100 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் சுமையால் உலகத்திலேயே உயரம் கூடிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை (முதலில் புர்ஜ் துபாய் எனப் பெயரிடப்பட்டிருந்தது. புர்ஜ் என்றால் டவர் என்று பொருள்) அபுதாபிக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட துபை, தனது பொற்காலத்தை நோக்கி மீண்டும் பிரகாசிக்க துவங்கியுள்ளது.
புர்ஜ் கலீஃபாவை இதுவரை ஆறரை கோடி பேர் கண்டு சென்றுள்ளனர். அவர்கள், அருகில் உள்ள ஆடம்பர ஷாப்பிங் மால்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய ஆடைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
புர்ஜ் கலீஃபா திறந்ததை தொடர்ந்து ஒரு காலத்தில் மணல் மேடுகளாக காணப்பட்ட பகுதிகளில் எல்லாம் கோபுரங்கள் எழத் துவங்கின. தூய்மை, பொறுப்புணர்வின் காரணமாக துபை மெட்ரோ உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 3 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்துள்ளனர். இதனால் ரியல் எஸ்டேட் துறையிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் வீழ்ச்சியை சந்தித்ததால் 60 சதவீதம் எமிரேட்ஸுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நிலம் மற்றும் கட்டிடத்தில் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊக வியாபாரிகளை ஒழிக்க அரசு அண்மையில் சொத்துப் பதிவு கட்டணத்தை நான்கு சதவீதமாக அதிகரித்தது.
கடந்த ஆண்டு துபை ஸ்டாக் எக்ஸ்சேஞ் வியாபாரத்தில் 81 சதவீதம் வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது.
நவம்பர் மாதம் நடந்த ஏர் ஷோவில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் 99 பில்லியன் டாலருக்கு போயிங் ஏர்பஸ் விமானங்களை வாங்கப் போவதாக அறிவித்தது. இதன் மூலம் துபை மத்திய கிழக்கு நாடுகளில் முக்கிய யாத்திரை மையமாக மாறப் போகிறது. துபை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய வர்த்தக மையமாக மாறும் என்று ஷேக் முஹம்மது கூறியது மிகைப்படுத்தல் அல்ல என்று எக்னாமிக் டைம்ஸ் கூறுகிறது.
ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலுள்ள நகரம் என்ற நிலையில் விமான பயணத்தின் வரலாற்றில் துபை சாதனை படைத்துள்ளது. உலகிலேயே மிகச் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் திகழ்கிறது.
தற்போது ஜபல் அலீயில் மக்தூம் சர்வதேச விமான நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது. பணிகள் முழுமையடைந்தால் கிட்டத்தட்ட 15 கோடி பயணிகள் துபை வழியாக சஞ்சரிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜபல் அலீ துறைமுகம் சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே மிகவும் நெரிசலான துறைமுகமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் சுற்றுலா பயணிகள் துபைக்கு வருகை தந்துள்ளனர்.
எக்ஸ்போ 2020 துபைக்குக் கிடைத்தது மிகப் பெரிய சாதகமாக கருதப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு வேல்ட் எக்ஸ்போ நடைபெறும்போது சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் துபையின் பொருளாதார நிலை குறித்து ஐ.எம்.எஃப். உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளன. 64 பில்லியன் டாலர் தொகையை உடனடியாக திருப்பி அடைக்க வேண்டும். வாடகை விண்ணைத் தொடும்போது பன்னாட்டு நிறுவனங்கள் வேறு இடங்களை தேடும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக