோழிக்கோட்டிலுள்ள தேஜஸ் அலுவலகத்தில் பணி புரிகிறார். காலத்தின் ஓட்டத்தில் அடித்துச் செல்லாமல் அதே நிலைப்பாட்டில் இப்பொழுதும் அங்கேயே தொடர்கிறார். கோழிக்கோட்டுக்குச் சென்றால் இவரை தேஜஸ் அலுவலகம் சென்று சந்தித்து விட்டு வருவேன். துடிப்பு மிக்கவர். ஆனால் எப்பொழுதும் அமைதியாக, சாந்தமாகவே காணப்படுவார்.

இந்தக் கண்காட்சிக்காக கேரளாவிலிருந்து வந்திருக்கி
றார். கண்காட்சி முடிந்ததும் ஊர் திரும்பி விடுவேன் என்றார்.

மொத்தம் 180 மொழிகளில் நூல்கள் இங்கே இடம் பெறுகின்றனவாம். ஒன்றுமே புரியாமல் பல மொழிகளின் எழுத்துருக்களில் நூல்களைக் காண முடிந்தது. ஒரே நாளில் முழுவதுமாகப் பார்த்து விட முடியாது. மேலோட்டமாகத்தான் பார்க்க முடியும். காரணம், கடல் போல் காட்சியளிக்கும் ஸ்டால்கள். எங்கு பார்த்தாலும் நூல்கள். ஏழு தலைமுறைகள் வாழ்ந்தாலும் படித்து முடிக்க முடியா நூல்கள்.

ஒரு வாரம் முழுவதுமாகச் சுற்றினாலும் ஓரளவுதான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

சென்னையில் வருடாவருடம் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு நான் பல முறை சென்றுள்ளேன். எங்கு பார்த்தாலும் தூசிதான். இங்கே எங்கு போனாலும் ஏசிதான்.

இங்கே இத்தனை பிரம்மாண்டத்தையும் ஏசி அறைக்குள் அருமையாக அமைத்துள்ளார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துள்ளார்கள்.

நேரம் ஆகிவிட்டபடியால் கிளம்பினோம். வெளியே முதலில் பார்த்த அதே மேடையில் சிறுவர்களை மகிழ்விக்கும் சுவையான நாடகம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. இடைக்கிடையே பாட்டு வேறு. எல்லாம் அரபியில்தான்.

அரபுக்கள் அதனைக் கண்டு சிரித்து, ரசித்துக் கொண்டிருந்தார்கள். நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லையே... சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு நடையைக் கட்டினோம்.

மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக