பயணங்கள் தொடர்கின்றன- 03
உயிர் என்ற வார்த்தையை அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில்
உபயோகிக்கின்றான். அவன் உபயோகிக்கும் அனைத்து இடங்களும் மிக முக்கியமானதொரு
விஷயத்தைக் குறித்தே அமைந்திருக்கின்றன. திருக்குர்ஆனில் சூரத்துன் நஹ்லில்
அல்லாஹ் கூறுகின்றான்.
அவன் மலக்குகளிடம் வஹியைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது
அனுப்பிவைத்து நிச்சயமாக (வணக்கத்திற்குறிய) நாயன் என்னைத் தவிர வேறு யாரும்
இல்லை. ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்
என்ற கட்டளையும் (மலக்குகளை) இறக்கிவைக்கிறான்.
(16 : 2)
இந்த இடத்தில் உயிர் என்ற வார்த்தையை அல்லாஹ் தனது மிக உயர்ந்த வஹி (இறைச்
செய்திக்காக உபயோகப்படுத்துகிறான்.இதுபோல் இதே அர்த்தத்தை பொதிந்ததாக அல்குர்ஆனின்
42 : 52 வசனத்திலும் நாம் காணலாம்.
அடுத்து சூரத்துல் மர்யமில் அல்லாஹ் கூறுகின்றான். மேலும் (நபியே) மர்யத்தைப்
பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் நினைவு கூறுவீராக! அவர் தனது குடும்பத்தாரை
விட்டு விலகி கிழக்குப்பக்கமாக ஒதுங்கி இருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு
அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பி
வைத்தோம். (19 : 17)
இன்னும் 58 : 22 , 70 : 38 , 97 : 4 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் தனது படைப்புகளிலேயே
மிக உயர்ந்த படைப்பான வானவர் கோன் ஜீப்ரயீல் (அலை) அவர்களை ரூஹ் என்ற வார்த்தையைக்
கொண்டு கூறுகின்றான்.
அடுத்து திருக்குர்ஆனில் 5 : 110 , 2 : 253 , 2 : 87 , 4 : 171 போன்ற வசனங்களில் மிக
உயர்ந்த கண்ணியமான தனது நபியாகிய ஈஸா (அலை) அவர்களை ரூஹூல் குத்ஸ் (பரிசுத்த ஆவி)
எனக் கூறுகின்றான்.
ஆக இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் உயிர் என்ற
வார்த்தையைக் கூட அல்லாஹ் மிக உயர்ந்த விஷயங்களுக்காகவே திருக்குர்ஆனில் உபயோகப்படுத்துகிறான்.
இந்த (ரூஹ்) உயிரைத்தான் அல்லாஹ் தனது மிக உயர்ந்த அருளாக நமக்கு தந்திரக்கின்றான்
உயிரின் பிரிவு. நம்மால் காணமுடியாத இந்த உயிர் நம்மை விட்டு ஒருநாள் பிரிந்து
விடும்ம் என்பது உலகமே ஒப்பக்கொண்ட உண்மை. நம்முடைய உயிர் நம்மைவிட்டு பிரியும் வேளை
நம்மிடம் எந்த அனுமதியும் கேட்காது. பிரிந்து தனது நீண்ட பயணத்தைக் தொடருகின்றது.
அப்போது தான் நம்முடைய தொடரும் பயணம் ஆரம்பமாகிறது. அந்த உயிர் நம்முடைய உடம்பை
விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரியும் போது நம்மை சுற்றியிருப்போரின் கையாளாகாத
தன்மையைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்.
இறந்து போகின்ற ஒருவனின் உயிர், தொண்டை வரை வந்து அவர் இறந்து கொண்டிருப்பதை
உங்கள் கண்களால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நேரத்தில்
வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பிக் கொண்டு
வருவதில்லை. அப்போது உங்களை காட்டிலும் நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம்.
ஆனால் அது உங்களுக்கு தென்படுவதில்லை.
(56 : 83,87)
இதன் மூலம் இரண்டு விஷயங்கள் நாம் அறியலாம். ஒன்று நமது சுற்றுச்சூழல் எவ்வளவு
உயர்ந்த தகுதிகளைப் பெற்று வசதி வாய்ப்புகள் கொண்டிருந்தாலும் நமது உயிர் நம்மை
விட்டும் பிரியும் போது நம்மை பார்ப்பதைத் தவிர வேறு எதையும் அவர்களால் செய்ய
முடியாது. அந்நேரம் நாமும் நம்மை விட்டு பிரியும் நமது உயிரைப் பார்த்துக் கொண்டே
இருக்க நமது உயிர் நமது உடலை விட்டு பிரிந்துவிடும். இரண்டாவது நமது இந்த முடிவுறா
பயணத்திற்கு முன் நமது கட்டுச்சாதம் (அமல்கள்) சரியானதாக இறையச்சமுடையதாக
இருந்தால் முழுமையாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற தைரியத்துடன் நமது பயணத்தை
நாம் தொடரலாம். நாம் அறிந்த முதல் வஷயத்திற்கு இரண்டாவது நிலையே மிகச்சிறந்த
வழியாகும்.
உலகில் வாழும் பலருக்கு வாழும் போது பல உயிர் நண்பர்கள் இருக்கலாம். உயிர்
பிரிந்த பின் நாம் தொடங்கியுள்ள பயணத்தில் எந்த உயிர் நண்பர்களாலும் நம்முடன்
சேர்ந்து பிரயாணிக்க முடியாது.
இந்த உயிர் நம் உடலை விட்டு பிரியும் போது நமது இயலாமை அல்லாஹ் இப்படிக்
கூறுகின்றான்.
இடுப்பை ஒடிக்கும் பேராபத்து தன் மீது ஏற்படப்போவதாக அவை உறுதி
கொண்டிருக்கும். அவ்வாறல்ல (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டை குழியை
அடைந்துவிட்டால் மந்திரப்பவன் யார் எனக் கேட்கப்படுகிறது. ஆனால் அவனோ நிச்சயமாக அது
தான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன்
பின்னிக் கொள்ளும். உம் இறைவனின் பால் அந்த நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல்
இருக்கிறது. (75 : 25,30)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூற வருவது உயிரற்ற பிண்டமாகக் கிடக்கும் நம்மால்
எதுவும் செய்ய முடியாது. நமது கால்கள் பின்னிப்பிணைந்து கொள்ளும். நமது உயிர் நம்மைவிட்டு
பிரியும் போது நம்மை நம்மாலும் காப்பாற்ற முடியாது. பிறகும் நம்மை காப்பற்ற
இயலாது. அவர்கள் கூறும் ஆறுதல் கூட ஒரு வெற்று வார்த்தையாகத்தான் இருக்கும். எனவே
அந்த தொடரும் பயணத்தை நிம்மதியாக தொடர ஒரே வழி இறையச்சம் என்ற கட்டுச்சாதமே. இதையே
அல்லாஹ் கூறுகின்றான். மேலும் நீங்கள் (ஹஜ்ஜூக்காக) வழித்துணைச் சாதனங்களைச்
கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில் வழித்துணைச் சாதங்களில் எல்லாம் மிக மேலானது
இறையச்சம் தான். எனவே நல்லறிவுடையோரே எனக்கு நீங்கள் மாறு செய்யும் போக்கில்
இருந்து விலகி என்க்கு பயந்து வாழுங்கள்.
(2 : 98)
இங்கே அல்லாஹ் கூறும் வணக்கம் ஹஜ் என்ற ஒரு பயணம் நாம் தயாராவது தொடரும் நீண்ட
பயணத்திற்காக! ஹஜ்ஜூக்காக கட்டுச்சாதம் (வழி வசதிகள்) தேவையாவது போல் தொடர்
பிரயாணியான நமக்கு கல்லறைக்கு முன்பு முதல் கடைசியாக இறை பொருத்தம் வரை இறையச்சம்
என்ற கட்டுச் சாதம் மிக மிக அவசியமாகும். உயிரின் பிரிவக்கு இதுவே சிறந்ததுமாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
முஹம்மது நாசிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக