53 நாடுகள், 1010 பதிப்பகங்கள், 4,05,000 புத்தகங்கள், 180 மொழிகளில் பங்கு பெறுகின்றன!
அப்துல் கலாம், கமல் ஹாசன் பங்கேற்பு!!
ஷார்ஜா: 32-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (Sharjah International Book Fair – SIBF 2013) இன்று நவம்பர் 6-ம் தேதி ஷார்ஜாவில் துவங்குகிறது. நவம்பர் 6 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மூன்றாம் ஆண்டாக இலக்கியச்சோலை தமிழ் நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் பங்கேற்கின்றன.
அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இந்தியன் பெவிலியனில் ஹால் எண்: 5-ல், ஸ்டால் எண்: M27-லுள்ள மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் பதிப்பகமான இலக்கியச்சோலையின் நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் நூல்களும் இடம் பெறுகின்றன.
இலக்கியச்சோலை, புதுயுகம் நூல்கள் கிடைக்குமிடம் : Hall No. : 5, Stall No. : M 27
பார்வையாளர்களுக்கான கண்காட்சி நேரம் : காலை 10 முதல் இரவு 10 மணி வரை.
உலகிலேயே மிகப் பெரிய 4 புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி விளங்குகிறது. பல நாடுகளின் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கு பெறுகின்றன. ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார்.
இலக்கியம், கலை, அறிவியல், கலாச்சாரம், தத்துவம் உள்ளடக்கிய பல தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இங்கே விற்பனைக்கு வைக்கப்படும்.
கடந்த ஆண்டு 2012ல் நவம்பர் 7 முதல் 17 வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 942 பதிப்பகங்கள் பங்குபெற்றன. மொத்தம் ஆறு லட்சம் பார்வையாளர்கள் பங்கு பெற்றனர்.
இந்த வருடம் 53 நாடுகளிலிருந்து 1010 பதிப்பகங்கள் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 23 அரபு நாடுகளும், 26 அரபு அல்லாத வெளிநாடுகளும் அடங்கும். இதல்லாமல் முதல் முறையாக போர்ச்சுகல், நியூசீலாந்து, ஹங்கேரி, கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன.
4,05,000 புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடத்தைக் காட்டிலும் 20,000 புத்தகங்கள் அதிகமாக இந்த வருடம் இடம் பெறுகின்றன.
குழந்தைகளுக்கான புத்தகங்கள், அகராதிகள் என்று மொத்தம் 180 மொழிகளில் நூல்கள் இங்கே பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும். தமிழ் மொழியில் இலக்கியச்சோலை நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் நூல்களும் மட்டுமே பங்கு பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரபுக் கலாச்சாரத்திற்கு முக்கிய பங்காற்றிய லெபனான் “கண்ணியத்திற்குரிய விருந்தினர்” (Guest of Honour) ஆக இந்த வருடம் கௌரவிக்கப்படும்.
இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவெனில், வெறும் கண்காட்சியுடன் நில்லாமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன.
இந்த 11 நாள் கண்காட்சித் திருவிழாவில் 580 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 200 குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும், 25 சமையல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
பல்வேறு அரபு எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், புகழ்பெற்ற நூல் ஆசிரியர்களும், பிரபல நாவலாசிரியர்களும், தொலைக்காட்சி நெறியாளர்களும், ஊடகவியலாளர்களும் உட்பட பல அரபு பிரபலங்களும், நடிகர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்திய முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம், நடிகர் கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொள்வது சிறப்பம்சம்.
“பாடலா ஹவுஸ் என்கௌண்டர்: நிழல்களும், நிஜங்களும்”, “பதுருப் போரின் அரசியல்”, “இடஒதுக்கீடும் முஸ்லிம்களும்”, “புனையப்பட்ட வழக்குகள்; புதைக்கப்பட்ட வாழ்வுகள்”, “மொசாத்”, “இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள்”, “வார்த்தைகளின் வலி தெரியாமல்”, “குர்ஆன் கூறும் பனி இஸ்ராஈல்”,”தொடரும் பயணங்கள்”, “புத்தம் போதிக்கும் யுத்தம்”, ”இறைநம்பிக்கையாளர்களின் வழிகாட்டி”, “இஸ்லாத்தின் அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து முதன்முதலில் தமிழில் வெளிவந்துள்ள நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை : போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”, “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்” முதலான இலக்கியச்சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கும்.
அத்தோடு, “இப்பி பக்கீர்”, “சேரமான் பெருமாள்”, “மேற்கு வானம்”, “உமர் முக்தார்” முதலான ‘புதுயுகம்’ பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் அங்கே விற்பனைக்குக் கிடைக்கும்.
நன்றி தூது ஆன்லைன்
Good Information's, will try to visit there.. Insha Allah..
பதிலளிநீக்கு