Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 26 டிசம்பர், 2013

முதியோர் இல்லங்கள் தேவைதானா?

ஒரு வயதான முதியவர் அவரது இல்லத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். அவரோடு அவரின் மகனும் அமர்ந்திருந்தான். அந்த முதியவர் தன் மகனைப் பல சிரமங்களுக்கிடையில் உயர் கல்வி வரை படிக்க வைத்திருந்தார்.

எங்கிருந்தோ வந்த ஒரு காகம் அந்த வீட்டின் மதிற் சுவரில் வந்து அமர்ந்தது. இப்பொழுது அந்த முதிய வயது தந்தை தன் மகனிடம் கேட்டார்: “என்ன இது?” மகன் பதிலளித்தான்: “இது ஒரு காகம்.”

சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் தந்தை கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “இது ஒரு காகம்.”

சிறிது மணித்துளிகள் உருண்டோடின. மூன்றாவது முறையாக தந்தை கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “தந்தையே, இது ஒரு காகம் என்று இப்பொழுதுதானே சொன்னேன்.”
சில நிமிடங்கள் கரைந்தோடின. தந்தை தன் மகனிடம் நான்காவது முறையாகக் கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “தந்தையே, இது ஒரு காகம்!” இம்முறை மகனின் குரலில் சற்று எரிச்சல் தொனித்தது.

தந்தை விடவில்லை. சிறிது நேரங்கழித்து மீண்டும் வினவினார்: “என்ன இது?” இம்முறை மகனின் குரலில் சற்று கோபம் கொப்பளித்தது. மகன் சொன்னான்: “தந்தையே, நீங்கள் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியையே கேட்கின்றீர்கள். நான் அது ஒரு காகம் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதைக் கூட உங்களுக்குப் புரிய முடியவில்லையா?” அவனது முகத்தில் கோபக் கனல் தெறித்தோடியது.

தந்தை அமைதியாக இருந்தார். சிறிது நேரங்கழித்து அவர் தனது அறைக்குச் சென்றார். பழைய டைரி ஒன்றோடு திரும்பி வந்தார். டைரியின் ஒரு பக்கத்தைப் புரட்டினார். தனது மகனிடம் அதனைப் படிக்கச் சொன்னார். மகன் அதனைப் படிக்க ஆரம்பித்தான். கீழ்க்கண்ட வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன:

“இன்று என் சின்னக் குழந்தை என்னோடு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தது. ஒரு காகம் வந்தது. என் மகன் என்னிடம் 25  முறை இது என்ன என்று கேட்டான். நானும் சளைக்காமல் 25 முறை அவனுக்கு இது ஒரு காகம் என்று பதில் சொன்னேன். நான் எரிச்சல் படவுமில்லை; கோபப்படவுமில்லை. மாறாக, ஒன்றுமறியா அந்தக் குழந்தை மீது எனக்கிருந்த அன்பு கூடியது.”

இதனைப் படித்த மகன் வாயடைத்துப் போய் நின்றான். அந்தச் சிறிய குழந்தை இவன்தான். தன் முதிய வயது தந்தையைப் பரிவுடன் பார்த்தான். அவனது கண்களில் கண்ணீர்! மன்னிக்க வேண்டும் என்று அவனது கண்கள் கெஞ்சின. தந்தையோ தன் மகனை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.

குழந்தைகளைப் பெற்றோர் எப்படி பொறுமையாக, பேணிப் பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்தான் இது.

அக்டோபர் 1ம் தேதியை ‘உலக முதியோர் தினமாக’ இந்த உலகம் அனுசரிக்கிறது. முதியோர்கள் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும், அவர்களது கஷ்ட நஷ்டங்களை இந்த உலகுக்கு உணர்த்தவும், அவர்களை மகிழ்விக்கவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் முதியவர்கள் தற்பொழுது நிம்மதியாக இருக்கிறார்களா? தங்கள் பிள்ளைகளை அனைத்துக் கஷ்டங்களும், நஷ்டங்களும் பட்டு, படிக்க வைத்து ஆளாக்குகிரார்கள் பெற்றோர்கள். பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வந்து சம்பாதிக்க ஆரம்பிக்கின்றனர். திருமணம் முடிக்கின்றனர். குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இனி அந்தப் பிள்ளைகளின் சிந்தனை முழுவதும் தன் மனைவி, தன் குழந்தைகள், தன் குடும்பம், தன் வீடு, தன் பொருளாதாரம் என்ற அளவில் சுருங்கி விடுகின்றது. இந்தச் சுயநல மனப்பான்மை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.

இந்தச் சமயத்தில்தான் ஒருவனின் பெற்றோர் அவனுக்குச் சுமையாகி விடுகின்றனர். தன் குடும்பத்திற்கு ‘வேண்டாத’ ஜீவன்களாகின்றனர். என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றான் அவன். தேடுகின்றான் முதியோர் இல்லத்தை. மாதப் பணம் கட்டி அங்கு சேர்த்து விடுகிறான் தன் பெற்றோர்களை.

இத்தோடு பெற்றோர்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமை முடிந்து விட்டது என்று எண்ணுகிறான். மாதா மாதம் அவர்களுக்குப் பணம் அனுப்புவதையே பெற்றோருக்குத் தான் செய்யும் பெரும் கைம்மாறாக நினைக்கிறான்.

தான் வளர்த்து ஆளாக்கிய தன் பிள்ளை தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிடும் சோகத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டு, யாரோ முன் பின் தெரியாதவர்களோடு முதியோர் இல்லங்களில் தஞ்சமடைகின்றனர் இந்தப் பரிதாபப் பெற்றோர்கள். நகரங்களில் படித்த, நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் இதுதான் தற்போதைய நிலை!

தன் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாட வேண்டும் என்ற ஆசைக் கனவுகள் தகர்ந்து போய், முதியோர் இல்லங்களில் வாழும் சக மனிதர்களுடன் பழக முயற்சி செய்கின்றனர் இந்த முதிய வயது பெற்றோர்கள்.

பாசமில்லை; பந்தமில்லை. வாழ வேண்டிய நிர்பந்தம். அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனாலும் மனதில் ஒரு வெறுமை. இனம் புரியாத சோகம்.

மகன் தனக்குச் செய்தது துரோகமா, பாவமா என்ற புரியாத குழப்பம். எதிலும் ஒரு பிடிப்பின்மை. மொத்தத்தில் நடைபிணம். இது தான் இன்றைய முதியவர்களின் நிலை.

25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 5 முதியோர் இல்லங்கள்தான் இருந்தனவாம். ஆனால் இன்று சென்னையில் மட்டுமே 14 இல்லங்கள். பணவசதி உள்ளவர்கள் தங்குவதற்கோ 28 இல்லங்கள் இருக்கின்றனவாம்.

இந்த நிம்மதியற்ற சூழலில் வாழும் முதியோர்கள் காது கேளாமை, கண் மங்குதல், கண் புரை, மூட்டு வலி, கீழே விழுந்து எலும்பு முறிதல், சர்க்கரை வியாதி, சிறுநீர்க் கோளாறு, பாரிச வாதம், “அல் ஜைமா” எனச் சொல்லப்படும் மனநோய் எனப் பல்வேறு நோய்களினால் வேறு அவதிப்படுகின்றார்கள்.

வயது அதிகமானதினாலும், சொல்லாத சோகங்களை நெஞ்சில் போட்டு அமுக்கி வைத்திருப்பதாலும், நிறைய முதியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறுகின்றனர்.

இந்த நிலை நீடிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் இது முதியவர்களது சுய சார்புத்தன்மையைக் கூட்டும் என்றாலும், அவர்கள் வேண்டும் நிம்மதி இதில் கிடைக்கப் போவதில்லை.

முதியோருக்கென்று ஆலோசனை மையங்கள் திறக்க வேண்டுமாம். அங்கே முதியோர்களும், அவர்களின் பிள்ளைகளும் சந்தித்து, ஒருவருக்கொருவர் அளவளாவிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமாம்.

‘வேண்டாத’ ஜீவன்களாக, பெரிய சுமைகளாகக் கருதி வீட்டை விட்டு வெளியேற்றியவர்கள், அவ்வப்பொழுது வந்து சந்தித்தால் முதியவர்களுக்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் அவர்களது மனதில் ஆழப் பதிந்து விட்ட அந்தச் சோகக் காயம் ஆறாது.

சரி... அது இருக்கட்டும். இந்தப் பொல்லாத பரபரப்பான உலகில், ‘நவீன’ பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோர்களைச் சந்திக்க நேரம் கிடைக்குமா? தங்கள் மனைவி, குழந்தைகளோடு ‘அவுட்டிங்’ போக நேரமிருக்கும். தங்கள் மனைவி மக்களோடு ஒன்றாக டி.வி. பார்க்க நேரமிருக்கும். ஆனால் தங்கள் பெற்றோர்களைச் சந்திக்க இவர்களுக்கு நேரமிருக்காதே..!

அடுத்து ஓர் ஆலோசனை கூறப்படுகிறது. நோயுற்ற முதியோருக்கும், தனித்திருக்கும் முதியோருக்கும் பணி செய்யவும், உதவியாக இருக்கவும் ‘முதியோர் பணியாளர்களை’ (Care Givers) பயிற்சி கொடுத்து உருவாக்க வேண்டுமாம். இதனால் ஒரு சிலருக்கு வேலை கிடைக்கலாம். ஆனால் சொந்த மகன் செய்யாத பணிவிடையை எவனோ ஒருவன் செய்வதை எந்தப் பெற்ற மனம் சரி காணும்? அப்படியே இந்த ஏற்பாட்டைச் செய்தாலும் எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்? மாறாக, இஸ்லாம் சொல்லும் வழிமுறைகளை நடைமுறைபடுத்திக் காட்டினால்...

ஆம்! வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டிய இஸ்லாம் இந்தச் சமுதாயத்தின் நடைமுறைத் திட்டமானால் இப்பிரச்னை ஒழியும்.

அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக வந்துதித்த அண்ணலெம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் பெற்றோர்களை எப்படியெல்லாம் பேண வேண்டும், அவர்களுக்கு என்னென்ன கடமைகள் ஆற்ற வேண்டும் என்று அழகுறச் சொல்லித் தந்துள்ளார்கள்.

உம் அதிபதி விதித்துள்ளான். அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிகக் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும், பணிவுடனும், கருணையுடனும்  அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக! “என் இறைவனே! சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக! (அல் குர்ஆன் 17: 23, 24)

- என்று அல்லாஹ் கூறுவதை உற்று நோக்கினால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அல்லாஹ் சொல்லும் இந்தக் கட்டளைகளை நடைமுறைப்படுத்தினால் முதியோர் இல்லங்கள் தேவையில்லை. அல்லாஹ் மேலும் கூறுகின்றான்:

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள்... (அல் குர்ஆன் 4:36)

இணை வைப்பது என்பது மிகப் பெரிய பாவம். அதனைச் செய்யாதீர்கள் என்று கூறும் இடத்திலும் அல்லாஹ், அதற்கடுத்ததாகவே பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள் என்று கூறுகின்றான். இதற்கு இவ்வளவு முக்கியத்துவத்தை அல்லாஹ் அளிக்கின்றான்.

ஒருமுறை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் எந்தக் காரியம் மிகச் சிறந்தது?” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் பகர்ந்தார்கள்: “குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது!”

மீண்டும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கேட்டார்கள்: “அதற்குப் பிறகு மிகச் சிறந்த காரியம் எது?” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்: “பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது!” மீண்டும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “அதற்குப் பிறகு எது சிறந்த காரியம்?” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் (ஜிஹாத்) புரிவது!” (புகாரீ)

அல்லாஹ்விடம் மிகச் சிறந்த காரியங்களில் இரண்டாவதாக, ஜிஹாதிற்கு முன்பாக இருப்பது பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடப்பதுதான் என்பதே நபிகளாரின் கூற்று!

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பெரிய பாவங்களில் மிகப் பெரியதை நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?” (உடனே கூடியிருந்த தோழர்கள்) கூறினார்கள்: “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, ஒருவர் தனது பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருப்பது!” (அறிவிப்பாளர்: பிஷ்ர் (ரலி), புகாரீ (ஹதீஸின் ஒரு பகுதி))

பெற்றோர்களைப் பேணுவதில் இஸ்லாம் சொல்லும் அறிவுரைகளை இந்த உலகம் ஏற்குமானால், முதியோர் இல்லங்களை முழுவதுமாக மூடி விடலாம். மிக முக்கியமாக முதியவர்கள் மன நிம்மதியுடன் வாழலாம்.

விடியல் வெள்ளி  நவம்பர் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை

நன்றி M.S. அப்துல் ஹமீது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக